இயேசுவாக மாறத் தயாரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

ஆண்டின் பெதுக்காலம் வாரம் 6 சனி
I: எபி: 11:1-7
II: திபா:  145:2-3, 4-5, 10-11
III: மாற்: 9: 2-13

பொதுவாக நாம் ஒருவரை நமது முன்மாதிரியாகத் தேர்ந்தெடுத்துவிட்டால் அவரைப் போல மாற வேண்டும் என விரும்புவது வழக்கம். ஏன் இன்று நாம் காணும் இளைஞர்கள் சினிமா மற்றும் விளையாட்டுத் துறைகளில் தங்களுக்குப்பிடித்தவர்களை தேர்ந்தெடுத்துக்கொண்டு, அவர்களைப் போலவே தலைமுடி வெட்டுதல், ஆடை ஆணிதல், பேசுதல், நடந்துகொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதை நம் கண்கூடாகக் காண்கிறோம். ஆனால் இயேசுவை நம் தலைவர் என்று கூறிக்கொள்ளும் நாம் அவரைப் போல மாற எத்தனை முறை முயற்சி செய்திருக்கிறோம் என சிந்தித்திருக்கிறோமா?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் உருமாற்றத்தை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.இயேசு தாபோர் மலையில் மூன்று சீடர்களின் முன் உருமாற்றம் அடைந்தார். அவருடைய ஆடைகள் பிரகாசமாய் ஒளிர்ந்தன. அவர் ஆண்டவருக்கு உகந்தவர்களாய் வாழ்ந்த மோசேயோடும் எலியாவோடும் உரையாடியதை சுடர்கள் கண்டு அச்சமுற்றனர் என நாம் வாசிக்கின்றோம்.
அத்தோடு இயேசுவுக்கு செவிசாயுங்கள் என்ற விண்ணகத் தந்தையின் வார்த்தைகளும் நமக்குத் தரப்படுகின்றன.  

இந்நற்செய்தி நமக்கு மூன்று  செய்திகளைத் தருகின்றன.அவை 1.நமது வாழ்வும் இயேசுவின் வாழ்வைப்போல பிரகாசமாகவும் தூய்மையானதாகவும் மாற வேண்டும் 
2. கடவுளுக்கு உகந்த, மீட்புத் திட்டத்தில்  அவரோடு உடனுழைத்த மோசேயைப் போல, எலியாவைப் போல நாமும் உடனுழைப்பாளிகளாக மாற வேண்டும். 
3. இறைமகன் இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிமடுத்து தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாக நாம் மாற வேண்டும்.

இந்த மூன்று செய்திகளையும் உள்வாங்கி நம்மையே நாம் மாற்ற முயலுகின்ற போது நாம் இயேசுவாக மாறுகிறோம்.

 இறைவேண்டல் 
அன்பு இயேசுவே! நாங்கள்  உம்மைப்போல மாறத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்