நிறை அன்போடு

இறைப்பற்றுள்ளோரிடம் ஆண்டவரின் கொடைகள் நிலைத்து நிற்கும்; அவரது பரிவு என்றும் வெற்றியைக் கொணரும் - சீராக் 11:17. இறைப் பற்று என்பது கடவுள்மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு. அந்த இறை பற்று அந்தஸ்து, படிப்பு, இவை பார்த்து ஒருவரிடம் வருவதில்லை. ஆண்டவர் மீது கொண்ட அசைக்க முடியா அன்பின் தாகத்தால் வருகிறது. அப்படிப்பட்ட அன்பின் தாகம் கொண்டவர்களிடம் ஆண்டவர் வைத்துள்ள பரிவினால் அருள் வரங்கள் நிறைந்து நிற்கும். அது அவருடைய வாழ்வை வெற்றிக்கு வழிநடத்தும். 

பேதுரு  ஒரு  மீன் பிடிக்கும் தொழில் செய்பவர். படிப்பறிவு இல்லாதவர். ஆனால் இயேசு கூப்பிட்டவுடன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆண்டவர் பின்னால் போய் விடுகிறார். அழைத்தலுக்கு கீழ்ப்படிந்தார். இயேசுவை அன்பு செய்தார். இயேசுவை எனக்கு தெரியாது என மூன்று முறை மறுதலித்த போது கூட தவறை உணர்ந்து மனம் கசந்து அழுகிறார். அன்புக்கு விரோதமாக தவறு செய்யும் போது உணர்த்தப்படுகிறார்.

மூன்றாம் முறை இயேசு பேதுருவிடம் நீ என்னை அன்பு செய்கிறாயா என்று கேட்ட போதும் நான் உம்மை அன்பு செய்கிறேன், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார்.  நான் உம்மை அன்பு செய்கிறேன் என்று எந்த வித சந்தேகமும் இன்றி சொல்கிறார்.

இது தான் உண்மையான இறை அன்பு. இந்த அன்புக்கு கிடைத்த கொடைகள் தான் பின்னாளில் அவர் ஆலய வாயிலில் இருந்த மனிதனை நடக்க வைத்ததும் அவருடைய அருளுறையை கேட்டு ஏறத்தாழ 3000 பேர் திருமுழுக்கு பெற்றதும். பயந்து நடுங்கிய அவர் பின்னாளில் ஆவியானவரின் துணையோடு நற்செய்தி அறிவித்தார். திருச்சபையை பொறுப்பேற்று வழி நடத்தினார். நாமும் இறை பற்று கொண்டு ஆண்டவரின் அருட்கொடைகளை நிறைவாக பெற்று மகிழ்வோம். 

ஜெபம்: அன்பு ஆண்டவரே நான் உம்மை அன்பு செய்கிறேன். இன்னும் அதிகமாக உம்மை செய்யவும். எந்த சூழ்நிலையிலும் உம்மை விட்டு பிரியாது இருக்கவும் எனக்கு ஆவியானவரின் அருள் தாரும்.  என்னோடு இரும். உம் அருட் கொடைகளை நான் பெற்று மகிழ வரம் தாரும். ஆமென்.

Tamil Survey Popup Image