என்னில் சுயநலத்தைக் கிள்ளியெறிவேன்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
27 மார்ச் 2024
புனித வாரம் -புதன்
எசாயா 50: 4-9a
மத்தேயு 26: 14-25
முதல் வாசகம் :
முதல் வாசகம் ஏசாயாவில் உள்ள துன்பறும் ஊழியன் பற்றிய பாடல்களில் மூன்றாவது பகுதி இன்று இடம்பெறுகிறது.
1.கடவுள் அதிகாரமளித்தல்:
ஆறுதல் மற்றும் ஞானமான வார்த்தைகளைப் பேசும் திறன் இறைவனிடமிருந்து கிடைத்துள்ளது என்பதை கடவுளின் ஊழியர் ஒப்புக்கொள்கிறார். நல்லிந்தவர்கள் ஊக்குவிக்க அவருக்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நாக்கையும் கடவுள் கொடுத்துள்ளார் என்பதை அவர் ஆமோதிக்கிறார்.
2.கீழ்ப்படிதல் மற்றும் சகிப்புத்தன்மை:
துன்புறும் ஊழியன் கடவுளுடைய திருவுளத்திற்கு முற்றாகக் கீழ்ப்படிவதை ஏற்றுக்கொள்வதோடு, ‘ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்பதால், நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை துணிவோடு மறைக்கவில்லை’ என்றும்,
கடவுளின் இறையாண்மையில் நம்பிக்கை வைத்து வலியையும் அவமானத்தையும் சகிக்க மனமுவந்து அடிபணிகிறார் என்றும் தம் உள்ள உணர்வை வெளிப்படுத்துகிறார்.
3.கடவுளின் பாதுகாப்பில் நம்பிக்கை:
தான் எதிர்கொள்ளும் துன்பங்கள் சவாலாக இருந்தபோதிலும், துன்புறும் ஊழியரோ கடவுள் தனக்கு உதவுவார் என்றும், நிகழவுள்ள அவமானத்திலிருந்து தன்னைப் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையையும் முன்வைக்கிறார்.
4.நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்?
கடவுளே தனது இறுதியான பாதுகாவலர் மற்றும் நீதி வழங்குபவர் என்று ஊழியர் அறிவிக்கிறார். தன்மேல் குற்றம் சாற்றும் அல்லது அவரைக் கண்டனம் செய்யும் எவருக்கும் அவர் சவால் விடுகிறார். கடவுள் மட்டுமே அவருக்கான நீதியை நிலைநிறுத்துவார் என்பதிலும், அவரது எதிரிகள் மீது நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவார் என்பதில் உறுதியாக இருக்கிறார் இந்த துன்புறம் ஊழியர்.
ஒட்டுமொத்தமாக, இந்த முதல் வாசகப் பகுதியானது, துன்பங்களுக்கு மத்தியில் உண்மையாக நடந்துகொள்வதன் அவசியத்தைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது. மற்றும் கடவுளின் பாதுகாப்பும் நீதியும் இறுதியில் வெற்றிபெறும் என்ற உறுதியை வெளிப்படுத்துகிறது. இந்த வாசகத்தில் துன்புறும் ஊழியானாக இயேசு நிழல்படுத்தப்படுகிறார் என்பதை அறிய முடிகிறது.
நற்செய்தி :
இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாஸ் திட்டமிட்டதை நற்செய்தி கூறுகிறது. அவர் முப்பது வெள்ளிக் காசுகளைப் பெற்று, அவரை ஒப்படைப்பதற்கான நேரத்தையும் வாய்ப்பையும் தேடுகிறார். தொடர்ந்து, நற்செய்தி பஸ்கா விருந்து எனும் இரா உணவிற்கு மாறுகிறது. இந்த உணவின் போது, அவர்களில் ஒருவர் தன்னைக் காட்டிக் கொடுப்பார் என்று இயேசு தம்மைப் பின்பற்றும் சீடர்களுக்கு தெரிவிக்கிறார். அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், ‘ஆண்டவரே, அது நானோ?'' என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர், ‘என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் “ரபி, நானோ?'' என அவரிடம் கேட்க, இயேசு, “நீயே சொல்லிவிட்டாய்'' என்றார்.
