நம் எல்லோருக்கும் தந்தை ஒருவரே | ஆர்.கே. சாமி | VeritasTamil

8 பிப்ரவரி 2024
பொதுக்காலம் 5ஆம் வாரம் - வியாழன்
முதல் அரசர் 11: 4-13              
மாற்கு 7: 24-30


நம் எல்லாருக்கும் தந்தை ஒருவன்.

 
முதல் வாசகம்.


முதல் வாசகம் எவ்வாறு ஞானம் நிறைந்த அரசன் சாலமோன் தன் மனைவியரின் பக்கம் சாய்ந்து, உண்மை கடவுள் மீதான தனது நம்பிக்கையை மறுத்து, அன்னிய தெய்வங்களுக்காகக் கோவில்கள் கட்டி,  வழிபட்டலானார் என்பதை விவரிக்கிறது. 

சாலமோன் எவ்வளவு உண்மையுள்ளவராகவும் ஞானமுள்ளவராகவும் இருந்தார் என்று நேற்று மறைநூலில் வாசித்தறிந்தோம். இன்று அவரைப்பற்றிய முற்றிலும் மாறுபட்ட செய்தி தரப்பட்டுள்ளது. அவர்   தனது பல வெளிநாட்டு மனைவிகளின் தாக்கத்திற்கு  அடிபணிந்து, ஒரே கடவுளை வழிபடுவதை  விட்டுவிட்டு, தனது மனைவிகளின் தெய்வங்களை வழிபடலானார்.   அதனிமித்தம், சாலமோனின் துரோகத்தின் காரணமாக, அவரது மகன் பன்னிரண்டு கோத்திரங்களின் முழுமையான ஆதரவையும், அரச அதிகாரத்தையும், கட்டுப்பாட்டையும் இழக்க நேர்ந்தது.  

ஆனாலும், தாவீது அரசரின் நல்லாட்சியை மனதில்கொண்டு,   அரசு முழுவதையும் பறித்துவிடாமல், எருசலேம் இருந்த யூதேயாவையும்  மற்றொரு குலமான பென்யமின் குலத்தையும் தவிர மற்றனைத்தையும் கடவுள் எடுத்துவிட்டார். நாடு இரண்டுபட்டது. 


நற்செய்தி


இன்றைய நற்செய்தியில் இயேசுவுக்கும் ஒரு புறவினத்துப் பெண்ணுக்குமிடையிலான ஓர் உரையாடலை கேட்கிறோம். இயேசு  தீர் பகுதிக்குள் சென்றார். தீர் மற்றும் சீதோன் என்பன புறவினத்தார்  வாழும் பகுதி.   எனவே பெரும்பாலான யூதர்கள் அசுத்தமாக அல்லது தீட்டாகக்  கருதிய இப்பகுதி மக்களிடையே  இயேசுவும் சீடர்களும் சென்றார்கள்.

அவ்வேளையில், ஒரு புறவினத்துப் பெண் இயேசுவை அண்டி வந்து, அவரது  காலில் விழுந்து, அவளது மகளைப் பிடித்திருக்கும்  பேயை ஓட்டிவிடுமாறு  பணிந்து வேண்டினாள்.  புறவினத்தாரை வழக்கமாக யூதர்கள் மதிப்பதில்லை. அவர்களை ‘நாயிக்குச்' சமமாக கருதினார்கள். அதே எண்ணம் அவரது திருத்தாதர்கள் மனதிலும் இருந்திருக்கலாம். எனவே, மேலும் ஒரு சமூகப் புரட்சிக்கு இயேசு வித்திடுகிறார்.

அப்பெண்ணோடுடனான உரையாடல் தொடர்கிறது.  உதவி கோரி வந்த அப்பெண்ணை இயேசு  யூதர்கள்’ பயன்படுத்திய ‘நாய்கள்' என்ற சொல்லால் புறக்கணிப்பதைப்போல் மறுக்கிறார். ஆனால். அவள் இயேசுவை விட்டப்பாடில்லை. எஜமானரின் மேசையில் இருந்து விழும் உணவை நாய்க்குட்டிகள்  உண்ணுவது இயல்பான ஒன்று என்று மறுமொழி கூறி, உதவிக்கு வேண்டுகிறாள். 

அப்பெண் இயேசுவில் கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையின் பொருட்டு மகளைக் குணப்படுத்துகிறார்.


சிந்தனைக்கு.


