இயேசுவின் மன்னிப்பு விடுவிக்கும் மன்னிப்பு! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil

04 ஜூலை 2024 
பொதுக்காலம் 13 ஆம் வாரம் -வியாழன்

ஆமோஸ்  7: 10-17                                                                          
மத்தேயு 9: 1-8
 

இயேசுவின் மன்னிப்பு விடுவிக்கும் மன்னிப்பு!


முதல் வாசகம்.

முன்னுரை.

சாலமோன் அரசருக்குப் பின் யோசுவா 12 குலங்களுக்குப் பிரித்துக்கொடுத்த கானான் நாடானது  வட நாடு  இஸ்ரயேல் என்றும் தென்னாடு யூதேயா என்றும் இரண்டாகப் பிரிந்தது. 
வட நாட்டை  பத்து குலங்களுக்கும், தென்னாட்டை   இரு குலங்களுக்கும் சொந்தமாக்கிக் கொண்டன. மேலும், தென்னாட்டிற்கு  எருசலேம் புனித நகராக இருந்ததுபோல வடநாட்டிற்குப் பெத்தேல் புனித நகராக இருந்தது.   

‘பெத்தேல்’ என்பது ‘பெத்' என்றும் 'எல்'  என்றும் பிரிக்கப்படுகிறது.  ‘பெத்' என்றால் இல்லம் என்றும் 'எல்' என்றால் கடவுள் என்றும் எபிரேய மொழியில் பொருள்படும். எனவே பெத்தேல் என்றால் கடவுளின் இல்லம் என்பது பொருள். யாக்கோபு இந்நகரத்தை பெத்தேல் என்று பெயரிட்டார்.  (தொ.நூ 35:7) ஆனால், நூற்றுக்கணக்கான வருடங்கள் கழித்து, இறைவாக்கினரான  ஓசியா அதை “அக்கிரமத்தின் வீடு” என அழைத்தார். இந்நகர் எப்படி நற்பெயரை இழந்து கெட்டபெயரைச் சம்பாதித்தது.  சிலைவழிபாடு இங்கே மலிந்திருந்தது.

ஆமோஸ் என்பவர் தென்னாட்டைச் சேர்ந்த ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன். வட நாட்டைச் சேர்ந்த மக்களும் அரசர்களும் உண்மை கடவுளை விடுத்து சிலைவழிபாட்டில் ஈடுபட்டுத் தங்களை மாசுப்படுத்திக்கொண்டனர். எனவே, அவர்களிடம் இறைவாக்குரைத்து மனமாற்றத்திற்கு அழைக்க கடவுள் ஆமோசை அழைத்து, வட நாட்டிற்கு அனுப்பினார். 

ஆமோஸ் வட அரசு அடையவிருக்கும் துன்பத்தையும் முடிவையும்  முன்னறிவித்தார். ஆமோஸ்   கடுமையாக மக்களை எச்சரித்து வந்தார்.  அங்கிருந்த  பெத்தேலின் குருவாகிய அமட்சியா என்பவன் இஸ்ரயேலின் அரசன் எரொபவாவிடம் ஆமோசுக்கு எதிராக் குற்றம் சாற்றி, பெத்தேலின் புனித நகரத்திலிருந்து ஆமோசை வெளியேற்றினார்.   ஆனால், ஆமோஸ், துணிவோடு “நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை;  ஆண்டவர் என்னை தேர்ந்தெடுத்து, ‘என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு’ என்று அனுப்பினார் என்று கூறினார்.  

நிறைவாக,  கடவுளின் குரலுக்குச் செவிசாய்க்காத இஸ்ரயேல் அழிவுறுவதோடு அந்நியரால்  (அசீரியர்கள்) தாக்கப்பட்டு   நாட்டுக்கு வெளியே அடிமையாகக் கொண்டு போகப்படும்.” என்றும் இறைவாக்குரைத்தார்.

  
நற்செய்தி.

இந்தப் நிகழ்வுக்கு  முன்பு, இயேசு கதரேனர் பகுதியில் இருவரிடமிருந்துப் பேய்களைத் துரத்தினார். இயேசுவின் இச்செயலால் அப்பகுதி மக்கள் பல பன்றிகளை இழக்க நேர்ந்ததால், அவர்கள் அவரை  நகரத்தை விட்டு வெளியேறச் சொன்னார்கள். எனவே இயேசு படகில் புறப்பட்டு அவர் தங்கியிருந்த கப்பர்நாகூமுக்கு வந்தார். அவர் படகில் இருந்து இறங்கும் போது  சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர்.
இயேசு, முதலில் முடக்குவாதமுற்றவரின்  பாவத்தை மன்னித்து, பின்னர் அவரைக் குணப்படுத்தினார்.  கடவுள் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும் என்பதால்,  மறைநூல் அறிஞர்கள் சிலர், இயேசு கடவுளைப் பழிப்பதாக தங்களுக்குள் கூறிக்கொண்டாரகள். 
அதை அறிந்துகொண்ட இயேசு "ஆமாம், அது சரி கடவுள் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும், நான் இந்த மனிதனின் பாவங்களை மன்னித்தேன், மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்று பதிலுரைத்தார். 
ஒருவர் வெளிப்படையாக,  ஆன்மீக குணமடைவதை மக்கள் காண முடியாது, ஆனால் ஒரு முடக்குவாதமுற்ற  மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு  எழுந்து நடப்பதை காண முடிகிறதல்லவா? என்று மறை நூல் அறிஞர்களையும் மக்களையும் வியக்கச் செய்தார்.  


