வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பீகார் கத்தோலிக்க திருஅவை அமைப்புகள் நிவாரண உதவி | Veritas Tamil
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பீகார் கத்தோலிக்க திருஅவை அமைப்புகள் நிவாரண உதவி
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க, கத்தோலிக்க துறவற சபைகள், நிறுவனங்கள் மற்றும் பொதுநிலையினர் அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இமயமலைப் பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவைத் தொடர்ந்து பெருமளவு நீரும், மணல் மற்றும் குப்பைகளும் போதே கோசி, திரிசூலி ஆறுகளில் பெருக்கெடுத்தன. திரிசூலி ஆறு நாராயணி ஆற்றுடன் இணைந்து, பீகாருக்குள் கந்தக் ஆறாகப் பாய்கிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாட்னாவில் உள்ள புனித சவேரியார் கல்வியியல் கல்லூரியில் செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், பாட்னா உயர் மறைமாவட்ட பேராயர் செபாஸ்டியன் கல்லுப்புரா அவர்களின் ஆலோசனையுடன் நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்காகவும், பிற பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் கூட்டத்தில் ஒரு நிமிடம் அமைதி கடைப்பிடிக்கப்பட்டது. புலம்பெயர்ந்தோர் மற்றும் விளிம்புநிலை மக்களிடையே பணியாற்றும் இயேசு சபையைச் சேர்ந்த அருள்பணி லூயிஸ் பிரகாஷ் அவர்கள், பிற இயேசு சபை அருள்பணியாளர்களுடன் இணைந்து நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். “எங்களிடம் நிதி எதுவும் இல்லை; ஆனால் நல்லெண்ணம் நம்மை வெகுதூரம் அழைத்துச் செல்லும்” என்று அவர் தெரிவித்தார்.
துறவற சபைகள், கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள், பொதுநிலையினர் அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து, உடனடி உதவி, அடுத்தகட்ட நிவாரணம் மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் என மூன்று கட்டங்களாகப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டனர். முதற்கட்டமாக பிஸ்கட், சோப்பு, வெல்லம், உப்பு, சத்து மாவு மற்றும் குடிநீரைச் சுத்திகரிக்கும் மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. துறவற சபைகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பொதுநிலையினர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தங்களால் இயன்ற அளவில் பொருள்களை வழங்கினர்.
பாட்னா மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து மாணவர்கள், பணியாளர்கள், பயிற்சியாளர்கள், துறவறப் பயிற்சி குழுக்கள் மற்றும் ஆண், பெண் துறவியர் இணைந்து நிவாரணப் பொருள்களைத் தரம் பிரித்து பொட்டலங்களாகத் தயாரித்தனர். பின்னர், நிவாரண உதவிகள் குறைவாகக் கிடைத்த தொலைதூர கிராமங்களுக்கும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் அவை கொண்டு செல்லப்பட்டன. வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் மருத்துவத் தேவைகளை கருத்தில் கொண்டு, பாட்னாவில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனை, குர்ஜி மற்றும் திரிபோலியா மருத்துவமனை ஆகிய கத்தோலிக்க மருத்துவ நிறுவனங்கள் மருத்துவ முகாம்களை நடத்தத் தயாராகி வருகின்றன.
பல்வேறு கத்தோலிக்க நிறுவனங்களும் சமூகங்களும் ஒருங்கிணைந்து மேற்கொண்டுவரும் இந்த நிவாரணப் பணி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருத்துவ உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. 2026ஆம் ஆண்டின் படைப்புப் பருவம் “உயிர் தரும் நீர்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டுள்ள நிலையில், இந்த வெள்ளப் பேரிடர், நீர் வாழ்வின் ஆதாரமாக இருப்பதோடு, வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் வாழும் மக்களின் பாதிப்பையும் எடுத்துக்காட்டுவதாக நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
