எப்படி இறைவேண்டல் செய்ய வேண்டும்? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம், வாரம் 27 ஆம் புதன்
I: யோனா: 4: 1-11
II: திபா 86: 3-4. 5-6. 9-10
III: லூக்: 11: 1-4
கடவுளோடு அன்புடன் உரையாடுவதே இறைவேண்டல். அதாவது, பிள்ளைகளாகிய நாம் நம் தந்தையாகிய கடவுளிடம் நம்பிக்கையுடன் பேசுவது இறைவேண்டல் ஆகும். கடவுளுக்கும் நமக்கும் இடையேயுள்ள ஆழமான அன்பையும் உறவையும் கூட இறைவேண்டல் எனக்கூறலாம். நம்முடைய இறைவேண்டல் பிள்ளைக்குரிய உரிமையை பிரதிபலிப்பதாய் அமைய வேண்டும். பிள்ளைக்குரிய உரிமை இருக்க வேண்டுமென்றால் நம் வாழ்வு கடவுளின் பிள்ளைகளைப் போல இருந்திருக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே பிள்ளைக்குரிய உரிமையோடு இறைவேண்டல் செய்ய முடியும். தந்தை எப்படியோ அதேபோலதான் பிள்ளைகளும் இருக்க வேண்டும். தந்தையாம் கடவுள் நல்லவராய் இருக்கின்றார். அதேபோல அவருடைய பிள்ளைகளாகிய நாமும் நல்ல வாழ்வை வாழ அழைக்கப்பட்டுள்ளோம். தந்தையாம் கடவுள் தூயவராய் இருக்கின்றார். அவரின் பிள்ளைகளாகிய நாமும் தூயவராய் வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.
தந்தையாம் கடவுள் அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் பொழிபவராக இருக்கின்றார். அவரின் பிள்ளைகளாகிய நாமும் அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் பிறருக்கு கொடுப்பவர்களாக இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் கடவுளின் பிள்ளைகள் என்று உரிமையோடு கூறமுடியும். அந்த உரிமையோடு நாம் கடவுளிடம் கேட்பதையெல்லாம் நமக்கு நிறைவாய்க் கொடுப்பார்.
இறைவேண்டல் என்பது மளிகை கடையில் பொருட்கள் வாங்க எழுதி வைத்திருக்கும் தாளைப் போல எழுதி வாசித்து ஒப்புக்கொடுக்கும் நிகழ்வல்ல ; மாறாக, நாம் கடவுளுக்குரிய பிள்ளைகளாக வாழ்ந்து ஒரு பிள்ளை தன் தந்தையிடம் கேட்கும் உரிமையோடு கேட்கும் ஒரு நிகழ்வுதான் இறைவேண்டல். ஆண்டவர் இயேசு நற்செய்தி மூலமாக தன் சீடர்களுக்கு இறைவேண்டல் செய்ய கற்றுக் கொடுக்கிறார். எப்படி இறைவேண்டல் செய்ய வேண்டுமென்ற முறையை இயேசு சீடர்களுக்கு கற்றுக் கொடுப்பது வழியாக நம்மையும் பொருள் நிறைந்த முறையில் இறைவேண்டல் செய்ய அழைப்பு விடுக்கிறார்.
நம்முடைய இறைவேண்டலில் முதலில் புகழ்ச்சி இருக்கவேண்டும். நம்மைப் படைத்துப் பராமரித்து வரும் தந்தையைப் போற்றவேண்டும். அவரின் தூய்மை தன்மையைக் கண்டு பெருமைப்பட வேண்டும். தந்தையாம் கடவுளைப் போல நாமும் தூய்மையாக வாழ நம்மையே முழுமையாக ஒப்புக் கொடுத்துப் புகழவேண்டும்.
