பண்பட்ட உள்ளத்தவரா நாம்? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

ஆண்டின் பொதுக்காலம் 3 ஆம் புதன் (24.01.2023) 
I:2 சாமு: 7: 4-17
II: திபா 89: 3-4. 26-27. 28-29
III: மாற்: 4: 1-20
நிலமானது நல்ல விளைச்சலைக் கொடுக்க வேண்டுமெனில் அந்த நிலத்தை நன்கு உழுது, தேவையற்ற களைகள்,கற்கள், முட்கள் என அனைத்தும் அகற்றப்பட்டு விதைக்கப்படுகின்ற விதைகளை ஏற்று பலனளிக்கும் அளவுக்கு அந்நிலத்தை நாம் தயார் செய்ய வேண்டும்.
பண்படுத்த வேண்டும். அவ்வாறாக நிலத்தைப் பண்படுத்தும் போது நிலத்தின் இறுக்கங்கள் நீங்கி வேரானது நிலத்தை ஊடுருவிச் சென்று வளர்ந்து பலன் தர ஏதுவாக அந்நிலம் மாறும். அதுபோல நமது உள்ளமும் பண்பட்டால் தான் நமது வாழ்வு பலனுள்ளதாய் மாறும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விதைப்பவர் உவமையையும் அதற்கான மிகத் தெளிவான விளக்த்தையும் நமக்குக் கூறுவதை நாம் வாசிக்கிறோம். விதை கடவுளின் வார்த்தை என்பதும், அவ்வார்த்தைகளைக் கேட்கின்றவர்களின் வேறுபட்ட மனநிலைகளும் மிக அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இறைவார்த்தையை அனுதினமும் கேட்கும் நாம் ,அவ்வார்த்தைகள் நம் உள்ளத்தை ஊடுருவத் தடையாய் இருப்பவை எவை என கண்டறிந்து அவற்றை நம்மிடமிருந்து அப்புறப்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம்.

1)வார்த்தையைக் கேட்க ஆர்வமில்லாமை. பள்ளிப் பாடத்திட்டத்தில் நமக்கு மொழிப்பாடம், அறிவியல்,கணிதம்,
சமூக அறிவியல் பாடங்கள் உள்ளன. இவை அனைத்தையும் நாம் ஒரே ஆர்வத்தோடு கற்பதில்லை. அதிக ஆர்வமுள்ள பாடங்களை நன்குகற்கிறோம்.  நல்ல மதிப்பெண் பெறுகிறோம்.குறைந்த ஆர்வமுள்ள பாடங்களை ஈடுபாட்டோடு கற்காததால் குறைவான மதிப்பெண்களே பெறுகிறோம். இதைப்போலவே பலவற்றுக்கு நாம் கொடுக்கும் ஈடுபாட்டை, இறைவார்த்தைக்குக் கொடுப்பதில்லை. ஆர்வம் காட்டுவதில்லை. ஆகவேதான் இறைவார்த்தைக்கு செவிமடுக்க இயலாத நிலையில் வழியோரம் வீசப்பட்ட விதைகளாய் நம் வாழ்வில் வார்த்தை பலனளிப்பதில்லை. இதன் மூலம் இறைவார்த்தையை வாசிக்கவும் தியானிக்கவும் நம்மிடமுள்ள ஆர்வத்தை நாம் ஆழப்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம்.

2) தொடர் முயற்சி இல்லாமை. ஆர்வத்தை மட்டும் வளர்த்தால் போதாது.தொடர் முயற்சி வேண்டும்.பலசயங்களில் ஏதோ ஒரு ஆர்வத்தோடு இறைவார்த்தையை வாசிக்க வேண்டும்,அதன் படி வாழ வேண்டும் என்ற முடிவு எடுத்துவிடுகிறோம். ஆனால் இடை நிறுத்தி விடுகிறோம். அல்லது ஏனோதானோ என்ற மனநிலையில் நேரம் கிடைக்கும் போது வாசிப்பதும் மற்ற நேரங்களில் உதாசினப்படுத்துவமாக இருந்து விடுகிறோம். இம்மனநிலை நம்மை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுவதில்லை. வார்த்தை ஆழமாக மனதில் பதிலதில்லை. இவையே பாறைநிலத்தில் வீழ்ந்த விதைகளைப் போல பலனின்றி கருகிவிடுகின்றன. எனவே இம்மெத்தனப்போக்கை நாம் விடாமுயற்சியால் வெல்ல வேண்டுமென இயேசு அழைக்கிறார்.

3)அனைத்தையும் மனதிற்குள் போட்டுக் குழப்பும் நிலை.
மனிதன் மனம் ஒரு குறங்கு என்பார்கள்.கடந்தால கவலைகள் ஒரு புறம்,எதிர்கால பயம் மறுபுறம்,இவைகளுக்கிடையில் நிகழ்கால வேலைப் பளு இவற்றால் உண்டாகும் மன அழுத்தம், இவற்றிலிருந்து வெளிவர நாம் தேடுவது உலகமயமான கேளிக்கைகளும் கொண்டாட்டங்களுமே. ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குத் தாவிக் கொண்டே இருக்கும் நமது மனது கேட்ட இறைவார்ததையை நினைவில் கூட வைத்துக்கொள்ள இயலாத நிலை. முட்செடிகளுக்கு நடுவே விழுந்த விதையாய் மாயமாகிறது நம் மனதிலே நுழைந்த வார்த்தைகள்.இந்நிலையிலிருந்து நாம் வெளிவர வேண்டும் என்கிறார் இயேசு.

ஆம் இவ்வாறு ஆர்வமின்மை,தொடர் முயற்சியின்மை, அனைத்தையும் மனதிற்குள் போட்டுக்கொண்டு குழம்பும் நிலை போன்றவற்றை களைந்து நம் உள்ளத்தைப் பண்படுத்தும் போது இறைவார்த்தை வளர்ந்து பலன் தரக்கூடிய உள்ளமாய் நல்ல நிலமாய் நமதுள்ளம் மாறும். நம் வாழ்வு பயன் தரும். அதற்கான அருளை நாம் வேண்டுவோம்.

 இறைவேண்டல் 

வார்த்தையாம் இறைவா! உம்மை எம் உள்ளத்தில் ஏற்று பலனளிக்கும் வாழ்வு வாழத் தடையாய் இருக்கும் எம் ஆர்வமின்மை,முயற்சியின்மை மற்றும் மனக்குழப்பங்களைக் களைந்து பண்பட்ட உள்ளத்தவராய் வாழ்ந்து பலன் தர உமதருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்