புனித திருமுழுக்கு யோவானின் சாட்சிய வாழ்வு | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 21 செவ்வாய் 
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு
I: ஏரே: 1: 17-19
II: திபா: 71: 1-2. 3-4ய. 5-6. 15,17
III: மாற்: 6: 17-29

இந்த உலகம் இறைவன் படைத்த உன்னதமான தூய இடம். இந்த இடத்தில் இறைவனின் பண்புகள் உயிர் பெற நாம் ஒவ்வொருவரும் சான்று பகரக்கூடிய  வாழ்வு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இதைத்தான் இன்றைய விழா நாயகர் புனித திருமுழுக்கு யோவான் தன்னுடைய சான்று பகரக்கூடிய வாழ்வின் வழியாக நமக்கு முன்மாதிரியாக இருக்கின்றார்.

நான் மதுரை கருமாத்தூரில் களப்பணி செய்து கொண்டிருந்த பொழுது ஒரு ஊருக்கு அனுபவத்திற்காகச் சென்றிருந்தேன். அந்த ஊர்இப்பொழுதுதான் விழிப்புணர்வோடு வளர்ச்சியை நோக்கி வளர்ந்து வருகின்றது.அந்த ஊரிலே நன்றாகப் படித்த இளைஞர் இருந்தார். நான் அங்கு பணிக்கு செல்லும் போதெல்லாம் அருட்சகோதரராகிய எனக்கு முழுவதுமான ஒத்துழைப்பு கொடுத்தார். எல்லா சிறுவர் சிறுமியர்களும் இளையோர் இளம்பெண்களும் பயனடையும் வகையில் அனைவரையும் உற்சாகப்படுத்தினார். நேர்மையோடும் உண்மையோடும் வாழ்ந்து வந்தார். அவர் படித்துவிட்டு அரசு பணிக்காக தன்னை தகுதிப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் நன்றாக படிக்கக் கூடியவர். அவருக்கு அரசு வேலைக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வேலையைப் பெற படிப்பு தகுதியைத் தாண்டி லஞ்சம் இவரிடம் கேட்கப்பட்டது. அவர் நினைத்திருந்தால் லஞ்சம் கொடுத்து மிகப்பெரிய அரசு வேலையை பெற்றிருக்கலாம். ஆனால் நீதியும் உண்மையும் நேர்மையும்  உள்ளவராக லஞ்சம் கொடுத்து வாங்கும் வேலை தேவை இல்லை என்று மன உறுதியோடு இருந்தார். அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை திட்டினாலும் இப்படிப்பட்ட அநீதி நிறைந்த செயல்பாட்டுக்கு என்னை உட்படுத்திக் கொள்ள மாட்டேன். லஞ்சம் கொடுத்து குறுக்கு வழியில் நான் வேலை வாங்கினால் எனக்கு பின்னால் வரும் நம் ஊர் இளந்தலைமுறையினருக்கு தவறான வழியை காட்டி விடுவேன். அதன் பிறகு அவர்கள் படித்து முன்னேற வேண்டும் என்ற மனநிலை விட்டுவிட்டு குறுக்கு வழியில் முன்னேறலாம் என்ற மனநிலையை பெற்றுவிடுவார். இப்படிப்பட்ட வாழ்வை நான் வாழ விரும்பவில்லை என்று மன உறுதியோடு இருந்தார். இறுதிவரை மன உறுதியோடு பல அரசு வேலைக்கான தேர்வினை எழுதி இப்பொழுது மிகப்பெரிய அரசு வேலையில் இருக்கின்றார். அந்த இளைஞனின் உண்மையும் நீதியும் நேர்மையும் எனக்கும் அந்த ஊர் இளைஞர்களுக்கும் பாடமாக இருந்தன.இதுதான் உண்மையான சான்று பகர கூடிய வாழ்வு.

