மண் பானை... | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil
ஒரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். வைரம், தங்கம், பவளம், முத்து போன்றவைகளின்மீது பேராசைக் கொண்டவன். அவைகளைப் பெறுவதற்காக பணத்தை வாரி விலையுயர்ந்த நவரத்தினங்கள் அரசனிடம் நிறைய குவிந்துவிட்டன. அவைகளை பாதுகாப்பாக வைக்க, அரண்மனையில் ஒரு பெரிய அறையை எடுத்து, அருங்காட்சியகமாக மாற்றினான். அனைத்து ஆபரணங்களையும் அருங்காட்சியகத்தில் வைத்து, பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
அரசன் நாள் முழுவதும் அருங்காட்சியகத்தில் நவரத்தினங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டேயிருப்பான். மக்களைப் பற்றி கவலைப்பட்டது கிடையாது. துறவி ஒருவர் நகருக்கு வெளியே குடிசையில் வாழ்ந்து வந்தார். அரசனுக்கு நல்ல ஆலோசனை கூற வேண்டும் என்று விரும்பி அரண்மனைக்கு வந்தார். அரசன் துறவியை வரவேற்று, அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள நவரத்தினங்களை துறவியிடம் காட்டி, இவை அனைத்தும் உயர்ந்த மதிப்புள்ளவை. இவைகளைவிட மதிப்புள்ள பொருள்கள் உலகில் எங்கும் இருக்க முடியாது என்று இறுமாப்போடு கூறினான்.
"என்னிடம் இவைகளைவிட உயர்ந்த மதிப்புள்ள பொருள் இருக்கிறது'' என்றார் துறவி. அரசன் இதை கேட்டவுடன் குடிசையை நோக்கிச் சென்றான். குடிசையின் நுழைவாயிலில் தண்ணீர் நிரம்பிய மண்பானை இருந்தது. அதிலிருந்து துறவி தண்ணீர் எடுத்து அரசனுக்கு குடிக்கக் கொடுத்தார். அரசன் அதை சுவைத்து குடித்தபோது, ''ஆச்சரியம்! இனிமை! இனிமை! இது இளநீர் போல் சுவையாக இருக்கிறது. எங்கிருந்து இந்த சுவையான தண்ணீர் கிடைத்தது?" என்று கேட்டு மண்பானையை உற்று நோக்கினான். துறவி அரசனைப் பார்த்து, ''அரசே! நீங்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கிற மண்பானைதான் சுவையான தண்ணீரைக் கொடுக்கிறது" என்றார்.
அரசன் குடிசையின் உள்ளேசென்று, ''நான் ஆவலோடு தேடி வந்த உயர்மதிப்புள்ள பொருள் எங்கே?" என்று கேட்டான். "அரசே! இதுவரையிலும் நீங்கள் உற்றுப்பார்த்த மண்பானை தான் அந்த உயர்ந்த மதிப்புள்ள பொருள். உங்கள் தாகத்தைத் தீர்த்தது. இங்கு வந்து போகும் எல்லா மக்களுடைய தாகத்தைத் தீர்க்கிறது. தண்ணீருக்கு இனிமையான சுவையை கொடுக்கிறது. இதனைப் பாதுகாத்து வைக்க காவலர்கள் தேவை இல்லை. நான் வைத்திருக்கும் மண்பானை எனக்கு தினமும் சுவையான, இனிமையான தண்ணீரைக் கொடுத்து, என் தாகத்தைத் தீர்க்கிறது. இதைவிட உயர்ந்த பொருள் கிடையாது." தொடர்ந்து 'அரசே! நீங்கள் சேர்த்து வைத்துள்ள நவரத்தினங்கள் உங்கள் தாகத்தைத் தீர்க்க முடியாது. சுவையான இனிமையான தண்ணீரைத்தராது. நீங்கள் மட்டும் பார்க்கலாம். மக்கள் பார்க்க முடியாது. அவைகளை பாதுகாக்க காவலர்கள் தேவை. வீண்செலவு செய்கிறீர்கள்."
எனவே, "அரசே! உபயோகமான பொருள்கள் மீதும், உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் மீதும் உங்கள் கவனத்தையும், நேரத்தையும் செலவிடுங்கள்" கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிகவும் தேவை என்று கூறினார் துறவி.
ஞானிகளுக்கு அவர்களது விவேகமே மணிமுடி ; மதிகேடருக்கு அவர்களது மடமைதான் பூமாலை. (நீமொ 14:24)
எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.
