தாயைப் போல பிள்ளை| அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
தாய் பாசம் தவறிழைக்கும் மகனையும் அரவணைக்கும்.
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக்கைச் சேர்ந்தவர் 21 வயதான மஜித் கான். இவர் ஒரு கல்லூரி மாணவர். உள்ளூர்க் கால்பந்து விளையாட்டு அணியின் கோல் கீப்பராக இருந்தவர். இவருடைய நெருங்கிய நண்பர் காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் இறந்து போக, இதனால் மனமுடைந்த மஜித் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஒரு தீவிரவாத இயக்கத்தில் இணைந்தார். இவர் துப்பாக்கியுடன் நிற்பதுபோன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதைச் சற்றும் எதிர்பாராத குடும்பத்தினர் மிகுந்த வேதனைக்குள்ளாயினர்.
இந்தச் சூழ்நிலையில் மஜித்தின் தாய் ஆசியா பேகம் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் கண்ணீர் மல்கத் தமது மகன் சரணடைய வேண்டும் என்று தமது மகனிடமே வேண்டுகோள் விடுத்தார். தமது ஒரே மகன் தீவிரவாதக் கூட்டத்தில் சேர்வதை எந்தத் தாய்தான் விரும்புவார்?
தாயின் கண்ணீரைப் பார்த்த மஜித் ஒரே வாரத்தில் மனம் மாறினார். நவம்பர் 16ஆம் நாள் இரவு மஜித் திடீரென தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தார்.
தீவிரவாதத்திலிருந்து விலகி மீண்டும் வீட்டுக்குத் திரும்ப தாயின் அன்புதான் காரணமாக இருந்துள்ளது. தாயின் உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள் மகனை மீட்க உதவியுள்ளது. பிள்ளைகள் தவறு செய்யும்போது அவர்களை வெறுத்து ஒதுக்காமல், பாசத்தோடு அரவணைக்கும்போது அந்தப் பாசமும் குழந்தைகளைத் திருத்தும் என்பதற்கு மஜித் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
தாங்கள் வன்முறை பாதையைத் தேர்ந்தெடுக்கும்போதெல்லாம் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் குடும்பத்தினர்தான் என்பதை எல்லா இளையோரும் புரிந்துகொள்ள வேண்டும்.
தாய்ப் பாசம் தவறிழைக்கத் தூண்டக்கூடிய மனதையும் மாற்றும் சக்தி கொண்டது.
