செயற்கை நுண்ணறிவு காலத்தில் உண்மையான கிறிஸ்தவச் சாட்சிக்கு அழைப்பு! | Veritas Tamil
செயற்கை நுண்ணறிவு எண்ணிமத் தகவல் தொடர்பை வேகமாக மாற்றி வரும் நிலையில், கத்தோலிக்க எண்ணிமத் தூதர்கள் தங்கள் உண்மைத்தன்மையைப் பாதுகாத்து, இறைநம்பிக்கை, மனித உறவுகள் மற்றும் மனச்சான்றை நற்செய்தி அறிவிப்பின் மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று இந்தோனேசியாவில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“அல்காரிதத்திற்கு அப்பால்: 100% கத்தோலிக்கர், 100% நீங்களே” என்ற கருப்பொருளில், Digital Misio Connect நிகழ்வின் முதல் அமர்வு ஆகஸ்ட் 21 அன்று இணையவழியில் நடைபெற்றது. இந்தோனேசியா முழுவதிலுமிருந்து சுமார் 80 கத்தோலிக்க உள்ளடக்க உருவாக்குநர்கள், எண்ணிமத் தூதர்கள் மற்றும் திருஅவைத் தகவல் தொடர்பாளர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்தோனேசிய ஆயர் பேரவையின் (KWI) பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், செயற்கை நுண்ணறிவால் பெரிதும் மாற்றமடைந்து வரும் எண்ணிமச் சூழலில், கத்தோலிக்கர்கள் பொறுப்புடன் இறைநம்பிக்கையை அறிவிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
KWI இளைஞர் ஆணையத்தின் செயலர் அருள்பணி பிரான்ஸ் கிறிஸ்டி ஆதி பிரசெத்யா அவர்கள், 2025ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தோனேசிய கத்தோலிக்க எண்ணிமத் தூதர்கள் மற்றும் செல்வாக்காளர்களின் சந்திப்பை நினைவுகூர்ந்தார். “பின்தொடர்பவர்களிடமிருந்து சாட்சிகளாக” என்ற கருப்பொருளில் நடைபெற்ற அச்சந்திப்பில் 78 கத்தோலிக்க செல்வாக்காளர்களும் உள்ளடக்க உருவாக்குநர்களும் பங்கேற்றனர்.
எண்ணிம வழியில் நற்செய்தியை அறிவிப்பதற்கான முதன்மையான அளவுகோல் பார்வைகளின் எண்ணிக்கையோ, பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையோ அல்ல; கிறிஸ்து அதன் மையத்தில் இருக்கிறாரா என்பதே முக்கியம் என்று அருள்பணி பிரான்ஸ் கிறிஸ்டி அவர்கள் வலியுறுத்தினார்.
சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துவது பொறுப்பையும் உள்ளடக்கியது என்றும் அவர் கூறினார். நற்செய்தி அறிவிப்புக்காக உருவாக்கப்படும் உள்ளடக்கங்கள் வெறுப்புப் பேச்சு, தவறான தகவல்கள் மற்றும் இனம், மதம், சமூக உறவுகள் போன்ற உணர்வுபூர்வமான விடயங்களைத் தவறாகப் பயன்படுத்தும் அல்லது மக்களை இழிவுபடுத்தும் உள்ளடக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பார்வையாளர்கள் அதிகரிக்கும் போது பொறுப்பும் அதிகரிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
KatolikVidGram நிறுவனத்தின் உள்ளடக்க உருவாக்குநர் ட்ராசியா விடிதா, உண்மையான கத்தோலிக்க உள்ளடக்கம் வாழ்ந்து அனுபவிக்கப்பட்ட இறைநம்பிக்கையிலிருந்து உருவாக வேண்டும் என்று கூறினார். பத்தாண்டுகளுக்கும் மேலாக கத்தோலிக்க உள்ளடக்கங்களை உருவாக்கி வரும் அவர், சமூக ஊடகப் போக்குகளை மட்டும் சார்ந்திருக்காமல், தொடர்ந்து கற்றுக்கொள்வதும் சிந்திப்பதும் அவசியம் என்றார்.
உள்ளடக்கம் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக இருந்தாலும், அது வாழ்ந்து அனுபவித்த இறைநம்பிக்கையிலிருந்து உருவாகவில்லை என்றால், அது “உலர்ந்ததாக” மாறிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு மூலம் எழுத்துகள், படங்கள் மற்றும் காணொளிகளை எளிதில் உருவாக்க முடியும் என்ற நிலையில் இக்கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. தொழில்நுட்பம் உள்ளடக்க உருவாக்கத்திற்கு உதவ முடியும் என்றாலும், செபம், தனிப்பட்ட போராட்டம், மனமாற்றம் மற்றும் இறைவனுடனான உறவு ஆகிய வாழ்வியல் அனுபவங்களை அது மீண்டும் உருவாக்க முடியாது.
