இசை | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil

இசை 
செவிகளுக்கு இன்பம் தரும் தேன்; 
மனதை மயக்கும் மருந்து; இதயத்துக்கு இதம் தரும் இனிய விருந்து; ஆன்மாவிற்கு அமைதி அளிக்கும் அருளமுது! 

இசை 
அன்றாடம் ஆன்மாவில் படியும் அழுக்குகளைச் சலவைச் செய்து வெண்பனிபோல்மாற்றும்;
கவலை நிறைந்த இதயத்தை கணப்பொழுதில் களிப்படையச் செய்யும்;
உருக்குலைந்த உள்ளத்தை உவப்படையதாக்கும்!

இவ்வையகமே இன்னிசையால் நிரம்பி வழிகிறது - நின்று நிதானமாகக் கேட்டு இரசிக்க நேரமிருந்தால்!

பறவைகளின் பரவசமூட்டும் பண்ணும் 
இலைகளின் இன்னிசையும் சருகுகளின் சந்தமும் அலைகளின் ஆரவாரமும் தென்றலின் மெல்லிசையும் 
கேட்கச் செவியுள்ளோர் பெறுபெற்றோர்!

இசைக்கு மொழியில்லை; இரசிக்க வயது தடையில்லை;
செவிகளை அது துளைத்தால் வலியில்லை; வறண்ட உணர்வுகள் உயிர் பெற அதைத் தவிர வேறு வழியில்லை!

இசை மழையில் நனையுங்கள்; இசை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுங்கள்; இசையமுதைப் பருகுங்கள்; இன்னிசைக் காற்றில் இனிதே உலாவுங்கள்; 
இன்பமாய் மாறும் உங்கள் வாழ்வு!

இசை உங்களை மகிழ்விக்கும்; 
இசை உங்களை 
நலமாக்கும்;
இசை உங்களைப் பண்படுத்தும்;
இசை உங்களைத் தாலாட்டும்!

வாழ்க வளமுடன் நலமுடன்!!!

எழுத்து 

அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச.
தூய ஆவியார் ஆலயம், தாகூர் நகர், புதுச்சேரி.