இறைத்திட்டம் நம்மிலே நிறைவேறட்டும்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

 திருவருகைக் காலம் மூன்றாம்  திங்கள்
I: ஏரே: 23: 5-8
II:திபா 72: 1-2. 12-13. 18-19
III: மத்:1: 18-24

கிறிஸ்துமஸ் விழாவை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். திருவருகைக் காலத்தின் மூன்றாம் வாரத்தில் மகிழ்ச்சி என்ற சிந்தனை நமக்குத் தரப்பட்டுள்ளது நாம் அறிந்ததே. அந்த மகிழ்ச்சி நம்மிலே உருவாக நாம் செய்ய வேண்டிய மிக முக்கிய காரியங்களில் ஒன்று "இறைத்திட்டம் நம்மிலே நிறைவேற அனுமதித்தல்". இறைதிட்டத்தை ஏற்றுக்கொள்ளுதல் என்பது மிக எளிதான காரியமல்ல. இறைதிட்டத்தை நிறைவேற்ற நாம் உழைக்கும் போது பல தடங்கல்கள் ஏற்படலாம். அதே வேளையில் இறைதிட்டத்தை நிறைவேற்றுதல் என்பது சாத்தியமற்ற செயலும் அல்ல. நிச்சயமாக நிறைவேற்ற முடியும். இறைவனோடு ஒன்றித்து அவர் குரலைக் கேட்டு நடக்கும் போது இறைதிருஉளம் நமக்குத் தெளிவாக வெளிப்படுத்தப்படும்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு புனித யோசேப்பு ஆவார். இறைதிட்டத்திற்கு தன்னையே பணித்தார். ஆனால் எளிதாக அல்ல. பல சோதனைகளைக் கடந்த பின்னரே. ஒரு சராசரி ஆணாக தனக்கு வரப்போகும் மனைவி தூய்மையானவளாக களங்கமற்றவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை யோசேப்புவும் கொண்டிருந்ததில் தவறில்லை. எனவே மரியாவை மறைவாக விலக்கி விடத் திட்டமிட்டார். இச்செயலை செய்ய அவர் மனதில் எவ்வளவு நெருடல்களைக் கடந்திருப்பார்.

அதேபோல அவருக்கான இறைதிருஉளம் இயேசுவுக்கு வளர்ப்புத் தந்தையாக இருப்பது.  அவருக்கென்று ஒரு வாரிசு வேண்டும் என்ற ஆசையை அவர் மறக்க வேண்டிய கட்டாயமும் அங்கே எழுந்தது.இவ்வாறான நெருக்கடியான சூழலில் கூட அவர் நேர்மையாளராய் இருந்ததால் கடவுளின் குரலை தூதர் வழியாக தூக்கத்தில் கூட அவரால் உணரமுடிந்தது. துணிச்சலோடு இறை திருஉளத்திற்குப் பணிந்தார். அவர் வாழ்வில் பலவாறு துன்பப்பட்டாலும் இறைமாட்சி அவர்மேல் ஒளிர்ந்தது. 

ஆம்.  அன்புக்குரியவர்களே கடவுள் நமக்கென்று வகுத்த திட்டத்தை இன்னல்களும் இடர்பாடுகளும் வந்தபோதிலும் நாம் நிறைவேற்ற முயலும் போது மகிழ்ச்சியை நம்மாலும் உணரமுடியும். மேலும்  நாம் இறைவனோடு ஒன்றிருக்க முயலவேண்டும். அப்போது நாம் தடுமாறும் வேளையில் கடவுள் அவருடைய வார்த்தைகளாலோ அல்லது மனிதர்கள் மூலமோ நிகழ்வுகள் மூலமோ நாம் என்ன செய்ய வேண்டுமென்ற வழிமுறையை நமக்கு நிச்சயம் தருவார்.  இறைதிட்டம் நம்மிலே நிறைவேற அனுமதிக்கத் தயாரா?

இறைவேண்டல்
அன்பு இறைவா!  உமது திருஉளம் எம் வாழ்விலே நிறைவேற எம்மையே நாங்கள் புனித யோசேப்புவைப் போல உம்மிடம் ஒப்படைக்க வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்