இயற்கையே இறைமை - தமிழக துறவியர் பேரவையின் - மண்ணைக் காக்கும் பேரியக்கம் | Veritas Tamil

இயற்கையே இறைமை -தமிழக துறவியர் பேரவையின்
மண்ணைக் காக்கும் பேரியக்கம்
நீரின்றி அமையாது இவ்வுலகு என்ற பொன்னான வாக்கிற்கு இணங்க இன்றைய காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு மண்ணின் மக்களாக, தமிழக துறவியர் பேரவையின் உறுப்பினர்களாக இணைந்து மண்ணிற்கும் மக்களுக்கு பணியாற்றும் கடமையை உணர்ந்து இந்த மண்ணைக் காக்கும் பேரியக்கம் உருவாகி உள்ளது. இதன் பல செயல்பாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்று நீர் வளங்களை பாதுகாப்பது, பரமாரிப்பது அடுத்த தலைமுறைக்கு கொடையாக கொடுப்பது.
இதன் முதல் படியாக திருவள்ளுர் மாவட்டம் வெங்கத்தூர் கிராம மக்களோடு இணைந்து 02.07.2025 அன்று மாலை 4 மணியளவில் ஸ்ரீ ஆகாச பைரவ பீடம் குளத்தை ஊர் தலைவர்கள், பொதுமக்கள், குழந்தைகள், விவசாய முன்னேற்ற சங்க தலைவர் திரு துரை மற்றும் பொறுப்பாளர்கள், மற்றும் தமிழக துறவியர் பேரவையின் தலைவர் அருட்சகோதரி மரிய பிலோமி அருட்சகோதரி ஆரோக்கியம் தலைவர் - பிரான்சிஸ்குவின் புனித வளனார் சபை, அருட்சகோதரி கிளாரா வசந்தி தலைவர் – புனித அன்னாள் சபை மாதவரம், அருட்சகோதரி நம்பிக்கை மேரி, செயலர் - தமிழக துறவியர் பேரவை அருட்சகோதரி பவுலின் ஆக்னஸ், அருட்பணி பார்த்தசாரதி சே.ச மற்றும் அடைக்கல அன்னை சபைத்தலைவிகள் துறவியர்கள், அய்க்கஃப் தோழர்கள் அவர்களின் முன்னிலையில் குளம் தூர்வாரும் பணியானது இயற்கை அன்னைக்கு மலர்களால் மரியாதை செய்து தொடங்கப்பட்டது.
வெங்கத்தூர் கிராம தலைவர் உரையாற்றிய போது இங்கு வாழும் மக்கள் அனைவருமே பல சமயங்களை பின்பற்றுபவர்கள் இருந்தபோதிலும் எங்களுக்குள் சரியான புரிதலும் நல்ல உறவு முறைகளும் அன்புறவும் உள்ளது. நீர் வளங்களைப் பாதுகாப்பதன் மூலம் எதிர்கால தலைமுறையினருக்கு வளமான பூமியை பரிசளிக்க முடியும் என்னும் நம்பிக்கை அளித்துள்ளது. இந்த ஓர் பெரிய பணியை முன்னெடுத்து செய்ய தூண்டுலாக இருந்த அனைவருக்கும் நன்றிகள் என கூறினார்.
பள்ளிக் குழந்தைகளும் இந்த மண்ணைக் காக்கும் பேரியக்க நிகழ்வில் கலந்துக்கொண்டு தங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும், நாம் எப்படி இந்த பூமித் தாயை காப்பாற்றலாம் என்னும் எதிர்கால கனவுகளோடு பயணிக்க தூண்டுதலாக அமைந்தது.
சிறப்பு பங்கேற்பாளர்களின் ஆழமான இயற்கைச் சார்ந்த அதிலும் குறிப்பாக நீர் வளம் சார்ந்த பகிர்வுகள் அனைவரையும் ‘இயற்கை தாயோடு இணைந்து வாழும் பிள்ளைகள் நாம்’ என்ற அடிப்படை உணர்வை நினைவூட்டியது. இயற்கை வளங்களை காப்பது என்பது மனித குலம் அனைத்திற்குமான மாபெரும் பொறுப்பும், கடமையும் ஆகும். இதை நாம் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து மண்ணையும், மக்களையும் காத்திட முயற்சி செய்வோம்.
Daily Program
