சேர்த்து வைக்க

நீங்கள் அழிந்து போகாதபடி கைப்பற்றிய பொருள்களிலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் அழிவுக்குரியவற்றிலிருந்து எதையாவது கவர்ந்தால், இஸ்ரயேலின் பாளையத்தையும் அழிவுக்குரியதாக்கிக் கலங்கச் செய்வீர்கள். யோசுவா 6-18. ஆண்டவர்  நம்மை அழிவுக்கு எடுத்து செல்லும் பொருட்களை, அதாவது  ஆண்டவருக்கு விருப்பமில்லாத செயல்கள் மூலமாக வந்த பணம் பொருள் இவற்றிலிருந்து விலகி நில்லுங்கள் என கூறுகிறார்.

லஞ்சம், திருட்டு, பொய் பித்தலாட்டம் , பிறரை ஏமாற்றுதல் , தகாத உறவு, இவற்றின் மூலமாக வந்த செல்வம் அழிவுக்குறியது . இவ்வாறு நாம் பெற்ற செல்வம் நம்மை மட்டுமல்லாது நம் குடும்பத்தையும் அழித்து விடும் 

ஒரு முறை போர் நடந்த போது சவுலும் வீரர்களும் ஆகாகைக் கொல்லாமல் விட்டனர். மேலும் ஆடு மாடுகளில் முதல் தரமானவைகளையும் இரண்டாம் தரமானவைகளையும் ஆட்டுக் குட்டிகளையும், நல்லவை அனைத்தையும் அழிக்கவில்லை. அற்பமானவைகளையும் பயனற்றவைகளையும் முற்றிலும் அழித்துப் போட்டனர். நல்லவற்றை  தாங்கள் பயன்படுத்த எடுத்து வைத்தனர். இது ஆண்டவருக்கு விருப்பமில்லை, எனவே ஆண்டவர் சவுலை அரசனாக்கியதற்காக நான் வருந்துகிறேன். ஏனெனில் அவன் என்னை பின்பற்றாமல் விலகிவிட்டான். என் வார்த்தைகளின்படி நடக்கிவில்லை என்று சாமுவேலிடம் கூறுகிறார். இறுதியில் சவுல்  அவர் முடிவை அவரே தேடி கொண்டார்.

இதையே திருவள்ளுவரும் அழகாக கூறுகிறார்.

 "களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து 

 ஆவது போலக் கெடும்."

தகாத வழியில் சம்பாதித்த செல்வம் பெருகுவது  போல பெருகி இறுதியில் எல்லாவற்றையும் அழித்து விடும்.

ஜெபம்: ஆண்டவரே எங்களுக்கு உம் வழிகளை கற்றுத் தாரும்.   நாங்கள் தகாத வழியில் நடக்காது உம் பிள்ளைகளாக நீர் எங்களுக்கு கொடுக்கும் ஆசீர்வாதம் போதும் என்று நேர்மையோடு வாழ்ந்து எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் உம் கண்களில் இரகத்தையும் உம்  கையின் ஆசீர்வாதத்தையும்  சேர்த்து வைக்க அருள் தாரும். ஆமென்.