உலகளாவிய மோதல்களுக்கு மத்தியில் அமைதியை உருவாக்குபவர்களாக மாறுங்கள் | Veritas Tamil
உலகளாவிய மோதல்களுக்கு மத்தியில் அமைதியை உருவாக்குபவர்களாக மாறுங்கள்: பாகிஸ்தானின் 77-வது மரியாம் ஆபாத் திருப்பயணம் அழைப்பு
RVA உருது செய்திப் பிரிவு | செப்டம்பர் 08, 2026
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மரியாம் ஆபாத் அன்னை திருத்தலத்தில் நடைபெற்ற 77-வது ஆண்டு திருப்பயணத்தில், பாகிஸ்தான் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் கலந்து கொண்டனர். செப்டம்பர் 4 முதல் 6 வரை மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நற்கருணை பெருவிழா, பவனி மற்றும் திருப்பயணத்தின் மையப்பகுதியாக அமைதி தொடர்பான செபங்கள் அமைந்தன.
"அமைதியின் அரசியான மரியா" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வு, குடும்பங்கள், நாடு மற்றும் உலக அமைதிக்கான செபங்களை முன்னிறுத்தியது. லாகூர் அருகே அமைந்துள்ள மரியாம் ஆபாத், பாகிஸ்தானின் முக்கிய கத்தோலிக்கத் திருத்தலங்களில் ஒன்றாகவும், தலைமுறை தலைமுறையாக அன்னை மரியாள் பக்தி மையமாகவும் விளங்கி வருகிறது.
வாழ்வாங்கு வாழும் அமைதியின் பாலங்கள்
லாகூர் பேராயர் காலித் ரஹ்மத், நம்பிக்கையாளர்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் "வாழும் பாலங்களாக" மாற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அன்னை மரியாளின் மீதான பக்தி, அன்றாட வாழ்க்கையில் அன்பு மற்றும் சேவையின் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
முதல் நாள் நற்கருணை வழிபாட்டின் போது, மரியாம் ஆபாத் அன்னையின் சொரூபத்தை பாரம்பரிய செப இடமான தமன்-ஏ-மரியாமிற்கு எடுத்துச் செல்லும் பவனியை பேராயர் காலித் ரஹ்மத் தலைமை தாங்கி நடத்தினார். இந்த திருப்பயணத்தின் மூலம் வெளிப்படும் நம்பிக்கை, பாகிஸ்தானில் கத்தோலிக்க சமூகத்தை வளர்ப்பதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த பல தலைமுறை விசுவாசிகள் மற்றும் மறைப்பணியாளர்களின் உழைப்பின் பலன் என்று அவர் குறிப்பிட்டார்.
சிலர் குழுக்களாகவும், மிதிவண்டியிலும், நடந்தும் நீண்ட தூரம் பயணம் செய்து வந்ததை, உள்ளூர் கத்தோலிக்க ஆன்மீகத்தின் வெளிப்பாடாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், குடும்ப உறுப்பினர்களை மதிப்பவதும், பெற்றோர் மற்றும் பெரியோர்களைக் கனம்பண்ணுவதும், அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக சேவையை மாற்றுவதும் மரியன்னை பக்தியின் அத்தியாவசிய வெளிப்பாடுகள் என்றார்.
உலக அமைதிக்காக அன்னையின் பரிந்துரை
இரண்டாம் நாள் நற்கருணை பெருவிழாவுக்கு கர்தினால் ஜோசப் கூட்ட்ஸ் தலைமை தாங்கினார். திருச்சபைக்கும் உலகிற்கும் மரியாளினுடைய தொடர்ச்சியான பரிந்துரையை அவர் சுட்டிக்காட்டினார். திருச்சபையின் தாயாக, குணமடைதலையும் மீட்பையும் தேடுபவர்களுக்காக மரியா தனது மகனிடம் பரிந்துரைக்கிறார் என்று கூறிய கர்தினால் கூட்ட்ஸ், குறிப்பாக அமைதிக்காக செபிக்குமாறு விசுவாசிகளை கேட்டுக்கொண்டார்.