புனித திருமுழுக்கு யோவான் பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்களையும் புதிய ஏற்பாட்டு இறைவாக்கினர்களாகிய சீடர்களையும் இணைக்க கூடியவராக இருக்கின்றார். "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்ற இந்திய கருத்தியல் கூறுவதுபோல திருமுழுக்கு யோவான் அரசரானாலும் ஆண்டியானாலும் தவறு செய்பவர்களை குற்றமென்று மன உறுதியோடு சுட்டிக்காட்டினார். அரசனுக்கு எதிராக பேசினால் தனது உயிர் போய்விடுமே என்று ஒருபோதும் அவர் நினைக்காது ஏரோது அரசரின் தவறான வாழ்க்கை முறையை துணிவோடு சுட்டிக்காட்டி மனம் மாற அழைப்புவிடுத்தார். இதன் வழியாக உண்மையும் நீதியும் நேர்மையும் இம்மண்ணுலகில் இறையாட்சி பூக்களாய் மலர அழைப்புவிடுத்தார். பொய்மையில் வாழ்ந்த ஏரோது, ஏரோதியாள் மற்றும் பரிசேயர்கள் போன்றோருக்கு திருமுழுக்கு யோவானின் இறைவாக்குகள் ஒருவகையான சலனத்தை ஏற்படுத்தியது.  இதன் விளைவாக அவரின்  உயிரையும் இழக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இருந்தாலும் இறைவனின் இறையாட்சி மதிப்பீட்டிற்காக இறுதிவரை உண்மையோடும் நேர்மையோடும் நீதியோடும் இறையச்சத்தோடும் வாழ்ந்து வந்தார். இதுதான் உண்மையான சான்று பகரக்கூடிய வாழ்வு. திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவர்களாகிய நாம் இப்படிப்பட்ட சான்று பகர கூடிய வாழ்வை வாழும் பொழுது தான் நாம் வாழும் இந்த கிறிஸ்தவ வாழ்வுக்கு முழு அர்த்தத்தை கொடுக்க முடியும்.

புனித திருமுழுக்கு யோவானின் பாடுகளை தியானித்து அவரின் சாட்சிய மதிப்பீடுகளை வாழ்வாக்க இன்றைய நாளின்  விழா நமக்கு அழைப்பு விடுப்பதாக இருக்கின்றது. நம்முடைய அன்றாட வாழ்வை சற்று தியானித்து பார்ப்போம். உண்மையாகவே புனித திருமுழுக்கு யோவானின் சான்று பகரக்கூடிய வாழ்வு நம்மில் இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்ப்போம். புனித திருமுழுக்கு யோவானிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய கிறிஸ்தவ வாழ்வியல் பாடம் என்ன?

முதலாவதாக, துன்பத்திலும் துணிவோடு சான்று பகர்தல். ஆண்டவர் இயேசு சீடர்களை பார்த்து "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" எனக் கூறியுள்ளார். இது எதை சுட்டி காட்டுகிறது என்றால் இயேசுவைப் பின்பற்றுவது என்பது உண்மைக்கும் நீதிக்கும் நேர்மைக்கும் சான்று பகர்வது. அவ்வாறு சான்று பகரும் பொழுது நம் வாழ்வில் பல துன்பங்களை சந்திக்க நேரிடும். அவற்றை எல்லாம் இறை மகிமைக்காக என்று மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளும் பொழுது நிச்சயமாக நாம் சான்றுகள் கூடிய வாழ்வு வாழ முடியும். இதைத்தான் திருமுழுக்கு யோவான் நமக்கு முன் வாழ்ந்து காட்டி  முன்மாதிரியான ஒரு புனிதராக இருக்கின்றார். எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் சுயநலம் மற்றும் மாயக் கவர்ச்சிகள்  மிகுந்த இந்த உலகத்தில் உண்மையோடும் நேர்மையோடும் நீதியோடும் வாழும் பொழுது நாம் புறக்கணிக்கப்படுவோம்; துன்பப்படுத்தப்படுவோம். ஆனால் அந்தத் துன்பத்தின் மத்தியிலும் இறுதிவரை நிலைத்திருக்கும் பொழுது நம் வாழ்விலே நிறைவை காணமுடியும். இதுதான் உண்மையான சான்று பகரக்கூடிய வாழ்வு .இப்படிப்பட்ட வாழ்வை வாழத்தான் இன்றைய விழா நாயகர் திருமுழுக்கு யோவான் நமக்கு வழிகாட்டியுள்ளார்.

இரண்டாவதாக, திருமுழுக்கு யோவானின் தாழ்ச்சி நமக்கு முன்னுதாரணமாக இருக்கின்றது. அவர் எந்த அளவுக்கு தவறு செய்பவர்களுக்கு முன்னால் மிகத் துணிவோடு இறையாட்சி மதிப்பீட்டிற்கு சான்று பகர்ந்தாரோ, அதற்கு சமமாக தாழ்ச்சி  உள்ளவராகவும் வாழ்ந்தார். திருமுழுக்கு யோவானின் போதனைகள் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தது. அவரின் வார்த்தையை கேட்டு அவர் காலத்து மக்கள் மனந்திரும்ப கூடிய நிலைக்கு வருமளவுக்கு ஆணித்தனமாக இருந்தது. ஏன் பரிசேயரும் கூட திருமுழுக்குப் பெற வருவதை கண்டு அவர் எச்சரிக்கிறார். ஏனெனில் பரிசேயர்கள் திருமுழுக்கு பெற வந்தது அவர்கள் நல்லவர்கள் என காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே. எனவே அனைவரும் திருமுழுக்கு யோவானை மெசியா என கருதினர். ஆனால் திருமுழுக்கு யோவான் தாழ்ச்சி உள்ளவராக இயேசு தான் இந்த உலகை மீட்க வந்தவர் என்று சுட்டிக்காட்டி அவரது வழியை ஆயத்தப்படுத்தினார். இதுதான் உண்மையான சாட்சிய வாழ்வு. நம்முடைய அன்றாட வாழ்விலும் இயேசு எனும் மீட்பரை தாழ்ச்சியான உள்ளத்தோடு ஏற்றுக்கொண்டு அவரின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகரும் பொழுது நம் வாழ்வு நிறைவுள்ள வாழ்வாக மாறும். இப்படிப்பட்ட வாழ்வை வாழத்தான் இன்றைய புனிதர் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

