பாடுகளின் வெள்ளி

இயேசு கூறிய இறுதி வசனங்கள்.

1. மன்னிக்கிற இறைவன் இயேசு. இயேசு, “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்று சொன்னார் - லூக்கா 23:34. மனித இனத்தின் மீட்புக்காக  இயேசுவைச் சிலுவையில் பலியாக்கக் கடவுள் சித்தம் கொண்டிருந்தார். ஆகவேதான் இந்தச் சம்பவம் நடந்தது. இயேசுவை சிலுவையில் அறைந்த அனைவரையும் இயேசு மன்னித்து விட்டார். தந்தையிடமும்  பரிந்துரை செய்கிறார். 

2 . வேண்டுதலுக்கு பதில் கொடுக்கும் இறைவன். இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார் - லூக்கா 23:43. நல்ல கள்வனோ தான் பாவி என்றும், சாகும் முன்பு கடவுளின் இரக்கத்தையும், மன்னிப்பையும் பெற வேண்டும் என்றும் உணருகிறான். பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்றான். உடனே இயேசு அந்த பாடுகளின் வேளையிலும் அவனுடைய ஜெபத்தை கேட்டு பதில்  கொடுத்தார்.

3. பாதுகாப்பு கொடுக்கும் கடவுள். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார் - யோவான் 19:26-27. சிலுவையில் தொங்கும் அந்த  வேதனையின் நேரத்தில்கூடத் தன்னுடைய தாயை இந்த பொல்லாத உலகில் தனியே விட்டு செல்ல இயேசு விரும்பவில்லை. தன் தாயை யோவானிடத்தில் ஒப்படைத்தார். அதே போல கொழைகளான சீடர்களும் தனித்து விடப் படுவார்கள் என்று சீடனை தன் தாயிடம் ஒப்படைத்தார்.

4. பிறருடைய துன்பகளை சுமக்கும் தெய்வம். மூன்று மணியளவில் இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார் - மத்தேயு 27:46. உலகத்தில் எவரும்  இப்படிப்பட்ட ஓர் கோர மரணத்தை அனுபவித்ததில்லை, பாவம் முழுவதும் அவர்மீது அன்றைக்கு சுமத்தப்பட்டது. அந்தப் பாவத்திற்கான தண்டனையையும் அவர் தம்மீது ஏற்றுக் கொண்டார். எனவே சொல்லொண்ணா வேதனையை அனுபவித்த இயேசு இவ்வாறு கதறினார்.  

5. ஆத்தும தாகம் கொண்ட ஆண்டவர். “தாகமாய் இருக்கிறது” என்றார் - யோவான் 19:28. இது அவருக்கு வேதனைகளால் ஏற்பட்ட மரண தாகம் மட்டுமல்ல. மனித இனத்தின் மீது கொண்ட அன்பின் தாகம். ஆத்தும தாகம்.

6. பாதியிலேயே விடுபவர் அல்ல. நிறைவேற்றுகிற இறைவன். இயேசு, “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார் - யோவான் 19:30. நிறைவேறிற்று என்கிற அந்த ஒரு வார்த்தையில் பல அடங்கியிருக்கின்றன. சிலுவையைக் குறித்து கடவுள் திட்டமிட்டு முன்னறிவித்திருந்த எல்லாம் நிறைவேறி முடிந்தது. இயேசு ஆவி, ஆத்துமா, உடலில் பட்ட பாடுகள் முடிந்தது. இயேசுவின் உலக வாழ்க்கை முடிந்தது. மனுக்குலத்தின் மீட்பிற்காக அவர் செய்த எல்லாம் முடிந்தது.

7. அர்ப்பணிக்கிற ஆண்டவர். தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார் - லூக்கா 23:46. இயேசு தம்முடைய பெலன், சக்தி எல்லாவற்றையும் சிலுவையில் இழந்து ஒன்றும் செய்ய இயலாதவராய் மரணம் அடையவில்லை. அவர் உயிரை உருவாக்குகிறவர். அவரிடமிருந்து யாரும் உயிரை எடுக்க முடியாது. அவரே அதைக் கொடுத்தால்தான் உண்டு. ஆகவே, அவரே அதை ஒப்புக்கொடுக்கிறார். அவர் தலையை சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். இவர்கள் சாகடித்ததால் அவர் சாகவில்லை. அவரே தம் ஜீவனை ஒப்புக்கொடுத்தார் என்பதே உண்மை.

ஜெபம்: எங்கள் பேரில் தயபாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயபாயிரும்.  தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே. ஆமென்.