வானியல் அறிஞரின் சோக முடிவு


பண்டைய உலகம் தந்த அறிவியல் வல்லுனர்களின் வரிசையில் நாம் மறவாது அறியப்பட வேண்டியவர் கலிலியோ. இவர் இத்தாலி தந்த அறிஞர். இத்தாலியில் சாய்ந்த கோபுரம் உள்ள பைசா நகரே இவர் பிறப்பிடம். இவரது காலம் 1564-1642.

1564 - பிப்ரவரி 15 இவர் பிறந்த நாள். சிறுவயதிலேயே அறிவுக் கூர்மையும், உற்றுநோக்கும் ஆற்றலும் கொண்டிருந்தார். இத்திறனே இவரின் அறிவியல் ஆய்வுக்கு வழிகாட்டியது.

சிறுவயதில் இவர் மாதாகோயில் செல்லும்போது, அங்கே ஏற்றி தொங்கவிடப்பட்ட விளக்கினைக் கண்டார். சங்கிலியில் தொங்கவிடப்பட்ட விளக்கு சிறிது நேரம் இங்கும் அங்கும் அசையும் சாதாரண நிகழ்வை இவர் கண்டார். கூர்ந்து கவனித்தார். அப் போது அவருக்கு வயது 17 தான். அந்த ஊசல் ஆட்டம்

கால அளவு ஒன்றாக இருப்பதை அறிந்தார். அதை அறிய (கடிகாரம் கண்டுபிடிக்கப்படாத காலம்) தன் நாடித் துடிப்பை வைத்து ஆய்வு செய்தார். ஊசலாட்டம் எளிதாக இருப்பினும், சிறியதாய் இருப்பினும், ஒரே கால அளவு கொண்டிருப்பதைக் கண்டறிந்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு நாடித்துடிப்பை அளக்கும் நாடிமானி (Pulse meter) கருவியைக் கண்டுபிடித்தார்.

1589இல் பைசா நகரப் பல்கலைக் கழகத்தில் கணித ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அங்கே பணி செய்த போது தான் அரிஸ்டாட்டிலின் கருத்து ஒன்றினை பொய் என்று நிருபித்துக் காட்டினார். வெவ்வேறு எடையுடைய இரு பொருளை மேலிருந்து போட்டால் கனமான பொருள் முதலிலும், இலேசான பொருள் பிறகும் விழும் என்பதே அரிஸ்டாட்டில் கருத்து. இது நீண்டகாலம் நம்பப்பட்டது. இவர் பைசா நகரின் கோபுரத்தில் ஏறி, இருவேறு எடையுள்ள இரு உலோகக் குண்டினை மேலிருந்து வீசி, இரண்டும் ஒரே சமயத்தில் விழுவதைக் காட்டி அரிஸ்டாட்டில் கருத்து பொய் என நிரூபித்தார். ஆனபோதும் பல பழைமைவாதிகள் இதனை நம்ப மறுத்தனர். அவர்கள் கொண்டனர். அதன் காரணமாக பைசா நகரப் பல்கலைக் கழகத்தில் இவர் பணி செய்யமுடியாத நிலையும் ஏற்பட்டது. பதவி விலகி, பிறகு பதுவாப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பணி புரிந்தார்.

பிறகு கலிலியோ வானவியல் ஆய்வில் அதிகம் கவனம் செலுத்தினார். 1609இல் ஒரு புதிய, நல்ல, பயனுள்ள தொலைநோக்கிக் கருவியை உருவாக்கினார். இதனைப் பயன்படுத்தி தினமும் விண்வெளியை ஆய்வு செய்தார்.

1610இல் முதன்முதலாக சனிக்கிரகத்தைச் சுற்றி யுள்ள வளையத்தைக் கண்டுபிடித்தார்.

பிறகு வியாழன் (Jupiter) கிரகத்திற்கு நான்கு துணைக் கோள்கள் உண்டு என்பதை முதன் முதலாக அறிந்து உலகுக்கு எடுத்துரைத்தார்.

அதேபோல் சூரியனில் புள்ளிகள் இருப்பதையும் இவரே கண்டுபிடித்துக் கூறினார்.

கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கி மிகமிக அற்புதமானது. இதன் பெருமையை கேள்விப்பட்ட வெனிஸ் அரசன் கலிலியோவை அழைத்தார். இவரும் அவரது அரசவைக்கு தன் தொலைநோக்கியை எடுத்துச் சென்று காட்டினார். அனைவரும் அதைப் பார்த்து அதிசயித்துப் பாராட்டினர். அதனை தேவாலயத்தின் உச்சிக்கு எடுத்துச் சென்று தொலைவில் வரும் கப்பலைப் பார்த்துக் களித்தனர். புகழ்ந்தனர்.

இவர் கோபர்நிக்கஸ் கருத்தை நம்பினார். இவ்வுலகின் மையமாக விளங்குவது பூமியல்ல, சூரியனே என்பது கோபர்நிக்கஸ் கோட்பாடு. இதை ஏற்ற கலிலியோ, மேலும் பூமி ஒரு கோள். அது சூரியனைச் சுற்றுகிறது என்றும் கூறினார். இதனைப் பலர் ஏற்றனர். ஆனபோதும் பழைமைவாதிகளின் எதிர்ப்பு இவருக்கு பதுவாப் பல்கலைக் கழகத்திலும் இருந்தது. இக்கருத்து பைபிள் கருத்துக்கு எதிரானது என்று கிறிஸ்துவர் எதிர்ப்பும் இவருக்கு சேர்ந்தது. 'இவர் கடவுளை மறுப் பவர்' எனக் குற்றமும் சாட்டி, அழிக்க நினைத்தனர். சூரியன் உலகின் மையமானது என்ற இவர் கருத்தை முட்டாள்தனமானது, பொய் என மறுத்தனர். அதோது கோபர் நிக்கஸ் கருத்தை பரப்புவது தவறு எனவும் கூறினர். ஆனால் கலிலியோ துணிவாய் 1616இல் இது உண்மை எனவும் நிரூபித்தார். ஆனாலும், நீதிமன்றம் இவரை விசாரித்தது. நீதிமன்றம் இக்கருத்தை தவறு என்று கூறிடவேண்டும்; இல்லையேல் சிறை என அறிவித்தது. சிறைக்கு அஞ்சி கலிலியோ, உண்மையை தவறு என ஒத்துக் கொள்ளவே, நேரிட்டது. ஆன போதும் அவரது மனசாட்சி உறுத்தவே, மீண்டும் தன் கருத்தை 1632இல் வலியுறுத்தினார். இதனை 'உலகத்தின் இரு முதன்மையான முறைமைகளைப் பற்றிய உரையாடல்' (Dialogue concerning the two principal systems of the world) என்ற நூல் மூலம் வெளியிட்டார். இதற்காக 70 வயதான அவ்வரிய அறிவியல் மேதையை சிறையில் இட்டனர்.

ஜான் மில்டன் இவரை சிறையில் சந்தித்தார். இவரின் கண் ஒளி ஆய்வால் பறிபோனது. காதும் கேளாது போயிற்று. தனது 78ஆம் வயதில் இவர் 1642ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 8ஆம்தேதி காலமானார். பிறகு நீண்டகாலம் கழித்தே அவர் உடல் புதைக்கப்பட்டு பிளாரன்ஸ் நகரில் நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டது. இதுவே அவ்வரிய வானியல் அறிஞரின் சோக முடிவு. வானியல் ஆய்வுக்கு வழிகாட்டிய இவரை வரலாறு என்றும் மறக்கவே முடியாது எனக் கூறலாம்.

Add new comment

2 + 1 =