நன்றியுணர்வோடு பழையன கழித்து புதியன ஏற்போம். | ஆர்.கே. சாமி | VeritasTamil
14 பிப்ரவரி 2024,
திருநீற்றுப் புதன்
முதல் வாசகம்: யோவேல் 2: 12-18
இரண்டாம் வாசகம்: 2 கொரி 5: 20- 6: 2 நற்செய்தி: மத்தேயு 6: 1-6, 16-18
நன்றியுணர்வோடு பழையன கழித்து புதியன ஏற்போம்.
முன்னுரை
2024-ம் ஆண்டுக்கான பொதுக்காலத்தின் முற்பகுதியை முடித்துக்கொண்டு, தவக்காலத்தில் காலடி பதித்துள்ளோம். இன்று திருநீற்றுப் புதன். இது அருளின் காலமான தவக்காலத்தின் தொடக்கம். திருத்தூதரான புனித யோவானின் கூற்றுப்படி (1யோவா 4: 20) மனிதரோடு ஒப்புரவாகாமல் அல்லது மனிதரை அன்பு செய்யாமல், கடவுளோடு ஒப்புரவாகுவதோ அல்லது கடவுளை அன்பு செய்வதோ முடியாது என்பதை மனதில் கொண்டு, இத்தவக்காலத்தில் பாதம் பதிப்போம். இன்றிலிருந்து இயேசுவின் திருப்பாடுகளைத் தியானிக்கவும், நமது பாவச் செயல்களை நினைவுகூர்ந்து மனமாற்றத்திற்கு வழிதேடவும் நாம் அழைக்கப்படுகின்றோம்.
“மண்ணாய் பிறந்த மனிதா, நீ மண்ணுக்கே திரும்புவாய்” என்றவாறே நம் நெற்றியில் இன்று திருநீறு பூசுப்படுகிறது. திருநீற்றை ஏற்கும் முன் இதன் பொருள் என்னவென்பதை ஆழ்ந்து சிந்தித்தறிவது நமது கடமையாகும்.
முதல் வாசகம்
இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் “உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் வாருங்கள்” என்று அழைப்புவிடுக்கிறார். அவரது அழைப்பானது இரு நிபந்தனைக்களுக்கு உட்பட்டதாக உள்ளது.
1.பாவங்களுக்கு உண்ணா நோன்பிருந்து அழுது புலம்ப வேண்டும்.
2.பாவ மன்னிப்புக்கு உடைகளை அல்ல, இதயத்தைக் கிழிக்க வேண்டும்.
அனைவரும் மேற்கண்ட இரு நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் வழி, கடவுளிடம் திரும்பி வந்து, இரக்கச் செயல்களை மேற்கொள்ள வேண்டும். இறைமக்கள், தங்களை இன்பத்திற்குள் ஆழ்த்தும் நடவடிக்கைகளைத் தவிர்ப்பதோடு, பாவத்திற்கான தகுந்த தண்டனையிலிருந்துக் காப்பாற்றும்படி கடவுளிடம் மன்றாட வேண்டும் என்று இவ்வாசகத்தில் இறைவாக்கினர் யோவேல் வலியுறுத்துகிறார்.
அத்தோடு, ‘ஆண்டவரே! இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்’ என்று, அவரவர் குற்றங்களை மனதார ஏற்றக்கொண்டு ஆண்டவர் முன் மண்டியிட இன்றைய திருப்பாடலின் பதிலுரையும் அழைக்கிறது.
இரண்டாம் வாசகம்
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது திருமுகத்தில், புனித பவுல் இறைமக்களை கடவுளோடு ஒப்புரவாகச் சொல்கிறார். இதுவே நேரம், இதுவே மீட்பின் காலம் என்று நினைவூட்டி போதிக்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், இயேசு மனமாற்றத்திற்கான மூன்று செயல்பாடுகளைப் பற்றி பேசுகிறார். அவை, தர்ம செயல்கள், இறைவேண்டல், மற்றும் உண்ணாவிரதம் (நோன்பு). இந்த பரிகாரச் செயல்களை ஆடம்பரமாக அல்ல, பகிரங்கமாக அல்ல, தனிப்பட்ட முறையில் இரக்கச் சிந்தையோடு நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும் என்று இயேசு படிப்பிக்கிறார். ஏனெனில், நமது ஒவ்வொரு நடவடிக்கையையும் கடவுள் அறிவார். கடவுளுக்கு மறைவாதிருப்பது ஒன்றுமில்லை.
சிந்தனைக்கு.
