தமிழ் மொழியும், புலமையும், ஆய்வும், விருதும், வியப்பும்!

 

முனைவர் கு.அரசேந்திரன் - தேவநேயப் பாவாணர் விருதாளர்

07-02-2022 அன்று மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் 120-வது பிறந்தநாள். 

தமிழக அரசு - தமிழ் வளரச்சி துறையின் சார்பாக தேவநேயப் பாவாணர் பெயரில் வழங்கப்படும் 2021-கான விருதினை   ஐயா முனைவர் கு. அரசேந்திரன் அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளது. 

இங்கு  இணைக்கப்பட்டிருக்கும் கட்டுரை ஐயா கு.  அரசேந்திரன்  அவர்களின் தமிழ்ப்பணி குறித்தது. 

தமிழ், உலக மொழிகளில் மூத்ததும், தொன்மைக் காலத்திலேயே
செம்மையான மொழியாக வடிவம் அடைந்திருந்தது எனவும்;
தென்னிந்திய மொழிகளுக்குத் தாயாகவும், மேலை, கீழை இந்தோ-
ஐரோப்பிய மொழிகளுக்கு மூலமாகவும் அமைந்திருக்கிறது எனவும்,
இவ்வுலகிற்கு உரக்க எடுத்துரைத்தவர் தேவநேயப் பாவாணர்.
அவர்தம் வழி நின்று, தமிழின் வேர்ச்சொல் வளத்தையும்
செழுமையையும் சுட்டிக்காட்டி, தனது ஐம்பது ஆண்டு கால தொடர் ஆய்வுகளால் தமிழ்
இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கு எல்லாம் தாய் என உறுதிப்படுத்தியிருப்பவர் ஐயா
கு.அரசேந்திரன் அவர்கள்.
பாவாணரின் 120 - வது பிறந்த நாளை நாம் கொண்டாடி வரும் இக்காலகட்டத்தில்,
தன் எண்ணத்திலும், எழுத்திலும், பேச்சிலும், மூச்சிலும் பாவாணரையே நாள்தோறும்
சிந்தையிலேற்றி, ஆழ்ந்த மொழியியல் ஆய்வுகள் பல மேற்கொண்டு வரும் ஆய்வறிஞர்,
முனைவர் கு.அரசேந்திரன் அவர்களுக்கு, தமிழக அரசு தமிழ் வளரச்சித்துறையின் 2021 -ஆம்
ஆண்டிற்கான மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் விருதளித்துச் சிறப்பித்துள்ளது.
வாழ்நாளின் பெரும்பகுதியைத் தமிழின் வேர்ச்சொல் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தியவர்
இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதாவது அடையாளப்படுத்தப்பட்டிருப்பது
ஆறுதல் அளிக்கிறது.
வேர்ச்சொல் ஆராய்ச்சி என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. இத்தகைய ஆய்வு
மேற்கொள்ள, ஒப்பிடும் மொழிகளின் இலக்கியம், இலக்கணம், உரைகள், எழுத்து, பேச்சு,
கல்வெட்டு, இன்ன பிற தரவுகள் என அனைத்தும் அறிந்திருக்க வேண்டும். ஒரு சொல் அந்த
மொழியிலேயே காலந்தோறும் எப்படிப் புழங்கி வந்திருக்கிறது என்பதும் தெரிந்திருக்க
வேண்டும். இன்று நம்மில் பெரும்பான்மையினர், தாய்மொழியான தமிழை மட்டுமாவது
முழுவதுமாக அறிந்திருக்கிறோமா என்பது ஐயமே. ஆனால், நம் சமகாலத்தவரான
அரசேந்திரன் அவர்கள் தமிழ் மற்றும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் செறிந்த அறிவினராய்
ஒப்புமை ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இதனோடு, தான் கண்டறிந்தவற்றை
நூலாக்கம் செய்யும் போது, மொழியியல் வரையறையின் படி எழுத வேண்டும்; அதாவது,
அந்தச் சொல் மற்றும் எழுத்தை ஒலிக்கும் போது எப்படி ஒலிக்க வேண்டும் என்பதை எழுத்து
நடையில் பொருத்தமான குறியீடுகளுடன் எழுத வேண்டும். ஆகையால், பிற நூல்களைப்
படைக்க எடுக்கும் கால அளவை விட, சொல்லாய்வு நூல்களை முடிக்க அதிக திங்கள்கள்
எடுக்கும்; மூளைச் சோர்வடையும், உடல் அயர்ச்சியுறும். இப்படியான அனைத்து
இன்னல்களையும் தாண்டி யாரும் செய்திராத அளவிற்கு மொழியாய்வு செய்து, வழி, வழியாக
இனி வரப்போகும் தமிழ்த் தலைமுறையினருக்கு பெரும் செல்வக் களஞ்சியங்களாக தனது
ஆய்வு நூல்களைத் தந்திருக்கிறார்.
தமிழ்மொழி மற்றும் தமிழர்த் தொன்மையை உலகிற்கு நிறுவிட இலக்கிய குறிப்புகள்,
கல்வெட்டு ஆவணங்கள், தொல்லியல் பொருள்கள், உயிரியல் தொழில்நுட்பம் வாயிலாக

