பாடம் கற்ற ஆசிரியர்... | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil

அறுபது வயதுள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு, இரண்டு மாதங்களாக தனிமைப்படுத்தப்பட்டார். அவர் அருகில் யாரும் செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது தனிமை கொரோனா நோயைவிட மிகவும் வேதனை நிறைந்ததாக இருந்தது.

இந்தத் தொற்று நோய், யாருக்கு? எப்போது? எப்படி ? வரும் என்று, இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. இதைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு முழு ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்தி இருந்தது. மக்கள் நான்கு மாதங்களாக வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருமாதம் தனிமைப்படுத்தப்பட்டபின் பூரண சுகம் பெற்று வீடு திரும்பினார். தனது குடும்பப்பணிகளை மீண்டும் செயல்படுத்தத் தொடங்கினார்.

ஓய்வுபெற்ற ஆசிரியர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்த ஊரடங்கு நேரத்தில், ஆசிரியரின் நண்பரிடமிருந்து, புதிய வீடு ஒன்று விற்பனைக்கு உள்ளது. வந்து பார்க்கவும் என்ற செய்தி கிடைத்தது. உடனே தனது மனைவி, ஏழு வயது நிரம்பிய பேரனுடன் வீட்டைப் பார்ப்பதற்காகக் காரில் புறப்பட்டார்.

போகும் வழியில், காவல் துறையினர் காரை நிறுத்தினர். "கொரோனா ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில், எதற்காக காரில் வெளியே செல்கின்றீர்கள்? முக்கியம் வாய்ந்த வேலை என்ன இருக்கிறது?" என்று ஆசிரியரைக் கேட்டார்கள். ஆசிரியர், "எனது நண்பர் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பார்ப்பதற்காகச் செல்கிறேன்" என்று கூறினார். அவரைப் காரில் அமர்ந்திருந்த சிறுவனிடம் காவலர்கள், "இப்போது எங்கே போகிறீர்கள்?" என்று கேட்க, சிறுவன் கபடமற்ற உள்ளத்தோடு, "நாங்கள் புது வீடு வாங்குவதற்குச் செல்கிறோம்" என்று அமைதியாகக் கூறினான்.

சற்றும் எதிர்பாராத சிறுவனின் பதிலைக் கேட்டவுடன் ஆசிரியர் குற்ற உணர்வோடு காவலர்கள்முன் நாணி வெட்கமடைந்தார். காவலர்கள் ஆசிரியரைப் பார்த்து, உண்மை பேசுகின்ற நல்ல குழந்தையை வளர்த்து வருகின்ற நீங்கள், அவன்முன் பொய் சொல்லலாமா? உண்மையைப் பேச கற்றுக்கொள்ளுங்கள் என்றனர். செலுத்த வேண்டிய அபராதத்தை செலுத்திவிட்டு பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

அன்று மாலையில் வீடு வந்து சேர்ந்ததும், ஆசிரியர் யாரிடமும் எதுவுமே பேசாமல் அமைதியுடன் காணப்பட்டார். சிறுவனுக்கு முன் பொய் சொல்லிவிட்டேனே, காவலர்கள் முன் அவமானப்பட்டேனே என்ற கவலையில் ஆழ்ந்தார். கணவனின் தனிமையை அறிந்த மனைவி, தனது பேரனிடம் பேச ஆரம்பித்தாள்.''"உனது தாத்தா ஒரு நல்ல ஆசிரியர். நீ காவல்துறையினரிடம் சொன்ன பதிலால், அவரை வெட்கப்படச் செய்துவிட்டாய். நீ செய்தது சரியா? காவலர்கள் உன்னிடம் கேட்டபோது, நீ பேசாமல் அமைதியாக இருந்திருக்கலாமே அல்லது எனக்குத் தெரியாது என்று கூறி இருக்கலாமே. உன்னால் தாத்தா எவ்வளவு வேதனைப்படுகிறார். உனக்குப் புரிகிறதா?" என்றாள்.

அனைத்தையும் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்த சிறுவன், தனது பாட்டியிடம் கபடமற்ற உள்ளத்துடன் சில கேள்விகளைக் கேட்டான். "தாத்தா ஏன் பொய் சொல்ல வேண்டும் ? அது தவறு இல்லையா? காவலர்கள் என்னிடம் கேட்டதனால், நான் உண்மையைக் கூறினேன். அது தவறா? நானும் பொய் கூற வேண்டுமா?" என்று பல கேள்விகளைக் கேட்டான். பாட்டியினால் பதில் எதுவும் கூறமுடியவில்லை.

சிறுவன் தனது தாத்தாவிடம் சென்று, "ஏன் என்னுடன் பேசாமல் இருக்கின்றீர்கள்? நான் கூறியது தவறாக இருந்தால் என்னை மன்னியுங்கள்" என்றான் தாத்தா பேரனை கட்டிப்பிடித்து முத்தமிட்டு, "எனக்கு ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்துவிட்டாய். உண்மையைத்தான் பேசவேண்டும், பொய் சொல்லக்கூடாது " என்று கூறினார்.

"நீ உண்மையைப் பேசினாய், மதிப்பும் மரியாதையும் பெற்றாய். நான் பொய் சொன்னேன்,மதிப்பு, மரியாதை, மகிழ்ச்சியை இழந்துவிட்டேன்' என்றார் தாத்தா.


எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.

Tamil Survey Popup Image