புதிய இதயத்துடன் புதிய வாழ்வு | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 22ஆம் வாரம் -வெள்ளி
4 செப்டம்பர் 2026
1 கொரி 4: 1-5
லூக்கா 5: 33-39
‘புதிய இதயத்துடன், புதிய வாழ்வு’
முதல் வாசகம்.
இன்றைய வாசகத்தில், கொரிந்தியருக்கு எழுதுகையில், பவுல் அடிகள் இறைமக்கள் அனைவரும் கிறிஸ்துவின் பணியாளர்களாகவும், கடவுளின் மறையுண்மைகளுக்குப் பொறுப்பாளர்களாகவும் நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
இறைமக்களிடம் கடவுள் எதிர்பார்ப்பது நேர்மையும் நம்பிக்கையும் ஆகும். மேலும்,மனிதர்களின் தீர்ப்பை வைத்து நம்முடைய மதிப்பை தீர்மானிக்கக் கூடாது என்றும், நம்முடைய மனசாட்சி கூட நம்மை முழுமையாக நியாயந்தீர்க்க முடியாது என்றும் உண்மையான நீதிபதி ஆண்டவரே எற்கிறார் பவுல்.
ஆகையால், ஆண்டவரின் மறு வருகைவரை மற்றவர்களை முன்கூட்டியே தீர்ப்பிடாமல் வேண்டும். ஆண்டவர், ஒவ்வொருவருடைய மறைவான செயல்களையும் இருதயத்தின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்போது ஒவ்வொருவருக்கும் உரிய பாராட்டு கிடவுளிடமிருந்து கிடைக்கும் என்று முடிக்கிறாரு பவுல்,
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசுவின் சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை? என்று சிலர் கேட்கிறார்கள். அதற்கு இயேசு, தம்முடைய வருகையால் ஒரு புதிய காலம் தொடங்கியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகளின் மூலம் விளக்குகிறார்.
மணமகன் தங்களுடன் இருக்கும் காலத்தில், திருமண விருந்தினர்கள் துக்கப்படவோ நோன்பிருக்கவோ தேவையில்லை என்று இயேசு கூறுகிறார். அத்துடன், அவரது படிப்பினைய மேலும் அவரது விளக்கிட உஉவமைகள் வழி போதிக்கிறார்.
பழைய ஆடையில் புதிய துணியை இணைக்க முடியாது; அதுபோல பழைய முறைகளுக்குள் புதிய போதனையை வலுக்கட்டாயமாக பொருத்த முடியாது என்றும், புதிய திராட்சரசத்தை பழைய தோல் பைகளில் ஊற்றினால் அவை கிழிந்துவிடும். எனவே, புதிய திராட்சரசத்திற்கு புதிய தோல் பைகள் தேவை என்றுணர்ந்துகிறார்.
இதன் மூலம், இயேசு கொண்டு வந்த புதிய உடன்படிக்கையும் புதிய வாழ்வுமுறையையும் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை கற்பிக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் நம் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய இரண்டு முக்கியமான உண்மைகளை நமக்கு எடுத்துரைக்கின்றன எனலாம்.
முதல் வாசகத்தில், புனித பவுல், நாம் கிறிஸ்துவின் பணியாளர்காளகவும், கடவுளின் மறையுண்மைகளின் பொறுப்பாளர்களாகவும் இருக்கிறோம் என்று கூறுகிறார். இதற்கான முக்கிய பண்பு நம்பகத்தன்மை என்கிறார். அவரது படிப்பினையில் நாம் மற்றவர்களின் பாராட்டைப் பெறுவதற்காக அல்ல, நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை உண்மையுடன் நிறைவேற்றுவதற்காக நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்கிறார்.
பல தருணங்களில் நாமும் கடவுள் நமக்குக் கொடுத்த வாழ்க்கை, குடும்பம், திறமைகள், உறவுகள், பணம், நேரம், நம்பிக்கை ஆகியவற்றை நம்பிக்கையுடன் நிர்வகிக்க வேண்டியவர்கள் என்பதை மறந்துவிடுகிறோம். கண்டதே காட்சி கொண்டதை கோலம் என வாழ்நாள்களைச் செல்வழிக்கிறோம்.
சில நேரங்களில், “மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?” என்ற எண்ணத்தால் மூழ்கடிக்கப்படுகிறோம். பிறர் பாராட்டினால் மகிழ்கிறோம்; குறை சொன்னால் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்.
ஆனால் பவுல் அடிகளோ, மனிதர்களின் தீர்ப்பு இறுதியானது அல்ல; ஆண்டவரே உண்மையான நீதிபதி என்றும், “மக்கள் என்னைப் பாராட்டுகிறார்களா?” என்பதைக் காட்டிலும், “கடவுளுக்கு நான் உண்மையாக இருக்கிறேனா?” என்பதே முக்கியமான கேள்வியாக இருக்க வேண்டும் என்கிறார்.
பவுல் அடிகளின் படிப்பினைக்கு வலுவூட்டும் வகையில், இயேசு மிகவும் அழகான ஓர் உவமையைச் சொல்கிறார். “புதிய திராட்சரசத்தைப் புதிய தோல் பைகளில்தான் ஊற்ற வேண்டும்.” இங்கு இயேசு நமக்கு ஒரு ஆழமான ஆன்மீக உண்மையைச் சொல்கிறார். இயேசு நம் வாழ்க்கைக்குள் வரும்போது, அவர் நமக்குள் புதிய வாழ்க்கையை, புதிய சிந்தனையை, புதிய உறவை உருவாக்க விரும்புகிறார். பழையன நீங்கினால்தான் புதியன குடிகொள்ள இயலும்.
நாம் பல ஆண்டுகளாக கிறிஸ்தவர்களாக இருக்கலாம். ஆனால் நம்முடைய பழைய கோபம், பொறாமை, அகந்தை, மன்னிக்காத மனம், பழிவாங்கும் எண்ணம், பிறரைத் தீர்ப்பிடும் பழக்கம் ஆகியவற்றை விட்டுவிடாமல் இருந்தால், நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை வெளிப்புறச் சடங்குகளாக மட்டுமே நின்றுவிடும்.
புதிய திராட்சை இரசம் என்பதை கிறிஸ்துவின் அருளை குறிப்பதாக நாம் பொருள்கொள்ளலாம். திருவெளிபாடு 21:5-ல், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்கிறார் ஆண்டவர். ஆகவே, நம்மை நாமே ஆராய்வோம்.
“நாம் கடவுளுக்கு உண்மையாக இருக்கிறோமா ? அல்லது மனிதர்களின் பாராட்டுக்காக தீயதுக்கும் இசைகிறோமா?” அடுத்து, பழைய மனப்பான்மையை விட்டுவிலக தயாராக உள்ளோமா? அல்லது, புதிய இதயத்தைப்பெற்று இயேசுவின் உண்மை சீடர்களாக மாற விரும்புகிறோமா? இயேசு நமக்குக் கொடுக்க விரும்பும் புதிய வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள புதிய தோல் பை போன்ற புதிய இதயம் நமக்குத் தேவை.
இறைவேண்டல்.
“ஆண்டவரே, மனிதர்களின் பாராட்டைத் தேடாமல் உமக்கு உண்மையுள்ள சீடராக வாழ எனக்கு உதவும். என் பழைய மனப்பான்மைகளை மாற்றி, உமது அன்பை ஏற்றுக்கொள்ளும் புதிய இதயத்தை எனக்குத் தருவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியகல்வி மையம்,
+60122285452
