சொந்த ஊர் திரும்ப உதவிய முதுவை இளைஞர்
மலேசிய சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த 1,100-க்கும் மேற்பட்ட இந்திய கைதிகள் சொந்த ஊர் திரும்ப முதுவை இளைஞர் ஜாஹிர் உசேன் உதவியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் ஜாஹிர் உசேன். இவர் பிரவாசி லீகல் செல் என்ற சட்ட அமைப்பின் மலேசியா ஒருங்கிணைப்பாளராகவும், தன்னார்வலராக இருந்து வருகிறார். மேலும் சிங்கப்பூர் நாட்டின் ஒருங்கிணைப்பாளராக கூடுதல் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இவர் தற்போது மதுரையில் குடியிருந்து வருகிறார்.
இந்த அமைப்பின் மூலம் மலேசிய தடுப்பு முகாம் மற்றும் சிறைகளில் தண்டனை அனுபவித்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிரமப் படும் இந்தியர்களை அந்த நாட்டு அரசின் ஒத்துழைப்புடன் சொந்த ஊர் அழைத்து வர தேவையான முயற்சிகளை மேற்கொண்டார். இந்த பணிகளுக்கு மலேசியாவில் உள்ள இந்திய ஹைகமிஷனும் உறுதுணையாக இருந்துள்ளது.
இதன் பயனாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பஞ்சாப், உத்திர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கைதிகள் 1,100-க்கும் மேல் சொந்த ஊர் திரும்ப உதவியுள்ளார்.
இவர்களில் விமான கட்டணம் செலுத்த முடியாத பயணிகள் பலருக்கு இலவசமாக மலேசிய அரசின் ஒத்துழைப்புடன் விமானம் மூலம் திரும்ப அழைத்து வரப்பட்டனர்.
இத்தகைய சிறப்பான சாதனைக்கு சொந்தக்காரராக இருந்து வரும் மண்ணின்மைந்தர் ஜாஹிர் உசேனை பாராட்டுவதில் பெருமிதம் கொள்கிறோம். இதுபோன்ற தன்னலமற்ற பணிகளில் ஈடுபட்டு வரும் அவருக்கு அரசின் விருது கிடைக்க பிரார்த்திப்போம்.