வாழ்வியல் மொழியாக ஓமனில் தமிழ்!
ஓமன் வாழ் தமிழ் ஆர்வலர் திருமதி ராமலட்சுமி கார்த்திகேயன் அவர்கள் ‘ஓமனில் தமிழர் வாழ்வியல்’ எனும் தலைப்பில் தமிழ்க்கூடலுரை நிகழ்த்தினார்.
அவர் தம் உரையில், “தமிழ் வாழ்வியல் மொழியாக ஓமன் நாட்டில் உள்ளது. ஓமன் பள்ளிகளில் தமிழ் மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பள்ளிகளில் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்குகின்றனர். ஓமன் வாழ் தமிழர்கள் தமிழில் உரையாடுவதற்குப் பிள்ளைகளை ஊக்குவிக்கின்றனர். அவர்கள் தம் வீடுகளில் வட்டார வழக்கு மொழியில் உரையாடுகின்றனர். தமிழர் பண்பாட்டு விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
திருக்கார்த்திகை விழா, தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள் ஆகியவை கொண்டாடப்படுகிறது. செக்கு எண்ணெய், கருப்பட்டி ஆகிய தமிழர் உணவுகளை இந்தியாவிலிருந்து வாங்குகிறோம். தமிழர்கள் ஒருங்கிணைந்து நட்பு உணர்வுடன் உதவிக்கொள்வது, விழாக்களை ஒற்றுமையுடன் கொண்டாடுவது, உணவு சமைத்து உண்பது, நண்பர்களுடன் விடுமுறைகளைக் கழிப்பது மட்டுமல்லாது இவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வது குறிப்பிடத்தக்கது.
ஓமனில் வெப்பமான வறண்டநிலையே காணப்படுகிறது. அதனால் பணியில் இருப்பவர்களுக்கு அரசால் குளிரூட்டப்பட்ட கூடாரம், மருத்துவ வசதி, உணவு ஆகியவை தரப்படுகிறது. ஆறுகள் இங்கு வாதி என்று அழைக்கப்படுகிறது. மாதம் ஒருமுறை தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடுகிறோம். இந்தியர்களுக்கென தனி இட ஒதுக்கீடு ஓமன் அரசால் வழங்கப்பட்டுள்ளது. கனிவும் மனிதநேயம் மிக்க தனித்துவம் பெற்றவர்கள் ஓமன் மக்கள்” என்று குறிப்பிட்டார்.