நம்மை அழைக்கிறார்
நீரும் உம்மோடுள்ள இந்த மக்களும் களைத்துப் போவீர்கள். இதை உம்மால் தாங்க முடியாது; தனி ஆளாக இப்பணியை உம்மால் செய்யவியலாது - விடுதலைப் பயணம் 18-18. இந்த உலகத்தில் குடும்ப பாரம், பிள்ளைகளைப் பற்றிய கவலை, கடன் என எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்களால் நாம் சோர்ந்து போகிறோம். அவை நம் மன அமைதியை கெடுக்கிறது.
மோயீசனுக்கு ஏறக்குறைய இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை கானானுக்குள் வழிநடத்தும் பணி பெரிய கவலையாய் இருந்தது. ஒவ்வொன்றிலும் மக்கள் முறுமுறுத்தார்கள். அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்கும் பணியே பெரியதாக இருந்தது.
கடவுள் இஸ்ரேயலருக்குள் எழுபது பேரை தெரிந்துகொண்டு மோயீசனின் பணியின் பாரத்தை பகிர்ந்துகொள்ள செய்தார்
நாமும் நம் கவலை கண்ணீரை நாமே சுமந்து கொண்டிராமல் ஆண்டவர் திருமுன் இறக்கி வைப்போம். சுமை சுமந்து சோர்ந்து இருப்பவர்களே என்னிடம் வாருங்கள் என்று இரு கரம் விரித்தவராய் நம்மை அழைக்கிறார். நம் பாரங்களை அவரிடம் மனம் திறந்து சொல்லுவோம். ஆண்டவரிடத்தில் நம் உள்ளத்தின் கவலைகளையும் பகிர்ந்து கொள்வோம்.
ஜெபம்: ஆண்டவரே, கவலையோடும் கண்ணீரோடும் மனப்பாரத்தோடும் உம் திருமுன் வருகிறோம். எங்கள் துன்பங்களை குறைக்கும் சக்தி, அவற்றை இன்பமாக மாற்றும் வல்லமை உம்மிடம் தானே உள்ளது. ஆண்டவரே எங்களையும் எங்கள் உற்றார் உறவினரையும் நண்பர்களையும் உலக மக்களையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். ஆமென்.