சமூக ஊடகங்கள் சிலருக்கு கத்தோலிக்கத் திருஅவையை அணுகுவதற்கான முதல் வாயிலாகவும் அமையக்கூடும் என்று ட்ராசியா தெரிவித்தார். கத்தோலிக்க உள்ளடக்க உருவாக்குநர்களுடன் இணையத்தில் தொடர்புகொள்ளும் சிலர் பின்னர் தங்களின் தனிப்பட்ட பிரச்சினைகளைப் பகிர்ந்துகொண்டு, இறைநம்பிக்கையைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புவதாகவும், அருகிலுள்ள பங்குத்தளங்களுக்கு வழிகாட்டப்படுவதாகவும் அவர் கூறினார்.
எனவே, எண்ணிமத் தளங்கள் வழியாகத் திருஅவையை அணுகும் மக்களை வரவேற்க பங்குத்தளங்கள் தயாராக இருக்க வேண்டும் என பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். எண்ணிம நற்செய்தி அறிவிப்பு, இணையத்திலேயே முடிவடையாமல், உண்மையான மனித உறவுகளுக்கும் சமூக வாழ்வுக்கும் வழிவகுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
Atma Jaya University Jakarta பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பியல் பேராசிரியரும் KWI இளைஞர் ஆணைய நிர்வாகக் குழு உறுப்பினருமான முனைவர் லிசா எஸ்தி புஜி ஹர்தந்தி, செயற்கை நுண்ணறிவை அளவுக்கு அதிகமாகச் சார்ந்திருப்பது குறித்து எச்சரித்தார். தொழில்நுட்பம் செயல்திறனை அதிகரிக்க உதவினாலும், உடனடி தீர்வுகளுக்காக அதனை அதிகமாக நம்புவது மனிதத் திறன்களையும் விமர்சனச் சிந்தனையையும் பலவீனப்படுத்தக்கூடும் என்றார்.
Sanata Dharma University பல்கலைக்கழகப் பேராசிரியரான அருள்பணி அலெக்சாண்டர் ஹென்றா த்வி அஸ்மாரா, SJ, இவ்விவாதத்தை இறையியல் கண்ணோட்டத்தில் அணுகி, தொழில்நுட்ப வளர்ச்சி மனித மாண்புக்குச் சேவை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் தகவல்கள் அதிகரித்து வரும் சூழலில், தகவல்களைப் பகுத்தறிவுடன் அணுகுவதன் முக்கியத்துவத்தையும் பங்கேற்பாளர்கள் எடுத்துரைத்தனர். தகவலை உருவாக்கியவர் யார், அதன் நோக்கம் என்ன, அது உண்மையானதா, பிறருக்கு அது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கவனிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
எண்ணிமத் தூதர்கள் பல்வேறு பகுதிகள் மற்றும் நாடுகளில் இருந்து இணைந்து பணியாற்றி வரும் நிலையில், நேருக்கு நேர் சந்திப்புகளுக்கான தேவை அதிகரித்து வருவதையும் அருள்பணி பிரான்ஸ் கிறிஸ்டி சுட்டிக்காட்டினார்.
மேலும், அருள்பணியாளர்கள் மற்றும் குருத்துவப் பயிற்சியில் உள்ளவர்களை எண்ணிமத் தளங்களில் அருள்பணியாற்றுவதற்குத் தயார்படுத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. அதேவேளை, பொருத்தமான எல்லைகளையும் மேய்ப்புப்பணி சார்ந்த ஞானத்தையும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Digital Misio Connect முயற்சியானது, தொடர்ந்து பயிற்சி, ஆன்மீகப் புதுப்பித்தல், மறைக்கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் சமூகத்தை உருவாக்கும் வாய்ப்புகள் வழியாக KWI-யின் சமூகத் தொடர்பு, மறைக்கல்வி மற்றும் இளைஞர் பணிகளுக்கான ஆணையங்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கத்தோலிக்க எண்ணிமத் தூதர்களின் சவால் செயற்கை நுண்ணறிவுடன் போட்டியிடுவது அல்ல; மாறாக, தொழில்நுட்பம் இறைநம்பிக்கை, மனித உறவு மற்றும் உண்மையான கிறிஸ்தவச் சாட்சிக்கு மாற்றாக அல்லாமல், நற்செய்தி அறிவிப்புக்கான ஒரு கருவியாக மட்டுமே இருப்பதை உறுதி செய்வதாகும்.
