ஆண்டவரோடு பேச
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். திருப்பாடல்கள் 63.1-2.
அதிகாலையிலிருந்தே ஆண்டவருடைய உடனிருப்பை நமக்குள் கொண்டு வர வேண்டும். தூங்கி எழுந்ததும் முதல் எண்ணம் ஆண்டவராக இருக்க வேண்டும். அன்பு இயேசுவின் முகத்தை நோக்கிப் பார்ப்போம் . நம்மில் பலர் இந்த நாள் எப்படி கழியுமோ என்ற பயத்தோடு எழுந்திருக்கிறோம். நாம் அதிகாலை வேளையை ஆண்டவரோடு ஆரம்பித்தால், நாள் முழுவதும் ஒரு சமாதானம், அமைதி நம்மை சூழ்ந்துக் கொள்ளும்.
அந்த நாள் முடியும்போது ஒரு நிம்மதி நம் உள்ளத்தில் நிலவியிருக்கும்.
ஆண்டவர் மோயீசனிடம் ஒரு நண்பனை போல பேசி வந்தார். மோயீசன் ஆண்டவரிடம் எப்படி இம்மக்களை நடத்தி செல்வேன் என்று கலங்கும் போது , “எனது பிரசன்னம் உன்னோடு செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் அளிப்பேன்” என்று ஆண்டவர் கூறுகிறார்.
அவர் பிரசன்னம் வேண்டுமென்றால் ஒவ்வொரு நாளும் ஆண்டவரோடு பேச வேண்டும். அவ்வப்போது ஆண்டவரோடு பேச வேண்டும்.
இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன். இயேசுவே உமக்கு நன்றி. என்று சின்ன சின்ன ஜெபங்கள் சொல்வோம். இயேசு இயேசு என்று அவர் பெயரை அடிக்கடி சொல்வோம்.
இப்படி நாம் அவரை நாடினால் நம் உள்ளம் நன்மையானவைகளை அடையும். ஆன்மா வெற்றியையும், பரிசுத்தத்தையும் அணிந்து கொள்ளும். அதிசயங்கள் நம் வாழ்வில் நடக்கும்.
ஜெபம்: இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன். இந்த அதிகாலையில் உம் பிரசன்னத்தை எனக்கு தாரும். நாள் முழுதும் என்னோடு இரும். எனக்கு நிறைவான சமாதானத்தையும், ஞானத்தையும், பலத்தையும் தந்து நான் இந்த நாளை கடந்து செல்ல உதவி புரியும். ஆமென்.