எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுமை காப்போம்! |ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 25-ம் வாரம்-வெள்ளி
25 செப்டம்பர் 2026
சபை உரையாளர் 3: 1-11
லூக்கா 9: 18-22
முதல் வாசகம்.
சபை உரையாளர் நூலின் ஆசிரியர், இப்பகுதியில், “எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டு” என்பதை எடுத்துக்காட்டுகிறார். இறப்பதற்கும், அழுவதற்கும் சிரிப்பதற்கும், தேடுவதற்கும் இழப்பதற்கும் என வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் கடவுள் ஒரு நேரத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
மனிதன் கடவுள் ஆற்றும் அனைத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், அவர் எல்லாவற்றையும் அதற்குரிய காலத்தில் அழகாகச் செய்கிறார். மேலும், முடிவில்லா நிலைக்குறித்த எண்ணத்தை மனித இருதயத்தில் வைத்துள்ளார் என்பது குறித்து விவரிப்தோடு, காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார் என்றம், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது என்றும் எடுத்துரைக்கிறார்.
நற்செய்தி.
இந்தப் பகுதியில், இயேசு தம் சீடர்களிடம் “நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று கேட்கிறார். “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள்.
இயேசு சீடர்களை நோக்கி, நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டபோது, பேதுரு முந்திக்கொண்டு, “நீர் கடவுளின் மெசியா” என்று ” என்று அறிக்கையிடுகிறார்.
அதன்பின், இயேசு தாம் பல பாடுகளை அனுபவித்து, நிராகரிக்கப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார் என்று சீடர்களுக்கு அறிவித்ததை லூக்கா குறிப்பிட்டு எழுதுகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய முதல் வாசகமான சபை உரையாளர் பகுதியானது நமக்கு ஓர் அழகான உண்மையை எடுத்துரைக்கிறது. ஆம், கடவுளின் படைப்பில், ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம் உண்டு.” பிறப்பதற்கும் இறப்பதற்கும், அழுவதற்கும் சிரிப்பதற்கும், தேடுவதற்கும் இழப்பதற்கும் என வாழ்க்கையில் ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் இருப்பதையும் நாம் இயற்கையாகவே அவற்றைக் கடந்துச்செல்வதையும் அறிவோம். காலங்கள் கடவுளுடைவை.
நம்முடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான காலங்களும், துன்பமான காலங்களும் வருகின்றன. சில நேரங்களில், “இது ஏன் எனக்கு நடக்கிறது?” என்று நாம் கேட்கலாம். ஆனால், எல்லாவற்றையும் நாம் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், கடவுள் நம்முடைய வாழ்க்கையை அறிந்திருக்கிறார்; அவர் அறியாதது ஒன்றுமில்லை.
இன்றைய நற்செய்தியில், இயேசு தம் சீடர்களிடம், “நான் யார்?” என்று கேட்கிறார். பேதுரு, “நீர் கடவுளுடைய மெசியா” என்று அறிக்கையிடுகிறார். பின்னர் இயேசு தாம் பாடுகளை அனுபவித்து, நிராகரிக்கப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்று கூறுகிறார்.
சீடர்கள் (யூதர்கள்) எதிர்பார்த்த மெசியாவின் பாதை வேறாக இருந்திருக்கலாம். ஆனால் இயேசு சிலுவையின் பாதையை தேர்ந்தெடுத்தார். மனித பார்வையில் தோல்வியாகத் தோன்றிய சிலுவை, கடவுளுடைய திட்டத்தில் மீட்புக்குறிய பாதையாக உருவெடுத்தது.
அவ்வாறே, நாம் நம்மை முழுமையக கடவுளின கரத்தில் அரப்பணிக்கும்போது, நமக்கான முடிவுகளை அவரது கரத்தில் வைக்க வேண்டும். அவர் முக்காலத்தையும் அறிந்தவர். அவருக்கு ஈடாக நம்மால் சிந்திக்க இயலாது. “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்கா 1:39) என்றவர்தான் அன்னை மரியா.
நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியில் நன்றி கூறுவோம்; துன்பத்தில் நம்பிக்கையுடன் இருப்போம் மற்றும் காத்திருக்கும் நேரத்தில் பொறுமையுடன் இருப்போம். நம்முடைய நேரம் நமக்குப் புரியாமல் இருக்கலாம்; ஆனால் கடவுளுடைய நேரம் ஒருபோதும் தவறாது. கடவுளுடைய வழிகள் பல நேரங்களில் நமக்கு ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருக்கலாம். ஆனால், காலப்போக்கிலும் இறைவேண்டல் மூலமும், சிலுவையின் அர்த்தத்தையும் அதிலிருந்து கிடைக்கும் மகிமையான பலனையும் நாம் புரியவரும்.
நினைவில் கொள்வோம், நாம் எவ்வளவுதான் ஆசைப்பட்டாலும் அல்லது முயற்சித்தாலும், சில காரியங்கள் அதற்கான நேரம் வரும்போதுதான் நடக்கும். செடி நட்ட உடனே பழம் கிடைப்பதில்லை; அதற்கான காலம் வரும்வரை காத்திருக்க வேண்டும். இயற்கையின் விதி: இரவு முடிகிற போது பகல் வருவது போலவும், பருவநிலைகள் மாறுவது போலவும், நம் வாழ்வின் இன்ப துன்பங்களும் காலத்தின் சுழற்சிக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். இதனை தடுத்து நிறுத்த நம்மால் இயலாது.
எனவே, கடவுள் நமக்கென்று தந்துள்ள துணிவுடனும், நம்பிக்கையுடனும், கடவுளின் வாக்கு நிறைவேறும் என்ற எதிர்நோக்குடனும் தூய ஆவியாரின் வழிகாட்டுதலில் தொடர்ந்து நடக்க முற்படுவோம்
இறைவேண்டல்.
ஆண்டவரே, என் வாழ்க்கையின் ஒவ்வொரு காலத்திலும் உம்மை நம்பவும், உமது பாதையில் உண்மையாக நடக்கவும் எனக்கு அருள் தாரும். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6012 228 5452