நாம் கொண்டிருக்கும் வெளிவேடமே நமக்கு நமது மீட்புக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்பதை இன்றைய வாசகல்கள் வழி கடவுள் நினைவூட்டுகிறார். கடவுளின் பார்வையில் கோடிகள் பெரிதல்ல. இருப்பது ஒரு தட்டு சோறு என்றாலும் கண்ணெதிரே பசித்திருக்கும் ஓர் ஏழையோடு இருப்பதைப் பகிர்ந்து கொள்வதே இயேசுவின் சீடருக்கு அழகு. அந்த பசித்திருப்பவரை எப்போது, நாம் இயேசுவாகப் பார்த்து உதவுகிறோமோ அந்த நொடியே நமது மீட்பு உறுதிப்படுத்தப்படும்.
தவக்கலாம் என்றவுடன் நாம் உண்ணா நோன்பு இருக்கவேண்டும், சிலுவைப் பாதை செய்ய வேண்டும், மாமிச உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும், மதுபானங்களை விட்டொழிக்க வேண்டும், புகைப்பிடிக்கக்கூடாது என்பதாக நினைத்துக்கொள்கிறோம். இது பழைய சிந்தனை. இவை அனைத்தையும் கடைப்பிடித்துக்கொண்டு, பகைச் சுவர்கள் உடைத்தெறியாவிட்டால் பயன் என்ன? நமக்குள் இருந்து, நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் நஞ்சே பகைமைதான்.
தவக்காலத்தில் பழையன கழிதல் வேண்டும். இல்லையேல் அனுசரிக்கும் தவக்காலம் பொருளற்றது. இந்த தவக்காலத்தில் நமது தேடல் வழக்கத்திற்கு மாறாக, பெரிதாக இருக்க வேண்டும். ஏனெனில், ‘நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது’ (யோவான் 15:8) என்கிறார் இயேசு. எனவே, முதலில் தவக்காலத்தில் நமது வாழ்க்கைப் பயணமானது, முதலில் நம்மை, நமக்கு அடுத்திருப்பவரோடும் கடவுளோடும் ஒப்புரவாக்கி, இணைக்க வேண்டும்.
இவ்வருடத்திற்கான தவக்காலச் செய்தியில், ‘பாலைநிலத்தின் மூலம் கடவுள் நம்மை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறார்’ என்ற கருப்பொருளை திருத்தந்தைத் தந்துள்ளார். அவர் கூறுவதுபோல், தவக்காலமானது, பாலைநிலமாக்கப்பட்ட நம் வாழ்வுக்கு மீண்டும் கடவுளின் அருளை மீட்டுத்தரும் காலம்.
இன்று ஒடுக்கப்பட்ட எத்தனையோ சகோதர சகோதரிகளின் அழுகுரல் விண்ணகத்தை எட்டுகிறது. அந்த அழுகுரல் நம் காதுகளில் விழுகிறதா? அப்படி விழுந்தாலும் அது நமக்குத் தொல்லையாக உள்ளதா? தொடக்கத்திலிருந்து ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கும் நாம், நம் தகாதச் செயல்களால் நம் சகோதரத்துவத்தை மறுத்து ஒருவர் மற்றவரிடம் இருந்து ஒதுங்கி வாழ்கிறோம் என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இக்கருத்தையொட்டி சிந்திக்காவிடில், இன்று தொடங்கும் விபூதி புதன் ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்பதாகிவிடும். தவக்காலமானது சமூக வாழ்வுக்கு அழைக்கும் காலம். அடிப்படை திருஅவை சமூகங்கள் அல்லது அன்பியங்களில் நம்மை ஈடுபடுத்திக்கோள்ள அழைக்கும் காலம். ஆகவே, இக்காலம் எந்தளவுக்கு நமது மனமாற்றத்திற்கும் மனிதநேயத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்போகிறது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.
கடவுளிடம் ஏதாவது வரம் கேட்டு தவ முயற்சியில் இறங்குவதைவிட, இக்காலத்தில் நமது வாழ்வே ஒரு வரம் என்பதை ஏற்று, நன்றியுணர்வோடு, பழையன கழித்து புதியன ஏற்போம்.
இறைவேண்டல்.
அன்பு இயேசுவே, என்னில் இன்று தொடங்கும் எனது தவக்காலம் பயணம், எனது சிந்தனை, சொல், செயல் அனைத்தும் உம்மைச் சார்ந்தச் சீடனாக என்னை உருமாற்றுவதாக அமைந்திட அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
- Reply
Permalink