முயன்று வருகிறோம். இந்நிலையில் மொழியியல் கூறுகள் அடிப்படையில் தமிழின்
தொன்மையை கால்டுவெல், ஜி.யூ.போப், ஞானப்பிரகாசர், பாவாணர் வரிசையில்
சொல்லாய்வுகளை நீட்டித்தும் அகலப்படுத்தியும் ஆழப்படுத்தியும் இன்று ஆயிரக்கணக்கான
சொற்களின் வேரினைக் கண்டறிந்துள்ளார். இந்திய வரலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி
பார்க்கும் இறங்குமுக கொள்கையால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்தம் வேர்ச்சொல்
ஆய்வுகளால் இறங்குமுக கொள்கையைத் தகர்த்தெறிந்து, ஏறுமுக கொள்கையான
தென்புலத்தில் இருந்து வடக்கு நோக்கிய மாற்றுச்சிந்தனையை நிறுவியுள்ளார்.
இத்தகைய செம்மையான ஆய்வுகளைச் செய்து வரும் அரசேந்திரன் அவர்கள்
இன்றைய அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகிலுள்ள
கொக்கரணை என்னும் சிற்றூரில் சு.குருசாமி - அம்மாதனம் ஆகியோரின் அன்பு மகனாக
12.07.1955-இல் பிறந்தார். இவரின் இயற்பெயர் இராசேந்திரன். தனித்தமிழ்க் காவலர்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் கொள்கைகளில் ஈர்ப்புக்கொண்டு தனது பெயரை
அரசேந்திரன் என தமிழ்ப்படுத்திக் கொண்டார். ஈழத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினருமான மா.க. ஈழவேந்தன் அவர்களின் திருமகளார் யாழினி
அம்மையார் இவரின் வாழ்க்கைத் துணைவியார் ஆவார். இவர்களுக்கு உத்தமச்சோழன் என்ற
மகனும் தமிழ்க்காவிரி என்ற மகளும் இருக்கின்றனர்.
கொக்கரணை அருகிலுள்ள உள்கோட்டையில் பள்ளிக்கல்வி பயின்ற இவர், பூண்டி
திருபுட்பம் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையே இளங்கலை மற்றும்
முதுகலை பட்டப்படிப்புப் பயின்றார். கம்பராமயணத்தில் அணிநலம் என்னும் தலைப்பில்
ஆய்வு நிகழ்த்தி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
வ.சுப.மாணிக்கம், திருமுறைச் செல்வர் க.வெள்ளைவாரணம், முனைவர் சோ.ந.கந்தசாமி,
மகாவித்துவான் தண்டபாணி தேசிகர் போன்ற பேராசிரியப் பெருமக்களிடம் பாடம்
பயின்றவர். படிக்கும் காலத்தில் தென்மொழி ஏடுகளைக் கற்றும் மறைமலையடிகள்,
பரிதிமாற் கலைஞர், பெருஞ்சித்திரனார் கருத்தியலை ஏற்றும் தமிழாய்வு செய்தவர்.
இலக்கியம், இலக்கணம், சமயம், வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் புலமை
மிக்கவர். ஆயினும் மொழியாய்வை மட்டுமே உயிர்மூச்சாகக் கொண்டு எழுதியும் பேசியும்
வருகிறார். வேர்ச்சொல்லாய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இவர், சென்னைக் கிறித்தவக்
கல்லூரியில் 27 ஆண்டுகளாக தமிழ்ப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணிபுரிந்து,
ஓய்வுப் பெற்றிருக்கும் காலத்திலும் தனது ஆய்வுகளைத் தொடர்ந்துச் செய்து வருகிறார்.
சராசரியாக ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் மொழி ஆய்வுக்காக தன்னை ஈடுபடுத்தி
வருகிறார்.
உலகின் 700 கோடி மக்களில் 400 கோடி மக்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிக்
குடும்பம் சார்ந்தவர்கள். இந்நானூறு கோடி மக்கள் பேசும் மொழிகள் அனைத்தும்,
பத்திலிருந்து பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழிலிருந்துப் பிரிந்துச் சென்று
உருவான மொழிகள் என்பது இவரின் கருத்து. இவரை, அமெரிக்கப் பெனிசில்வேனியப்
பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் ஸ்டீபன் ஹில்யர் லீவிட் தமிழ், இந்தோ –
ஐரோப்பிய மொழிகளுக்கு இடையேயான தொடர்பு பற்றிய ஆய்வுகளின் முன்னோடி எனப்
பாராட்டியுள்ளார்.
பல நூறு ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ் எவ்வாறு மூலமாக உள்ளது என்பதை
கட்டுரைகளிலும் நூல்களிலும் உலகம் ஏற்குமாறு இவர் ஆய்ந்து நிலைநாட்டியுள்ளார். இவர்,
கால் அடி தாள் - சொல் வரலாறு, சொல்வழிப் புதைபொருள், தமிழ்க் கப்பல், தமிழறிவோம்

