உலக செவித்திறன் தினம்

உலக செவித்திறன் தினம்
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு
ஆண்டும் மார்ச் 3 ஆம் தேதியை உலக செவித்திறன் தினமாகக்
கடைபிடிக்கிறோம். ஒரு பெண் கர்ப்பமான மூன்றாம் மாதம் முதல் சிசுவின்
கேட்கும் திறன் வளர்கிறது. குழந்தை கேட்கும் முதல் சத்தம் தாயின் இதயத்
துடிப்பு. இக்காலத்தில் அப்பெண் நல்லசெய்திகளைக் கேட்டு,
நன்மையானதை உள்வாங்கவேண்டும். ஏனென்றால் அவள்
கேட்பதையெல்லாம் அக்குழந்தையும் கேட்கிறது என்பதை நினைவில்
கொள்ளவேண்டும்.
2019 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவன
கணக்கெடுப்பின்படி 46.6 கோடிமக்கள் செவித்திறன் குறைபாடுகளுடன்
இருப்பதாகவும் இதில் 34 லட்சம் பேர் குழந்தைகள் என்றும் தெரிய
வந்துள்ளது. அதாவது 100 பேரில் 5 பேருக்கு காது கேட்பதில் குறைபாடு
உள்ளது. உலகில் பிறக்கும் 1000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு
பிறவியிலேயே காது கேளாத குறைபாடு உள்ளது. அதுவே இந்தியாவை
பொறுத்தவரை 1000 பேரில் 2 பேர் என்பதும் குறிப்பிடதக்கது.
குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் செவித்திறன் குறைபாடு இருப்பது
கண்டறியப்பட்டால், அரசு மருத்துவமனையில் காக்ளியர் இம்பிளாண்ட்
அறுவை சிகிச்சையை இலவசமாக செய்துகொள்ளலாம்.
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் மரபணு
குறைபாடுகளாலும், சில நோய் தொற்று மற்றும் வேறு சில நோய்களுக்காக
மருந்து உட்கொள்ளுவதாலும் பிறக்கும் குழந்தைகளுக்கு செவித்திறன்
குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும்
தட்டம்மை, மூளைக்காய்ச்சல், காதில் சீழ் வடிதல் அதன் தொடர்ச்சியான
வியாதிகள், விபத்துகள், தலைக்காயம், அதிக சத்தம் உருவாகும் கலாசார
விழாக்கள், இரவு நேர கிளப்புகள் மற்றும் பார்களில் ஏற்படும் சத்தங்கள்,
வயது முதிர்வு, காதில் மெழுகு மற்றும் காதில் தவறுதலாக போடப்படும்
பொருள்கள் ஆகியவற்றால் காது கேளாமை ஏற்படலாம்.
இந்தியாவைப் பொறுத்த வரை பெரும்பாலான காது
கேளாமைக்கான காரணங்கள் 65 சதவீதம் தவிர்க்கப்படக்கூடிய பட்டியலில்
இருக்கிறது. எனவே செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிவரும்
மருத்துவ உதவிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களது
வாழ்வை மேம்படுத்த முயற்சி செய்யவேண்டும். பிறக்கும் அத்தனை
குழந்தைகளுக்கும் காது கேட்கும் திறன் சரியாக இருக்கிறதா என்பதை
பரிசோதிக்க ‘ஓ.ஏ.இ’ கருவிகள் மூலமாகவும், அதில் ஏதேனும் சந்தேகம்
4
ஏற்பட்டால் ‘பி.இ.ஆர்.ஏ’ டெஸ்ட் மூலமாகவும் அறிந்துகொண்டு
தேவைப்படும் குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்ப்ளான்ட்’ கருவி பொருத்தி
மறுவாழ்வு அளிக்கலாம்.
இந்த உலக செவித்திறன் நாளில் வாகன சத்தங்களை
குறைப்பது, ஒலி பெருக்கிகளின் தரத்தை ஆராய்ந்து கட்டுப்பாட்டில்
வைப்பது, காதில் வைக்கும் ஒலிப்பான்களை கட்டுப்பாட்டுடன்
உபயோகப்பது, தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு அதிக ஒலி
பாதிப்பு இல்லாமல் தற்காத்துக் கொள்வது, தேசிய காது கேளாமை தடுப்பு
மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் குழந்தைகளை பரிசோதனைக்கு
உட்படுத்துவது, இதற்கென ஏற்படுத்தியுள்ள அரசு திட்டங்களை மக்களிடம்
கொண்டு சேர்ப்பது, நெருங்கிய இரத்த உறவு திருமணங்களை தவிர்த்து
போன்றவையால் நமது கேட்கும் திறனையும் காப்பாற்றிக் கொள்ள
வேண்டும் என்று முடிவு எடுப்போம்.