துன்பத்திற்கு உட்பட்டதே சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

25 மார்ச்  2024                                                                                          

புனித வாரம் - திங்கள்

எசாயா  42: 1-7                                                                                  

யோவான் 12: 1-11

 

முதல் வாசகம் :

எசாயா இறைவாக்கினரின் முன்னறிவிப்புகளில் ‘துன்புறும் ஊழியர்’ என்பது ஒரு குறிப்பிடத்தக்க முன்ன்றிவிப்பாகும்.  இது பெரும்பாலும் மற்றவர்களுக்காக தன்னலம் கருதாது துன்பத்தை அனுபவிக்கும் ஓர் உன்னத ஊழியரைப் பற்றியதாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வாசகத்தில் விவரிக்கப்படும் ஊழியர்  அமைதியானவராகவும் கடவுளின் ஆதரவைப் பெற்றவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.  அத்துடன் மற்றொரு சிறப்பு குணமாக  கடவுள் அவர் மட்டில் பூரிப்படைவதாகவும்,  அவருள் கடவுளின்  ஆவி தங்கியிருப்பார் என்றும், அவரது ஊழியர்  மக்களினங்களுக்கு நீதி வழங்குவார் என்றும் எசாயா இறைவாக்கினரால் முன்னறிவிக்கப்படுகிறது.

அத்தோடு அந்த இறை ஊழியர் குருடர்களின் கண்களைத் திறப்பார் என்றும்    ஒடுக்கப்பட்டவர்களை விடுவித்து, இருளில் அகப்பட்டுள்ளோருக்கு வாழ்வு  அளிக்க வல்லவர் என்றும்,  கடவுள் தேர்ந்துகொண்ட அந்த ஊழியரே (இயேசு),  பிற இனத்தாருக்கு ஒளியாகவும் விளங்க அழைக்கப்பட்டவர் என்றும்   முன்னறிவிக்கப்படுகிறார். 

அனைத்துக்கும் மேலாக, துன்புறும் வேளையில் அந்த கடவுளின் ஊழியர்  கூக்குரலிடமாட்டார்; அவரது குரலை உயர்த்தமாட்டார்;   குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார் என்பதும் துன்றும் ஊழியரைப் பற்றிய சிறப்பு குணங்களாக அறிவிக்கப்படுகிறது.


நற்செய்தி :

பாஸ்காவுக்கு சில நாட்களுக்கு முன்பாக  இயேசு லாசரஸ், மார்த்தா மற்றும் மரியாவின்  இல்லம் இருந்த  பெத்தானியாவுக்குத் திரும்புகிறார். இயேசுவின் நடமாட்டம் குறித்து யூத சமயத்  தலைவர்கள்  அவரை எப்படியாவது கைது செய்து தலைமைச் சங்கத்தில் ஒப்படைக்க விழிப்புடன் இருக்கிறார்கள்.  மார்த்தாவோ  வழக்கம்போல்  இல்லம் வந்த இயேசுவுக்கு உணவு பரிமாறுவதில்  மும்முரமாக இருக்கிறாள். 

அவள் சகோதரி மரியாவோ,  அன்பு மற்றும் சேவையின் அடையாளமாக  இயேசுவின் பாதங்களில் இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத் தைலம் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்து அன்பு பணி செய்கிறாள், அதைக் கண்ணுற்ற  சீடர்களில் ஒருவனான யூதாசு இஸ்காரியோத்து, “இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று கேட்கிறான்.

ஆனாலும், இயேசு மரியாவைத் தடுக்கவில்லை. “ என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும். ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை” என்றார்.

உண்மையில், யூதாசு இஸ்காரியோத்தின்  அக்கறை ஏழைகள் பற்றியதாக இல்லை. பணத்தின்  மீதே அவனது அக்கறை இருந்தது.  அத்தருணத்தில் இறந்து நான்கு நாள்களான  இலாசரை இயேசு  உயிர்ப்பித்ததன் காரணமாக மக்களும் இயேசவை நம்பத்தொட்ங்கினர். இதனால், மறைநூல் அறிஞர்களுக்கும்  பரிசேயர்களுக்கும்  இயேசு மீதான கோபமும் பொறாமையும் மேலும் அதிகரித்தது.
    
 
சிந்தனைக்கு :


இஸ்ரயேல் மக்கள் நிமித்தம் துன்புற வேண்டிய ‘கடவுளின் ஊழியன்’  குறித்த ஏசாயாவின் இறைவாக்கு இயேசுவில் நிறைவேறவுள்ளது என்பதற்கான விளக்கத்தை இன்று நாம் பெறுகிறோம்.

மரியாவும்  மார்த்தாவும் அவர்களது சொந்த வழியில் பணியாற்றுதலை வெளிப்படுத்தும்  வேளையில்,  யூதாசின் கவனமோ இயேசுவில் இல்லை. அவன் மரியா பயன்படுத்திய நறுமணத் தைலத்தின் பணம் விரயமாதைப் பற்றி எண்ணுகிறான்.  ‘ஆரியக் கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாய் இரு’ எனும் பழமொழிக்கொப்ப, அவனது கவனம் பணத்தின் மேல் இருந்தது எனலாம். மரியா இயேசுவின் பாதத்தில் விலை உயர்ந்த தைலம் பூசியதை அவன் பண விரயமாக  எண்ணினான்.

கிறிஸ்தவ சீடத்துவம் என்றாலே  அடுத்திருப்பவர்களுக்குப் பணிவிடை என்பதாகும். பணிவிடையை நீக்கிவிட்டால், சீடத்துவம் என்பது வெறும் ஆறு எழுத்துக்கள் கொண்ட ஒரு சொல்தான். 

நம்முடைய ஆண்டவராகிய  இயேசு எவ்வாறு பணியேற்க அல்ல பணி புரியவே வந்தாரோ, அந்த மனப்பான்மையும் செயலூக்கமும் நம்மில் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது இருக்க வேண்டும்.  பிறருக்கு அன்பு பணி என்பது துன்பம் நிறைந்தது. காய்த்த மரமே கல்லடி படும் என்பது போல, நற்பணியாளர்களுக்குத் துன்பமும் துயரமும் கூடவே வரும். அதனை ஏற்க மனமுடையோர்தான் இயேசுவின் உண்மை சீடர்கள். எனவே, இயேசுவின் முன்மாதிரி நம்மைத் தொட்டால்தான், நாம் மற்றவர்களுக்கு அதிக சேவை செய்ய முடியும். 

எனவே, இந்த புனித வாரத்தில், துன்புறவுள்ள இயேசுவை நினைத்து அவருக்காக அழுவதில் பயனில்லை. ‘உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை’ (யோவான் 5:41) என்றுதான் இயேசு நம்மை திட்டுவார். 

நம்  வாழ்க்கையில், மற்றவர்களுக்குக் குறிப்பாக நமக்கு அடுத்திருப்போருக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வாய்ப்பிருந்தும் அதை மறுத்தால், துன்புறும் இயேசுவோடு உறவில் இருப்பதற்கான உரிமையை இழக்கின்றோம்.  அவரோடான சீடத்துவ வாழ்வுக்கு ஊறு விளைவிக்கின்றோம்.

‘என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!’ (மத் 5:11) என்பதுதானே  இயேசுவின் படிப்பினை.

இறைவேண்டல் : 

கடவுளின் துன்புறும் ஊழியராக எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட அன்பு இயேசுவே, உமது படிப்பினைக்கேற்ப பிறர் நலம் பேணும் நல்லுள்ளத்தை நான் கொண்டிருக்க அருள்புரிவீராக. ஆமென். 
 

  

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452