தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார் நம் இறைவன்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

திருவருகை காலம்-நான்காம் வாரம் வியாழன்
I:1 சாமு:   1: 24-28
II:  1 சாமு 2: 1. 4-5. 6-7. 8
III: லூக்: 1:46-56

ஒரு ஊரில் பெண் குழந்தை வேண்டாம் என்று ஒரு குடும்பம் இருந்தது. ஆனால் அவர்களுக்கு தொடர்ந்து மூன்று  பெண் குழந்தைகள் பிறந்தன. எனவே அந்தக் குழந்தைகளை எப்படியாவது கள்ளிப்பால் ஊற்றி கொல்லலாம் என்றுகூட நினைத்தனர். ஆனால் தங்கள் குழந்தைகளைக் கொல்வதற்கு எப்படி பெற்றவர்களுக்கு மனது வரும். இவர்களைச் சிறப்பாக வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் படிக்க வைத்தனர். அந்த மூன்று பெண் குழந்தைகளும் சிறப்பாகப் படித்து பிற்காலத்தில் மூன்று பேருமே அரசு வேலைக்குச் சென்றனர். தங்களுடைய பெற்றோருக்கு மிகப்பெரிய வீட்டைக் கட்டிக் குடியேற வைத்தனர். அதற்கு மிக முக்கியமான காரணம் பெற்றோர்களின் நல்ல மனநிலை. தொடக்கத்தில் அவர்களுக்கு பெண் குழந்தைகளைக் குறித்து எதிர்மறையான மனநிலை இருந்தாலும் அதன் பிறகு அவர்கள் தன் குழந்தைகளை அன்பு செய்தனர். அன்பு செய்ததன் விளைவாக அந்த மூன்று பெண் குழந்தைகளும் மிக உயர்ந்த இடத்திற்கு சென்றனர்.

நம்மைப் படைத்த கடவுளும் நம்மை அன்பு செய்வது நேரடியாக வெளிப்படாது. மாறாக நாம் தாழ்வுற்று துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது அதிலிருந்து வெளியேறி வாழ்வில் முன்னேற வழிகாட்டுவதன் வழியாக கடவுளின் அன்பை முழுமையாகச் சுவைக்க முடியும். இன்றைய திருவழிபாட்டு வாசகங்களில் இரண்டு பெண்கள் கடவுளின் அன்பைசுவைத்ததை பற்றிஅறிய வருகின்றோம்.

முதல் வாசகத்தில் குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்திய அன்னா கடவுளின் ஆசீர்வாதத்தால் சாமுவேலை குழந்தையாகப் பெற்றார். எனவே தன் மகனைக் கடவுளுக்கு அர்ப்பணித்தார். அக்காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் இல்லை என்றால் அது சாபம் என மக்கள்   குற்றம் சாட்டினார். எனவே அன்னா பற்பல வசை மொழிகளுக்கு  நேரிட்டிருக்கலாம். ஆனால் அன்னா இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். இறுதியிலே கடவுள் குழந்தை பாக்கியத்தைக் கொடுத்து அன்னாவை பெருமைப்பட உயர்த்தினார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஏழைப் பெண்ணான கன்னி மரியாவை கடவுள் தன் மகன் இந்த உலகத்தில் பிறப்பதற்காகத் தெரிவு செய்ததன் வழியாக அவர் உயர்த்தப்பட்டார். அன்னை மரியாள்ஒரு ஏழைப்பெண்.யூத சமூகத்தில் பெண்கள் அடையாளம் தெரியாதவர்களாக  ஒடுக்கப்பட்டார்கள். இப்படிப்பட்ட சூழலில் யூத இனமும் இந்த உலகமும் தன் மகன் வழியாக மீட்கப் பெற ஒரு பெண்ணைத்தான் கடவுள் தேர்ந்தெடுத்தார். எனவேதான் அன்னை மரியா கடவுளிடமிருந்து பெற்ற அன்பை உணர்ந்தவராய் அவருக்கு நன்றி கூறும் விதமாக மகிழ்ச்சிப் பாடல் பாடினார். அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கிறோம். 

அன்னை மரியா, 'ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்' '' (லூக்கா 1:47-48) என்று பாடியதற்கு காரணம் யூத சமூகம் பெண்ணை அடிமை போல தாழ்த்தி ஒடுக்கியதே. ஆனால் கடவுள் அன்னை மரியாளை உயர்த்தியதால், இந்தப் பாடல் வழியாகக் கடவுளை புகழ்ந்தார்.

மேலும் இந்தப் பாடலானது புகழ்ச்சி நிறைந்ததாகவும் நீதி நெறிகளை வெளிப்படுத்தும் புரட்சிக் கீதமாகவும்  இருக்கின்றது. எனவே கடவுள் இந்த இரு பெண்களையும் தன்னுடைய ஆசீர்வாதத்தால் நிரப்பி,  இவர்கள்  பெற்றெடுத்த குழந்தைகளின் வழியாக இவ்வுலக மக்கள் மீட்பின் வாழ்வைப் பெற்றுக் கொள்ள   கருவிகளாகப் பயன்படுத்தினார்.

எனவே சமூகத்தில் தாழ்நிலையில் உள்ளவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் உரிமை இழந்தவர்களையும் அன்போடு ஏற்று, அவர்கள் புதுவாழ்வு பெற உதவி செய்வோம். மனிதமும் மனிதநேயமும் இந்த மண்ணில் மலர நாம் உதவி செய்வோம். அப்பொழுது நிச்சயமாக கடவுள் இந்த உலகிற்கு  கொண்டுவந்த இறையாட்சியின் மீட்பை அனைவரும் சுவைத்திட வழிகாட்ட முடியும். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! தாழ்நிலையில் இருப்பவர்களை உயர்த்தி மகிழ்வு கண்டவரே! இந்த சமூகத்தில் எத்தனையோ நபர்கள் தங்கள் வாழ்வை இழந்து அடையாளம் தெரியாமல் வாழ்கின்றனர். அவர்களும் வாழ்வில் முன்னேற அவர்களுக்காக  உழைக்கும் நல்ல மனநிலையை எங்களுக்குத்  தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்