இறைவனோடு இணைந்து ஒளிவீசத் தயாரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | DailyReflection
பொதுக்காலத்தின் 17 ஆம் புதன்
I: விப: 34: 29-35
II: திபா 99: 5. 6. 7. 9
III: மத்: 13: 44-46
ஒரு குடும்பத்தில் தாய் தந்தைக்கு ஒரு மகனும் மகளும் இருந்தனர். அப்பா, அம்மா மற்றும் மகன் மூவருமே பக்தி மிக்கவர்கள். ஆனால் மகளோ மற்றவர்களைப் போல பக்தியில்லை. ஏதோ கடமைக்காக கோவிலுக்குச் செல்வார். வீட்டிலே யாராவது கொஞ்சம் அதிகமாக செபம் செய்து விட்டால் கேலி செய்வது அவள் வழக்கம். இந்நிலையில் அப்பங்கில் மக்களுக்கு இரண்டு நாள் தியானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீட்டிலுள்ள அனைவரும் கண்டிப்பாகத் தியானம் செய்ய வேண்டும் என்ற தந்தையின் கட்டளையை மீற முடியாமல் வேண்டா வெறுப்பாக தியானத்தில் கலந்து கொண்டாள் அம்மகள். தியானம் தொடங்கிய நேரத்திலிருந்து ஈடுபாடு எதுவும் காட்டாமல் எரிச்சலுடன் அமர்ந்திருந்த அவர் சிறிது நேரத்தில் தன்னை அறியாமலேயே செபிக்கவும் கடவுளோடு பேசவும் தொடங்கினார். அவருடைய மனதில் ஒரு புத்துணர்வு,ஒரு வித அமைதியை உணரத் தொடங்கினார். வீட்டிற்கு வந்ததும் தன்னுடைய அனுபவங்களைச் சொன்னபோது அவருடைய தாயார் " எப்பொழுதும் நீ எங்களைப் பார்த்து கிண்டலாகச் சொல்வாயே ஒளிவட்டம் தெரிகிறதென்று. நாங்கள் உண்மையாகவே சொல்கிறோம் உன்னுடைய முகம் அருள் நிறைந்ததாய் இருக்கிறது. செபிக்கும் போது முகம் மட்டுமல்ல நமது வாழ்க்கையும் அருள் நிறைந்ததாய் ஒளி நிறைந்ததாய் இருக்கும். " என்று கூறினார்.
அன்புக்குரியவர்களே இறைவனோடு கொண்டுள்ள உறவும் அவரோடு நமக்குள்ள ஆர்வமும் நமது வாழ்வை ஒளி நிறைந்ததாக மாற்றுகிறது என்ற உண்மையை நாம் உணர வேண்டும் என்றே இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. இறைவேண்டல் , இறைவார்த்தையைத் தியானித்தல் போன்றவை இறைவனோடு நாம் உறவு கொள்ள மிகச் சிறந்த வழிகளாகும். இவற்றை செய்தால் நமக்கு வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் வராது, நாம் மகிழ்ச்சியுடன் இருப்போம் என்று அர்த்தமல்ல. ஆனால் நாம் எந்த நேரத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும், துன்பங்களையும் சவால்களையும் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற தெளிவான ஞானம் நமக்குக் கிடைக்கும். ஏனெனில் நம் மனச்சான்று அல்லது உள்ளுணர்வு மூலம் கடவுள் நம்மோடு பேசி நம்மை வழிநடத்துவார். இதுவல்லவா ஒளி நிறைந்த வாழ்வு!
இன்றைய முதல் வாசகத்தில் மோசேயின் முகம் ஒளியால் மிளிர்ந்ததென்றும் மக்கள் அவரோடு பேச அஞ்சினார்கள் என்றும் வாசிக்கிறோம். ஏன்? அவர் கடவுளின் குரலைக் கேட்டு கீழ்படிந்து வாழ்ந்தார். அவருக்கு பிரச்சினைகள் வரவில்லையா? வந்தன. பல பிரச்சினைகள் வந்தன. பல முறை பொறுமையை இழந்தார். நம்பிக்கையை இழந்தார். இஸ்ரயேல் மக்களே அவருக்கு பல இடறல்கள் தந்தனர். அப்பொழுதெல்லாம் அவர் கடவுளிடம் சென்று முறையிட்டார். அவர் காட்டிய வழியில் நடந்தார். எனவே தான் அவர் முகம் பிரகாசித்தது.
இன்றைய நற்செய்தியில் புதையல் மற்றும் விலையுயர்ந்த முத்து உவமைகளைப் பற்றி இயேசு கூறுகிறார். அப்புதையல் மற்றும் விலையுயர்ந்த முத்து ஆகியவற்றின் மதிப்பை உணர்ந்தவர்கள் தங்களுக்குள்ள மற்ற எல்லாவற்றையும் விற்றுவிட்டு அவற்றை சொந்தமாக்கிக் கொள்ள விரும்பினர். அவற்றைக் காணும் போது அவர்கள் மகிழ்ந்தனர். அவ்வாறே விலைமதிப்பில்லா கடவுளின் அன்பையும் அவருடைய உடனிருப்பையும் நம் வாழ்வில் உணர்ந்தோமெனில் நமது வாழ்வும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். நம் வாழ்வுப் பாதை ஒளி நிறைந்ததாக இருக்கும்.
எனவே
இன்பத்திலும், துன்பத்திலும் ,எல்லா வேளையிலும்,மோசேயைப் போல, புதையலையும் விலையுயர்ந்த முத்தையும் தேடுபவர்களைப் போல கடவுளைத் தேடி அவரோடு இணைந்து இருந்து அவர் சொல்கேட்டு நடக்கும் போது நம் வாழ்வு பிரகாசிக்கும் என்பதை உணர்ந்து வாழ்வோம். இறைவன் நம்மை வழிநடத்துவார்.
இறைவேண்டல்
விலைமதிப்பில்லா அன்பால் எம்முடன் வாழும் இறைவா உம்மோடு இணைந்து வாழ்ந்து எம் வாழ்வை ஒளிமயமாக மாற்ற வரம் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்