(பகுதி 1, 2), உலகம் பரவிய தமிழின் வேர்-கல் (பகுதி 1,2,3,4) ஆகிய வேர்ச் சொல்லாய்வு
நூல்களையும், உயிர்க்கதறல் என்ற பாடல் தொகுதியையும் எழுதி வெளியிட்டுள்ளார். ஒரு
வேர்ச்சொல் பற்றி உலகில் எந்த மொழியிலும் எவரும் ஆயிரம் பக்க அளவில் நூல்
எழுதியதில்லை. ஆனால், முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் 'கல்' நூல் ஆயிரம் பக்க
அளவினது என்பது குறிப்பிடத்தக்கது. ‘தமிழுக்கும் வட இந்திய மொழிகளுக்குமான
வேர்ச்சொல் ஒப்புமைகள்’, என்ற தலைப்பில் செம்மொழித் தமிழாய்வு நடுவணரசு
நிறுவனத்திற்கு இரண்டு பகுதிகளாய் ஆய்வேடுகளையும் படைத்துக் கொடுத்துள்ளார்.
சென்னை வானொலியில் நூறு நாட்களுக்கும் மேல் வேர்ச்சொல் பற்றிச்
சொற்பொழிவாற்றியவர். உள்நாட்டு, வெளிநாட்டுத் தொலைகாட்சிகள் பலவற்றில் தமிழியச்
சொற்பொழிவுகள் பல தொடர்ந்து செய்துவருகிறார். கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க்
கேளாரும் வேட்ப மொழியும் சொல்லாற்றல் திறம் பெற்றவர். சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு,
ஜெர்மனி, இங்கிலாந்து, நார்வே, டென்மார்க், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்று
பல்கலைக்கழகங்களிலும் ஆய்வு மன்றங்களிலும் ஆய்வுரைகளை நிகழ்த்தியுள்ளார். 2019-இல்
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற்ற பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டில்
Contributions of Tamil to Nostratic Studies என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை
வழங்கியுள்ளார். மேலும், அதே மாநாட்டில், 'பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் -
இந்தோ ஐரோப்பிய உறவு', என்ற இவரது நூல் தமிழ், ஆங்கிலம் என இரண்டு
மொழிகளிலும் வெளியிடப்பட்டது.
இவரின் 'தாய் - தமிழ்த்தாய்' என்ற தலைப்பில் வலையொளியில் வெளிவந்த பத்துத்
தொடர் மூலமொழி ஆய்வுரைகள் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தமிழ்ச் சமூகத்திடையே
சென்றடைந்து பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன.
இத்தகைய அரும்பணி செய்யும் தமிழறிஞர்கள் பலரும் அரசாலோ, மக்களாலோ
கண்டுகொள்ளப்படாமல் அவர்தம் பணி உலகிற்கு தெரியாமல் அவர்களுடனே மாண்டும்
போயிருக்கிறது என்பது வருந்தத்தக்கது. கல்லூரிப் பணிக்கு பிறகும் தமிழின் பெருமையை
உலகறிய இடையறாது உழைத்து வரும் முனைவர் கு. அரசேந்திரன் அவர்களைப்
பாராட்டுவதும் அவருக்குத் துணை நிற்பதும் தமிழர்க் கடனாகும்.
வருகிற 16 -2 -2022 முதல் 6-3-2022 வரை நடக்கவிருக்கும் சென்னை நூல்
கண்காட்சியில் அரசேந்திரன் அவர்களின் பழைய மற்றும் புதிய நூல்கள் விற்பனைக்கு
வைக்கப்படவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

Writer of this artice.

 

 

 

 

 

 

 

 

- கவிதா சோலையப்பன்
துபாய்