வாழ்க்கை வாழ்வதற்கே! | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil

அந்தோணியார் பக்தியுள்ள பாட்டி தினமும் கோவிலுக்கு  சென்று அந்தோணியார் சுருபத்துக்கு முன், மண்டியிட்டு நண்ட நேரம் செபிப்பாள். ஆலயத்தைக் கவனித்து வரும் உபதேசியார், பாட்டி நீண்ட நேரம் என்ன செபம் செய்கிறார் என்று அறிய ஆசைப்பட்டார்.

ஒருநாள் உபதேசியார் அந்தோணியார் சுரூபத்துக்குப் பின்புறம் ஒளிந்து கொண்டார்.ஆலயத்திற்கு வந்த பாட்டி கண்களை மூடி இவ்வாறு செபிக்க ஆரம்பித்தாள். "அந்தோணியாரே! இரண்டு ஆண்டுகளாகக் கொடிய நோயால் துன்பப்படுகிறேன். பற்றாக்குறைக்கு மருமகளுடைய தொல்லையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏன் என்னை உயிரோடு வைத்திருக்கிறாய்? என் உயிரை எடுத்துக்கொள்ளும்'' என்றவுடன் சுருபத்தின் பின்புறமிருந்து பதில் வந்தது."மகளே நான் அந்தோணியார் பேசுகிறேன். உன் செபம் கேட்கப்பட்டது. அருகில் வா மகளே, இப்போதே உன் உயிரை எடுத்துக்கொள்கிறேன். இதைக் கேட்டவுடன் பாட்டி கண்களைத் திறந்தாள், எழுந்தாள், சுருபத்தைக்கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை, வேகமாக ஆலயத்தைவிட்டு வெளியே சென்றுவிட்டாள்

வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் நம்மில் யாரும் சாவதற்கு விரும்புவதில்லை. சில மாதங்கள் கடந்த பின் மருமகள் பாட்டியிடம் வந்து, தன் துன்பத்தை எல்லாம் கொட்டி அழுதாள். பாட்டி அவளிடம், "நீ அந்தோணியாரிடம் செல். அவர் உனக்கு விடுதலை கொடுப்பார்" என்றாள். பாட்டி கூறியபடி, தினமும் அந்தோணியாரிடம் செபிக்க ஆரம்பித்தாள். இவளைக் கவனித்த உபதேசியார் மீண்டும் சுரூபத்தின் பின்புறம் ஒளிந்துகொண்டு அந்த பெண்ணின் செபத்தை ஒட்டுக்கேட்டார்.

அவள் செபிக்க ஆரம்பித்தாள். "அந்தோணியாரே! என் குடும்பத்தில், என் கணவரும், மாமியாரும் கொடுக்கிற துன்பங்களை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தூக்குப்போட்டுச் சாவதற்கு முடிவு செய்திருக்கிறேன். எனக்கு வழிகாட்டும்." உடனே பதில் வந்தது."மகளே நான் அந்தோணியார் பேசுகிறேன். உன் செபம் கேட்கப்பட்டது. உன் துன்பத்தை தீர்த்து வைக்கிறேன். நீ வீட்டுக்குப்போய் உன் கடமையைச் செய். அடுத்த ஆண்டு என் திருநாளுக்கு வா. உனக்கு விடுதலை கிடைக்கும்" என்று கேட்டவுடன், அவள் எழுந்து வீட்டிற்கு அமைதியாகச் சென்றாள். செபத்தோடு குடும்பத்தை நடத்தினாள்.

மறுவருடம் இறைவன் அவளுக்குக் கொடுத்த குழந்தையோடு ஆலயத்திற்கு வந்து, அந்தோணியார் சுரூபத்தின்முன் குழந்தையைக் கிடத்தி புனித அந்தோணியாரே! எனக்கு நல்ல கணவரைக் கொடுத்ததற்காகவும், என் குழந்தையைப் பாதுகாக்கப் பாசமுள்ள மாமியாரைக் கொடுத்ததற்காகவும் நன்றி என்று செபித்தாள்

தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்திருக்கிறவர்களை அந்தோணியார் வாழ வைப்பார்.

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே.

செல்வர் தம் செல்வத்தை அரண் என்றும் உயரமான மதில் என்றும் எண்ணிக் கொள்கிறார். (நீமொ 18:11)

எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.

Tamil Survey Popup Image