கடவுள் உலகனைத்தையும் அன்பு செய்கிறார்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

திருவருகை காலம்-மூன்றாம் வாரம் வெள்ளி
I: எசா: 56: 1-3,6-8
II:  திபா: 67: 1-2. 4. 6-7
III: யோ: 5:33-36

சில வருடங்களுக்கு முன்பு நமது கிறிஸ்தவ நிறுவனங்களில் நடைபெறும் எல்லா நிகழ்வுகளிலும் இந்தப் பாடலுக்கு நடனமாடினார்கள். அப்பாடலின் வரிகள் இவ்வாறாக அமையும். "சாமி பொதுவான சாமி. இயேசு சாமி பொதுவான சாமி "
இப்பாடலின் வரிகள் முதலில் கேட்பதற்கு ஏதோ கிராமிய நடையில் வேடிக்கையாக இருப்பது போல தோன்றும். ஆனால் இவ்வரிகள் எவ்வளவு பெரிய உண்மையை உலகிற்கு உணர்த்துகிறது தெரியுமா?  தந்தையாம் கடவுளும்  அவரின் ஒட்டுமொத்த சாயலாக உலகில் வந்துதித்த இயேசுவும் பாரபட்சமின்றி  எல்லா மனிதரையும் அன்பு செய்பவர்கள் என்ற கருத்தை மிகத் தெளிவாக உணர்த்துகிறது.

இன்றைய முதல் வாசகமும் இதே கருத்தைதான் நமக்குச் சொல்கிறது. தன்னை நோக்கி வருபவர்கள், தன்னிடம் செபிப்பவர்கள், தூய மனதோடு கடவுளோடு தங்களை இணைத்துக்கொண்டு அவருக்கு பலிசெலுத்துபவர்கள் யாராயிருந்தாலும் அவர்களை மகிழச்செய்வதாகவும் ,அவர்களை தன் திருமலையில் கூட்டிச்சேர்ப்பதாகவும் கடவுள் இறைவாக்கினர் எசாயா மூலமாக வாக்களிக்கிறார்.
பிற இனத்தாரை பாவிகள் என்றும் கடவுளுக்கு உகந்தோர் அல்ல என்றும் எண்ணிக்கொண்டிவர்களுக்கு கடவுள் தான் அனைவருக்கும் பொதுவானவர் என்று "என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’ " என்ற வார்த்தைகளால் உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவும் தான் தந்தையால் அனுப்பப்பட்டவர் என்பதற்கு தன்னுடைய செயல்களே சான்று என்கிறார். ஆம் தந்தையைப் போலவே இயேசுவும் அனைவருக்கும் பொதுவானவராகவே விளங்கினார். அனைவரையும் அரவணைத்தார். மனந்திரும்பி வந்த பாவிகளை ஏற்றுக்கொண்டார். நம்பிக்கை கொண்ட பிற இனத்தாரைப் பாராட்டினார்.பெண்களை தனக்கு சீடர்களாக வைத்துக்கொண்டார். விண்ணசிற்கு முன்னுதாரணமாய் சிறுவர்களைக் காட்டினார். "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள் "என்று இனம், மதம், குலம், மொழி போன்ற எல்லைகளைத் தாண்டி தன்னன்பை பகிர அனைவருக்கும் பகிர சீடர்களுக்குக் கட்டையிட்டார். இவ்வாறு தந்தைதான் தன்னை அனுப்பினார் என்பதை இயேசு உறுதிசெய்தார்.

தந்தை கடவுளைப்போலவும் இயேசுவைப் போலவும் நாமும் அனைவருக்கும் பொதுவானவர்களாக பாரபட்சமில்லா அன்பை பொழிபவர்களாக மாற முயற்சிசெய்ய வேண்டும். இச்செயலே நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்கு சான்று பகரும். அனைவரையும் அன்பு செய்யும் கடவுளைப்போல நாமும் அனைவரோடும் அன்பைப் பகிர்வோம். ஏற்றுக்கொள்வோம். அவருக்கு சான்று பகர்வோம்.

 இறைவேண்டல் 
அன்பே இறைவா! நீர் அனைவரையும் ஏற்றுக்கொண்டு பொதுவானவராய் இருப்பது போல நாங்களும் மாற உதவிபுரியும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்