நன்மையைச் செய்து நன்மையைப் பெறுவோம்! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் - இரண்டாம் திங்கள்
I: தானி 9:4-11
II: திபா: 79:8,9,11,13
III: லூக் 6:36-38
ஒருமுறை நான் பேருந்தில் பயணம் செய்த போது நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பேருந்தில் ஏறினார். பேருந்து முழுதும் நிரம்பி இருந்தது. நான் இறங்க வேண்டிய தூரம் ஏறக்குறைய அரைமணி நேரத்தில் வந்துவிடும் என்பதால் நான் எழுந்து அப்பெண்ணுக்கு இடம் கொடுத்தேன். அப்போது அப்பெண்ணும் நன்றி கூறினார். எனக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது. சில நாட்களுக்குப் பின்பு நான் ஓரிடத்திற்கு பயணம் செய்ய வேண்டி இருந்தது. அன்று எனக்கு சற்று உடல் நிலை சரியில்லை. எப்படி பயணிக்கப் போகிறேன் என்ற தயக்கம். மேலும் விடுமுறை சமயமானதால் மக்கள் கூட்டமும் அதிகம். அச்சமயத்தில் யாரென்றே தெரியாத ஒருவர் என் நிலையைக் கவனித்து பேருந்தில் இடம் பிடித்துத் தந்தார். நானும் நன்றாக பயணம் செய்து என் இலக்கை அடைந்தேன். அன்று புரிந்து கொண்டேன் செய்த நற்செயல்கள் நமக்கே நன்மையாய் வந்து சேரும் என்று.
மேற்கூறிய இந்நிகழ்வை ஒரு அருட்சகோதரி என்னோடு பகிர்ந்து கொண்டார். மிகச் சாதாரணமான அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வு இது. ஆயினும் இந்நிகழ்வு நமக்கு மிகப்பெறும் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகம் இதையே நமக்குச் சொல்கிறது. தீர்ப்பிடாதீர்கள் அப்போது நீங்களும் தீர்ப்பிடப்பட மாட்டீர்கள்; இரக்கம் காட்டுங்கள் இரக்கம் பெறுவீர்கள்; கொடுங்கள் பெறுவீர்கள் ;மன்னியுங்கள் மன்னிக்கப்படுவீர்கள்; சுருங்கச் சொன்னால் அன்போடும் இரக்கத்தோடும் நன்மைகளை நாம் பிறருக்கு வழங்கும் போது அவை நம்மிடம் நிச்சயம் திரும்பி வரும். அதே நேரத்தில் தீமையை நாம் பிறருக்குக் கொடுத்தால் நமக்கு அவையும் திரும்பி வரும்.
நம்முடைய விண்ணகத் தந்தை நன்மை நிறைந்தவர். மத்தேயு நற்செய்தியாளர் தந்தையை நிறைவுள்ளவர் என்கிறார். நம்மையும் அவரைப் போல நிறைவுள்ளவர்களாய் வாழ அழைக்கிறார். லூக்கா நற்செய்தியாளர் தந்தையை இரக்கமுள்ளவர் என்றும் அவரைப் போல நம்மையும் இரக்கமுள்ளவர்களாக வாழவும் அழைக்கிறார்.ஆம் இரக்கத்தால் நாம் நிறைந்திருந்தால் நாமும் நிறைவுள்ளவர்களே. அந்த நிறைவிலிருந்து நாம் பிறருக்கு கொடுப்பவை நிறைவுள்ளதாய் இருக்கும். நன்மைகளாய் இருக்கும். அவை நம்மிடம் திரும்பி வரும். நமது நிறைவில் குறையிருக்காது. எனவே தந்தையைப்போல நிறைவானவர்களாய் இரக்கமுள்ளவர்களாய் நன்மையைக் கொடுப்போம். நன்மையையே பெறுவோம் என்பதில் சந்தேகமில்லை.
இறைவேண்டல்
இரக்கமுள்ள இறைவா! நீர் நன்மைகளால் நிறைந்தவர். உம்மைப்போல நாங்கள் நல்லவற்றையே பிறருக்கு கொடுப்போமாக. அதனால் உம்மிடமிருந்து நன்மையையே பெறுவோமாக. ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்