வாக்கின்படி இருந்தது
அவருடைய பணியாளன், “இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?” என்றான். அவரோ, “இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் ‘உண்ட பின்னும் மீதி இருக்கும்’ என்று ஆண்டவர் கூறுகிறார்” என்றார் - 2 அரசர்கள் 4-43. ஒரு சமயம் நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது இறைவாக்கினர் எலிசாவின் குழுவினருக்கு பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கொண்டு வந்தார். எலிசா, “மக்களுக்கு உண்ணக் கொடு” என்றார்.
அந்த சமயத்தில் எலிசாவின் பணியாள் இதை அத்தனை பேருக்கும் எப்படி பரிமாறுவேன் என்கிறார். அதற்கு எலிசா உண்ணக் கொடு. உண்ட பின் மீதி இருக்கும் என்கிறார். அவ்வாறே அவன் அவர்களுக்குப் பரிமாற, அவர்கள் உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது.
நம் வாழ்க்கையில் கூட பல நேரங்களில் நம் கையில் கொஞ்சம் தானே பணம் உள்ளது. எப்படி நான் இந்த மாதத்தை கடப்பேன். எப்படி இந்த காரியத்தை பண்ணுவேன். எப்படி இந்த மருத்துவ செலவை சந்திப்பேன் என திகைத்து நிற்கிற தருணங்கள் பல உள்ளது. ஆனால் ஆண்டவரை ஒவ்வொரு நாளும் நாம் தேடினால் அவர் நம்மோடு பேசி சிரியவற்றிலேயே நிறைவு காண செய்வார். அதற்கான வழிகளை நமக்கு காட்டுவார். உதவிகளை கட்டளை இடுவார். நம்புவோம் இயேசுவை. சொல்லுவோம் அவர் நாமத்தை.
ஜெபம்: அன்பான ஆண்டவரே, நீர் கடல் நடுவே பாதை அமைத்து, பாறையிலிருந்து தண்ணீர் வரவைத்து, வனாந்தரத்தில் மன்னா பொழிகிற இறைவன். எங்கள் வாழ்வையும் மாற்ற உம்மால் முடியும். எங்கள் தேவைகளை நிறைவேற்றும். ஏழை எளிய மக்களின் உணவு உடை உறைவிடம் இந்த தேவைகளை சந்தியும். எல்லோருக்கும் அன்றாட தேவைகள் எல்லாம் கிடைக்க செய்யும். ஆமென்.