சிந்தனைக்கு :
காட்டிக்கொடுப்போருக்கு முன்னுதாரணமாக கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக கூறப்படும் ஒருவர்தான் யூதாஸ். இந்த பெயர் விவிலியத்தில் காணப்பட்டாலும் தங்கள் பிள்ளைகளுக்கு யாரும் இப்பெயரைச் சூட்டுவதில்லை. அந்தளவக்கு மனுக்குலத்தால் வெறுக்கப்படும் பெயராக ‘யூதாஸ்' என்பது விளங்குகிறது.
ஏன் யூதாஸ் தன் தலைவரைக் காட்டிக்கொடுத்தான்? இதுபற்றி சிந்திக்கையில், முதல் காரணம் அவனிடமிருந்த பேராசை. பணம் பத்தும் செய்யும் என்பார்கள். இயேசுவை வீழ்ந்த தக்க சமயம் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த சாத்தான் (மத் 4:13) யூதாசிடம் காணப்பட்ட பணத்தாசையைப் பயன்படுத்திக்கொண்டான் என்று கூறலாம்.
அடுத்தக் காரணம், இயேசுவின் மீது ஏற்பட்ட ஏமாற்றமாக இருக்கலாம். யூதர்கள் மெசியாவை உரோமை அரசுக்கு எதிராகப் போராடி விடுதலைப் பெற்றுதரும் ஒரு போராளியாக எதிர்ப்பார்த்தார்கள். யூதாஸ் இயேசுவை அத்தகைய ஒரு போராளியாக எதிர்ப்பார்த்து இயேசுவின் அழைப்னை ஏற்றிருக்கலாம். இயேசுவின் மீது வைத்திருந்த நம்பிக்கை நாளுக்கு நாள் குறைய ஆரம்பித்திருந்தது. தான் எதிர்பார்த்த மெசியா இயேசு அல்ல என்ற ஏமாற்றம் அவர்மீது வெறுப்பை ஏற்படுத்தி காட்டிக்கொடுக்கத் தூண்டியிருக்கலாம்.
இவ்வாறாக வேறு சில காரணங்களையும் நாம் முன்வைக்கலாம். ஆனால், காட்டிக்கொடுத்தல் என்பது துரோகச் செயல். ‘பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக’ என்பதற்கு காட்டிக்கொடுத்தல் ஒப்பாகிறது. முதல் வாசகத்தில் மக்கள் நலனுக்காகத் துன்புறும் ஊழியன் பற்றிய கடவுளின் பணியாளரைப் பற்றி அறிந்தோம். கடவுளின் உண்மை ஊழியர்கள் யாராக இருந்தாலும் கடவுள் தனக்கு உதவுவார் என்றும் தனக்கு ஏற்படும் தொல்லைகளிலிருந்தும் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையில் பணி செய்கிறார்கள். அத்தகையோரைச் சுயநலனுக்காக தீயோர் கையில் சிக்க வைப்பது அழிவுக்குரிய. நாகரீகமற்ற செயலாகும். கெடுவான் கேடு நினைப்பான்.
நம்மில் தியாக உணர்வு பெருக்கெடுக்கும்போது சுயநலம் எனும் தீ தானாகவே அணையத் தொடங்கும். எனவே, நம்மில் உள்ள ‘யூதாசை’ கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுவோம். மனிதநேயத்திற்கும் பிறர் அன்பிற்குமானவர்களாக பொதுநலம் பேணுவோம். கடவுள் நல்லவர் பக்கம் என்றும் இருப்பார்.
இறைவேண்டல் :
துன்புறும் ஊழியராக எனக்கு உம்மை வெளிப்படுத்திய இயேசுவே, என்னிடம் உள்ள சுயநலப்போக்கை உணர்ந்திடவும் கிள்ளியெறிந்திடவும் இப்புனித வாரம் பொருத்தமான காலம் என்பதை உணர்ந்து என்னை நான் புனிதப்படுத்தத் துணைபுரிவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452