பச்சோந்தி வாழ்க்கை மண்ணகத்திற்குரியது! | ஆர்கே. சாமி | Veritas Tamil

27 ஆகஸ்டு 2025
பொதுக்காலம் 21ஆம் வாரம் – புதன்
1 தெசலோனிக்கர் 2: 9-13
மத்தேயு 23: 27-32
பச்சோந்தி வாழ்க்கை மண்ணகத்திற்குரியது!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், பவுல் அடிகள் தெசலோனிக்கரை, ‘அன்பர்களே! நாங்கள் எவ்வாறு பாடுபட்டு உழைத்தோம் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, எங்கள் பிழைப்புக்காக இராப் பகலாய் வேலை செய்துகொண்டே, கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குப் பறைசாற்றினோம்” என்று எழுதுகிறார். ஒரு தாயாக, தந்தையாக தன்னை வெளிப்படுத்திய பவுல் அடிகள், தெசலோனிக்கர் மத்தியில் வேறு எதையும் எதிர்பார்த்து நற்செய்தி போதிக்கவில்லை. தனது பிழைப்புக்கு அவர் உழைத்தார்.
தொடர்ந்து, தெசலோனிக்கர் ஒவ்வொருவரிடமும் ஆர்வம் காட்டினார்கள் என்றும், அவர்கள் ஒவ்வொருவரையும் கவனித்துக்கொண்டார்கள் என்றும் விவரித்து, எழுதுகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், இயேசு மீண்டும் தனது காலத்தின் மறைநூல் அறிஞர்களிடமும், பரிசேயர்களிடமும் கடுமையாகப் பேசுகிறார். வெளிப்புறமாக அழகாகத் தெரிந்தாலும், அழுகிய உடல்கள் மற்றும் அனைத்து வகையான அழுகிய பொருட்களாலும் நிறைந்த வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு அவர்களை ஒப்பிடுகிறார்.
இயேசுவின் இன்றைய இரண்டாவது ஒப்பீடு, மறைநூல் அறிஞர்கள் சிலர் கடவுளின் இறைவாக்கினர்களைத் துன்புறுத்திக் கொன்றார்கள், பின்னர் இறந்த இறைவாக்கினர்களைக் கௌரவிக்க அழகான கல்லறைகளைக் கட்டி மக்கள் முன்னிலையில் பெருமைபட்டுக் கொண்டார்கள். இயேசு அவர்களின் இத்தகைய வெளிவேட செயலைச் சுட்டிக்காட்டி, அவர்களின் முகத்திரையைக் கிழிக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஒரு தச்சன் மகனாகிய, எளி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் சிலரை 'வெளிவேடக்காரரே, மறைநூல் அறிஞரே, பரிசேயரே' என சாடுகின்றார். 'குருட்டு வழிகாட்டிகளே,' 'குருடரே,' 'குருட்டு அறிவிலிகளே’ என்றும் அவர்களைச் சாடுகின்றார்.
உயர்தர ஆடை அணிந்து, மெடுக்காக மக்கள் மத்தியில் பெரும் மதிப்புக்குரியவர்களாக ‘நாங்கள் தான் உங்களுக்கு எல்லாம்’ என தப்பட்டம் அடித்த பெரும் தலைவர்களை இயேசு ‘வெள்ளையடித்தக் கல்லறைகள்’ என்கிறார். அவர்களை அறிவிலிகள், சுயநலவாதிகள் என்கிறார். அனைத்துக்கும் மேலாக, அவர்கள் படித்த உயர்கல்வியையும் மதிக்காமல் ‘இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர்’ என்று கொலை குற்றத்தையும் அவர்கள் மேல் சாற்றுகிறார்.
கடவுள் நம் பக்கம் இருக்கும்போது நாம் யாருக்கு அஞ்ச வேண்டும்? என்பார்கள். இக்கூற்று முற்றிலும் உண்மை. வெளிப்புறத் தோற்றத்தை விட, உள்ளத்தின் தூய்மையும், உண்மையான பக்தியுமே முக்கியம் என்று வாழ்பவர்கள் கடவுளைத் தவிர்த்து வேறு யாருக்கும் அஞ்சமாட்டார்கள்.
முதல் வாசகத்தில், பவுல் தன் நேர்மையான வாழ்வு பற்றி தெசலோனிக்க நகர் மக்களிடம் எடுத்துச் சொல்கின்றார். உள் ஒன்றும், புறம் வேறும் என்ற மனநிலை பவுலிடம் இல்லை. அவர் ஒரு நியாயவாதியாக அழைப்புக்கு ஏற்ற வாழ்வு வாழ்ந்தார்.
நாமும் உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் இருப்பதால், நம்மில் வெளிவேடம் என்பது நமக்கு நிச்சயம் ஊறு விளைவிக்கும். இன்றைய நற்செய்தியில் இயேசு கண்டிக்கும் மக்களைப் போல நாம் உள்ளோமா? அவர்கள் வெளிப்புறத் தோற்றத்தைப் பற்றியும், மற்றவர்களின் பார்வையில் பக்தியுள்ளவர்களாகத் தோன்றுவதைப் பற்றியும் மட்டுமே கவலைப்படுகிறவர்களாக இருந்தனர். அவர்கள் "சமயவாதிகளாவும் இல்லை, நல்ல தலைவர்களாகவும் இல்லை. அவர்கள் குருட்டு வழிகாட்டிகளாளவே இருந்தனர்.
இன்று குடும்பத்திலும், பங்கிலும் நாம் எப்படி நம்மை வெளிப்ப்டுத்துகிறோம்? நமது சொந்த வாழ்க்கையில் இயேசு நமக்கு என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க இன்று அழைக்கப்படுகிறோம். பச்சோந்திதனம் நம்மை அழித்துவிடும். குறுகிய காலத்தில் நமது ‘நிறம்’ வெளுத்துவிடும் என்பதை மனதில் பதியவைப்போம். கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு முக்கு திக்கு தாளம் என்பது உண்மை.
இறைவேண்டல்.
ஆண்டவரே, நான் தவறான திசையில் பயணித்து, உண்மையை உம்மிடமிருந்து மறைக்க முயற்சித்த நேரங்களுக்காக வருந்துகிறேன். என்னை மன்னியும். ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