ஆயார் ஆண்ட்ரியாஸ் ரஹ்மத் பேசுகையில், மரியாவின் கன்னிமை, கடவுளின் தாய் என்ற அவரது பங்கு, அமல உற்பவம் மற்றும் விண்ணேற்பு ஆகிய திருஅவையின் போதனைகளை எடுத்துரைத்தார். மரியன்னை பக்தி என்பது வெறும் கலாச்சார அல்லது சமய பாரம்பரியம் மட்டுமல்ல, அது கத்தோலிக்க விசுவாசத்தின் ஒரு பகுதி என்றும், இறுதியில் விசுவாசிகளை இயேசு கிறிஸ்துவிடம் அழைத்துச் செல்கிறது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
கலிலேயாவில் உள்ள கானா ஊர் திருமண விழையைக் குறிப்பிட்டுப் பேசிய ஆயர் ஆண்ட்ரியாஸ் ரஹ்மத், தேவையில் இருப்பவர்கள் மீதான மரியாவின் அக்கறையையும் அவரது பரிந்துரை பங்கையும் சுட்டிக்காட்டினார். உலகம் முழுவதும் போர் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அன்னையின் செபத்தை நாடுமாறு அவர் கத்தோலிக்கர்களைக் கேட்டுக்கொண்டார்.
வன்முறையை நிராகரித்து அமைதியை உருவாக்குங்கள்
திருப்பயணத்தின் போது மறையுரையாற்றிய அருட்தந்தை இம்மானுவேல் ஆசி, மரியாவை அமைதியின் அரசி என்று வர்ணித்ததுடன், வன்முறையை நிராகரித்து அமைதியை உருவாக்குபவர்களாக மாற கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
காயீன் மற்றும் ஆபேலின் விவிலியக் கதையை நினைவு கூர்ந்த அருட்தந்தை ஆசி, பொறாமையும் பிரிவினையும் குடும்பங்களையும் சமூகங்களையும் அழித்துவிடும் என்றார். அமைதிக்கு மன்னிப்பு, ஏற்றுக்கொள்ளுதல், ஒற்றுமை மற்றும் பிறரின் நலனுக்கான அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது என்று அவர் கூறினார். புனித பிரான்சிஸின் அமைதி செபத்தை அன்றாட கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றவும் அவர் யாத்ரீகர்களை ஊக்குவித்தார்.
பணியாளர்கள் கௌரவிப்பு
இந்த திருப்பயணத்தின் போது யூபிலி விழாவைக் கொண்டாடும் குருக்களான அருட்தந்தை இம்மானுவேல் யூசப் மணி, அருட்தந்தை இம்மானுவேல் ஆசி மற்றும் அருட்தந்தை ஜோசப் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். மரியாம் ஆபாத் சமூகத்திற்கு சேவை செய்த மறைந்த அருட்தந்தை மஹ்பூப் எவரிஸ்ட் மற்றும் மரியாவின் மலை வளர்ச்சிக்கு பங்களித்த அருட்தந்தை பிராங்க் ஷாஹீத் ஆகியோரையும் அருட்தந்தை ஆசி நினைவு கூர்ந்தார்.
"அமைதியின் அரசியான மரியாவைப் போல நாமும் அமைதியை உருவாக்குபவர்களாக மாறுவோம். அமைதி என்பது நமக்குள் இருந்து தொடங்குகிறது," என்ற செய்தியுடன் விழா நிறைவடைந்தது.
பாகிஸ்தானின் சிறிய கத்தோலிக்க சமூகத்திற்கு, இந்த ஆண்டு திருப்பயணம் நம்பிக்கையின் முக்கிய வெளிப்பாடாக உள்ளது. மத வேறுபாடுகள் மற்றும் சமூக பதற்றங்கள் நிறைந்த ஒரு பிராந்தியத்தில், நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான திருச்சபையின் அர்ப்பணிப்புக்கு சான்றாக அமைந்தது.