சிந்தனைக்கு.


இயேசு தாம் வளர்ந்த நாசரேத்துக்குத் திரும்பியபோது, அவர்களுடைய விசுவாசமின்மையின் காரணமாக அவரால் அங்கு எந்த அற்புதங்களையும் செய்ய முடியவில்லை என்பதை ஏற்கனவே புனித மத்மேயு சுட்டிக்காட்டினார். 

ஆனால் இப்போது, அவர் தங்கியிருக்கும் கப்பர்நாகூமில்  மக்கள் இயேசு மீது வெளிப்படையான நம்பிக்கையைக்  கொண்டிருந்ததால், இயேசுவால் மாபெரும் அற்புதங்களைச் செய்ய முடிந்தது.

இயேசு கண்டிப்பாக கப்பர்நாகுமிற்கு வருவார் என்று மக்களை அவரை நம்பிக்கையுடன் எதிர்ப்பார்ந்திருந்தனர்.   அவர்கள் முடக்குவாதக்காரரைத் தூக்கிச் செல்ல  ஒரு கட்டில்  தயார் செய்தனர். பின்னர் இயேசு வந்து அந்த மனிதனைக் குணப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் ஆவலுடன்  காத்திருந்தனர். இயேசு அஙகு வந்ததும், அவர்களுடைய நம்பிக்கையை  இயேசு உடனடியாக உணர்ந்து செயல்பட்டார் என்பது  தெளிவாகிறது. 

இந்த வாசகப் பகுதியில்  மிக முக்கியமான நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், முடக்குவாதக்காரரைக் குண்படுத்த  இயேசு "ஆம்" என்று வெறுமனே சொல்லவில்லை.  முதலில் அவரது பாவங்களை மன்னிக்க வேண்டும் என்கிறார்.   நலம் வேண்டி வந்த முடக்குவாதமுற்றவரது நோயினை இயேசு நேரடியாகத் தீர்த்திருக்கலாம். அவ்வாறு  செய்யாமல், எதற்காக பாவங்களை மன்னித்து, நோயை நீக்கவேண்டும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.  அக்காலத்தில் யூதர்கள்  பாவம்தான் நோய்க்கு காரணம் என்று நம்பி கொண்டிருந்தனர்.  இந்த நம்பிக்கையின் அடிப்படையில், முடக்குவாதமுற்றவரின் பாவங்களை மன்னித்ததன்  வழியாக அவருக்கு நலம் தருகிறார். முடக்குவாதம் நலமானதால், அவர் இனி ஒரு பாவி அல்ல.  எனவே, சமூகத்திலும் குடும்பதிலும் அவர் இயல்பாக ஒட்டி உறவாடலாம். இயேசு அவருக்கு விடுதலை அளித்தார்.

பல சமயங்களில் நாம் இறைவேண்டல் செய்யும்போது கடவுளிடம் பல உதவிகளுக்காவும் தயவுக்காகவும் மன்றாடுகிறோம்.   நமது தேவைகளைப் பூர்த்திச் செய்யும் முன்  இயேசு  முதலில், அவர் நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பு வழங்க விரும்புகிறார். இதுவே அவருடைய முன்னுரிமை, அது நம்முடையதாகவும் இருக்க வேண்டும். 

முதல் வாசகத்தில் கடவுள் வட நாட்டு மக்கள் செய்த பாவத்தினின்று மனமாற வேண்டும் என்பதை வலியுறுத்த ஆமோஸ் இறைவாக்கினரை அனுப்பினார். அவர்கள் அவரது இறைவாக்கை ஏற்க மறுத்து அவரை விரட்டியடித்தனர். இறுதியில் மன்னிப்பின்றி, அசீரியர்களுக்கு அடிமையானார்கள். சொந்த நாட்டையும் அரசாட்சியையும்  இழந்தனர்.  பாவத்திற்காக வருந்துவதை நாம் முதன்மையாகக் கருதினால், இயேசு நமக்குச் செவிசாய்ப்பதோடு, விடுதலையும் அளிப்பார்  என்பதில் உறுதியாக இருக்கலாம்.

மேலும், அந்த முடக்குவாதமுற்றவரை நாலுபேர் இயேசுவிடம் தூக்கி வந்ததால் அவர் நலமானார். அவ்வாறு நாம் எத்தனை பேரை நமது வாழ்நாளில் இயேசுவிடம் அழைத்து வந்துள்ளோம்? எண்ணிப் பார்ப்போம்.


இறைவேண்டல்.


உம்மை அண்டி வருவோருக்கு, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று விடுதலை அளிக்கும்   இரக்கத்தின் ஆண்டவரே,  உமது மன்னிப்பில் நான் விடுதலைப்பெற்ற சீடராக வாழ எனக்கு அருள்புரிவீராக. ஆமென்


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452