மூன்றாவதாக, திருமுழுக்கு யோவானை போல இறையாற்றல் உள்ளவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர் தனது இறைவாக்கு பணியில் ஆற்றல் உள்ளவராகத் திகழ  இறைவன் அவரை ஊக்கமூட்டியுள்ளார் . எரேமியா இறைவாக்கினர் கடவுளுடைய வார்த்தைகளை ஏற்றுக் கொண்டதால் இறையாற்றல் முழுவதுமாக அவரோடு இருந்தது. திருமுழுக்கு யோவானும் தான் இந்த உலகத்திற்கு வந்தேன் என்று தன்னுடைய அழைப்பில் தெளிவு இருந்ததால் இறையச்சத்தோடு வாழ்ந்தார். இதன் வழியாக இறை ஆற்றலை பெற்றார். இந்த இறை ஆற்றல் தான் அவரை ஒரு மிகச்சிறந்த இறைவாக்கினராகவும்  துணி உள்ளவராகவும் உண்மைக்கும் நேர்மைக்கும் நீதிக்கும் சான்று பகரக் கூடியவராகவும் உருமாற முடிந்தது. எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் இறைவனின் திட்டத்தை அறிந்துக்கொள்ள இறைவேண்டலில் நிலைத்திருப்போம். அறிந்துகொண்ட இறைவனின் திட்டத்தை இம்மண்ணுலகில் வாழ்வாக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இறையச்சத்தோடும் இறை ஆற்றலோடும்  வாழ்வதே ஒரு சான்று பெறக்கூடிய வாழ்வு. இப்படிப்பட்ட வாழ்வை வாழத்தான் இன்றைய நாளின் புனித திருமுழுக்கு யோவான்நமக்கு வழிகாட்டுகிறார். இவ்வாறாக அவர் நற்பண்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே புனித வாழ்வு வாழ்ந்த புனிதர்கள் அனைவரும் நமக்கு நல்ல  கிறிஸ்தவ மதிப்பீடுகளை கொடுத்துள்ளனர். அந்த மதிப்பீடுகளை அறிந்து அனுபவித்து வாழ்வாக்கும் பொழுது   நிச்சயமாக நம் வாழ்விலே முன்னேற்றம் காணமுடியும். நாம் வாழக்கூடிய வாழ்விலே  நிறைவை காணமுடியும். நிறைவுள்ள மக்களாக வாழ்ந்து திருமுழுக்கு யோவானை போல இறைவனுக்கு சான்று பகர தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல் 
ஆற்றலும் வலிமையுமான இறைவா ! இந்த  அருமையான நாளை கொடுத்ததற்காக நன்றி செலுத்துகிறோம். இன்றைய நாள் புனித திருமுழுக்கு யோவானை எங்களுக்கு முன்னுதாரணமாக கொடுத்ததற்காக நன்றி செலுத்துகின்றோம். எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் திருமுழுக்கு யோவானை போல உண்மைக்கும் நேர்மைக்கும் நீதிக்கும் சான்று பகர தேவையான மன உறுதியை தாரும். நாங்கள் தாழ்ச்சி உள்ளவர்களாக வாழ்ந்து இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர அருளைத் தாரும்.  சான்று பகர கூடிய வாழ்வு வாழ இறைவேண்டலில் எந்நாளும்  நிலைத்திருந்து இறை ஆற்றலோடு செயல்பட நல்ல மனப்பக்குவத்தை தாரும். இவை அனைத்தையும் பெற்றுக்கொள்ளக்கூடிய ஞானத்தையும் விவேகத்தையும் தாரும்.இதன் வழியாக மக்கள் அனைவரும் பலன் பெற்று உம்மிடம் திரும்பிவர எங்களை உம் கருவியாகப் பயன்படுத்தும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்