இரண்டாவதாக, நம்முடைய இறைவேண்டலில் அன்றைய நாளுக்கான சமர்ப்பணம் இருக்க வேண்டும். வருங்காலத்தைப் பற்றி அதிகமாக சிந்தித்து நம்முடைய வாழ்வை இழக்காமல், அன்றாட உணவு நமக்கு முதலில் கிடைத்தால் போதும் என்று ஒவ்வொரு நாளும் கடவுளிடம் நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் கடவுளின் ஒப்பற்ற கொடை என்று ஒப்புக்கொடுத்து மகிழ்ந்திருக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுது ஒவ்வொரு நாளும் நம்மால் கடவுளுடைய அன்பையும் அரவணைப்பையும் சுவைக்க முடியும்.
மூன்றாவதாக பிறருடைய குற்றங்களை மன்னிக்கக் கூடிய நல்ல மனநிலை வேண்டும். நாம் பிறரின் குற்றங்களை மன்னித்தால் மட்டுமே கடவுளின் மன்னிப்பை முழுமையாகச் சுவைக்க முடியும். கடவுளின் மன்னிப்பை நாம் முழுமையாகச் சுவைக்க ஒரே வழி நாம் நம்முடைய பகைவரின் குற்றங்களையும் நமக்கு எதிராக தீங்கு செய்தவர்களின் குற்றங்களையும் நம் நினைவினின்று அழிப்பதேயாகும். பிறரை மன்னிக்க கூடிய நல்ல மனநிலையை வேண்டி இறைவேண்டல் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும்.
நான்காவதாக தீமைகளிலிருந்தும் சோதனைகளிடமிருந்தும் வெற்றி கொள்ள நாம் இறைவேண்டல் செய்ய வேண்டும். ஆண்டவர் இயேசு இறைமகனாக இருந்தபோதிலும் தன்னுடைய இறையாட்சி பணியைத் தொடங்குவதற்கு முன்பாக 40 நாட்கள் சோதிக்கப்பட்டார்.ஆனால் இந்த 40 நாட்களும் கடும் தவத்திலும் ஜெபத்திலும் நோன்பிலும் தன்னுடைய வாழ்வை கழித்தார். இறுதியில் அவர் சோதனைகளையும் தீமைகளையும் வென்று தன் இறையாட்சி பணியை முழுமையாகத் தொடங்கினார். அதேபோல அவர் கல்வாரியில் சிலுவை சுமந்து இறப்பதற்கு முன்பாக முழுமையாக இரத்த வியர்வை வியர்த்து சோதனைகளை வெல்ல இறைவேண்டல் செய்தார். இறுதியிலே சோதனைகளை வென்று மாட்சியுடன் உயிர்பெற்றெழுந்தார். இவ்வாறாக, நம்முடைய வாழ்விலே வாழ்வோடு ஒன்றித்த இறைவேண்டலை செய்ய முயற்சி செய்வோம். இப்படி அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் நம்முடைய சொல்லாலும் செயலாலும் இறைவேண்டல் செய்வோம். கடவுளை எல்லா நேரத்திலும் புகழக் கூடியவர்களாகவும் ஒவ்வொரு நாளுக்கும் தேவையான அன்றாட உணவை உரிமையோடு கேட்கக் கூடியவர்களாகவும் பிறரை மன்னிக்கக் கூடியவர்களாகவும் சோதனைகளை வெற்றி கொள்ள மனவலிமை பெற்றவர்களாகவும் வாழ ஒவ்வொரு நாளும் ஜெபிப்போம். அப்போது நிச்சயமாக நாம் மிகச் சிறந்த இறைவேண்டல் செய்யும் வீரர்களாக இயேசுவைப்போல் மாறமுடியும். இறைவேண்டல் செய்யத் தயாரா?
இறைவேண்டல் :
அன்பான இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் ஆழமாக இறைவேண்டல் செய்யக்கூடிய நல்ல மக்களாக எங்களை மாற்றுவீராக. இறைவேண்டல் செய்யும்பொழுது உமது பிள்ளைகளுக்குரிய பண்புகளோடு செய்ய அருளையும் ஆற்றலையும் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்