கேட்கும் பாக்கியமே
உண்மையுள்ள மனிதர் நலன்கள் பல பெறுவார்; விரைவிலேயே செல்வராகப் பார்க் கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார். நீதிமொழிகள் 28-20. நாம் ஆசீர்வாதத்தை விரும்பினால் உண்மையுள்ளவர்களாய் வாழ வேண்டும். இன்று உலகம் உண்மையற்ற நிலைமையை நோக்கி ஓடுகிறது. எதற்கெடுத்தாலும் பொய். பொய் சொல்லி காரியத்தைச் சாதிக்க எண்ணுகிறார்கள்.கணவன் மனைவிக்குள் உண்மை இல்லை. பெற்றோர் பிள்ளைகளுக்குள் உண்மை இல்லை.
உண்மையில்லாததினால்தான் அநேகருடைய வாழ்க்கையில் ஆசீர்வாதமில்லை.
கடவுள் உண்மையுள்ளவர். அவருடைய வார்த்தைகளெல்லாம் உண்மையுள்ளவைகள். அவை ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கின்றன. அவர் பொய்யுரையாத, வாக்கு மாறாத கடவுள். நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவர் . வாக்களித்த அவர் நம்பிக்கைக்கு உரியவர்.
நாம் நம்முடைய நேரத்தை இறைவனுக்கு கொடுப்பதில் உண்மையுள்ளவர்களாய் இருக்கிறோமா? பண விஷயத்தில் உண்மையுள்ளவர்களாய் இருக்கிறோமா?அழைக்கப்பட்ட அழைப்பில், குடும்பத்தில், சமுதாயத்தில், வேலை செய்யும் இடத்தில், உண்மையுள்ளவர்களாய் இருக்கிறோமா?
கடவுளின் குடும்பத்தினர் அனைவரிடையேயும் மோசே நம்பிக்கைக்குரியவராய் இருந்தார்.
ஜெபம்: அன்பு ஆண்டவரே, நாங்களும் நம்பிக்கைக்கு உரியவர்களாக உண்மையான வாழ்வு வாழ விரும்புகிறோம். நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்னும் வார்த்தையை உன்னிடமிருந்து கேட்கும் பாக்கியத்தை எங்களுக்கு தாரும். ஆமென்.