சாலமோனின் பிற தெய்வ வழிபாடு அவரது ஆட்சிக்கு உலை வைத்ததோடு, அவரது ஞானத்தை சீர் குலைத்தது. அவர் தலையில் அவரே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டார்.   இவ்வாறு அவர் ஒரே கடவுள் வழிபாட்டிலிருந்து தடம்புரண்டதால், அவரது ஒரே கடவுள் நம்பிக்கை கேளிக்கூத்தானது. 
பின்னர், நாடு பிளவுப்பட்டது. அன்னியருக்கு அடிமைப்பட்டது. 

பிளவுப்பட்ட இனத்தைக் கூட்டி சேர்க்க கடவுள் தன் மகனாகிய இயேசுவை  மீட்பராக அனுப்பினார். அவரையும் ஏற்க மறுத்தது. இந்நிலையில், இன்று இயேசு யூதரல்லாத ஒரு  புறவினத்துப் பெண்ணை, அவள் வாழும் பகுதியில் சந்திக்கிறார்.

அவள் இயேசுவின் பாதத்தில் விழுந்து வணங்குகிறார். யூதரிடம் காணாத அன்பை, நம்பிக்கையை இயேசு அந்த கானானிய,  கிரேக்கப் பெண்ணிடம்  கண்டார். இயேசு, அவரிடம் தான் யூதர்களிடமே வந்தார் என்றும், யூதர்கள் ‘நாய்க்குச் சமமாகக் கருதும் கானானியரிடம் அல்ல என்கிறார். 

உரையாடல் அத்தோடு முடிந்துவிடவில்லை. “மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே'' என்று மேலும் கூற, இயேசுவின் பார்வை திரும்புகிறது. முதலில் யூதருக்கும், அடுத்துக் கிரேக்கருக்கும் — அதாவது நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவருக்கும் — அந்த மீட்பு உண்டு (உரோ 1:16) என்று புனித பவுல் அடிகள் கூறியதைப்போல, இயேசு அவளது நம்பிக்கையின் பொருட்டு மகளைக் குணப்படுத்துகிறார்.

நாமும் அந்தக் கானானியப் பெண்ணைப் போல் புறவினத்தார்தான். அவள் இயேசுவிடம் சரணாகதியடைந்தாள். இயேசுவின் அன்பைப் பெற்றாள். இன்று நமது நம்பிக்கை எப்படியுள்ளது? நம்மில் பலர் சாலமோன் போல அன்னிய தெய்வங்களை நாடுவோரும் உண்டு. அன்னிய தெய்வங்களுக்குப் படையல் போடுவோரும் உண்டு. பிற சமய  சாஸ்திர சம்பிரதாயங்களைக்  கடைப்பிடிப்போரும் உண்டு. ஆனால், ஞாயிறுதோறும் நற்கருணைக்கு வரிசையில் நிற்பர். 

தந்தை தாவீது வழிபட்ட கடவுளை, தனக்கு ஞானத்தை வழங்கிய கடவுளை சாலமோன் புறந்தள்ளியதால் ஒரு நாடே சர்குலைந்தது. சாலமோனின் வாழ்வு நமக்கு நல்ல பாடமாக இன்று நமக்குத் தரப்பட்டுள்ளது. திருமுழுக்குப் பெற்றோர் அனைவரும் ஓரு குலம் என்பதை மறந்து, வேறுபடுத்தி பார்ப்போருக்கும் இன்றைய நற்செய்தி ஒரு பாடமாக அமைந்துள்ளது. 

கடவுளிடம் விடாமுயற்சியோடு. தாழ்ந்துப் பணிந்து மன்றாடுவோரை அவர் கைவிடுவதில்லை என்பதும் நமக்கான படிப்பினையாக உள்ளதை ஏற்று மிகழ்வோம். 


இறைவேண்டல்.


இயேசுவே, எனது  மீட்பரே,  நானும் நீர் தேர்ந்துகொண்ட உமது சீடர் என்பதை  உணர்ந்து, மனித மாண்பை மதித்து வாழ்ந்திட அருள்தாரும். ஆமென்.

 
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Comments

Rosary James (not verified), Feb 08 2024 - 11:26am
Very nice 👌 🙏🙏🙏
Rosary James (not verified), Feb 08 2024 - 11:26am
Very nice 👌 🙏🙏🙏
Rosary James (not verified), Feb 08 2024 - 11:26am
Very nice 🙏🙏🙏