இந்தியாவில் புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பான மற்றும் மாண்புமிக்க வாழ்வை உறுதிசெய்ய திருஅவை அழைப்பு | Veritas Tamil
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CCBI) புலம்பெயர்ந்தோர் பணிக்குழு, புலம்பெயர்ந்தோருக்கான திருஅவையின் பணியை வலுப்படுத்தவும், பாதுகாப்பான, மாண்புமிக்க மற்றும் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட புலம்பெயர்வை ஊக்குவிக்கவும், கிழக்கு இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆலோசனைப் பயிலரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்தது.
ஆகஸ்ட் 21 அன்று, ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள சமூக மேம்பாட்டு மையத்தில் “புலம்பெயர்ந்தோரைப் பராமரித்தல்” என்ற தலைப்பில் இப்பயிலரங்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு மறைமாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 95 அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் கலந்துகொண்டனர். SIGN–CRI Ranchi அமைப்புடன் இணைந்து இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
வேலைவாய்ப்பு மற்றும் சிறந்த வாழ்வாதாரத்தைத் தேடி தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறும் மக்கள் எதிர்கொள்ளும் மனித வர்த்தகம் கொத்தடிமைத் தொழில் மற்றும் பிற சுரண்டல்களை எதிர்கொள்வதற்கான நடைமுறை நடவடிக்கைகள் குறித்து பயிலரங்கில் கலந்துரையாடப்பட்டது.
சிம்டேகா மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் பர்வா அவர்கள், குறிப்பாக பழங்குடியின மக்களிடையே வறுமை, குறைந்த வேலைவாய்ப்புகள், போதிய கல்வியின்மை மற்றும் சுகாதார வசதிகளுக்கான குறைந்த அணுகல் ஆகியவை புலம்பெயர்வுக்கான முக்கிய காரணிகளாக உள்ளன என்று சுட்டிக்காட்டினார். புலம்பெயர்ந்தோர் சுரண்டலுக்கு உள்ளாகும் நிலையைத் தடுக்க கல்வி, திறன் பயிற்சி மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
ராஞ்சி துணை ஆயர் ஆனந்த் அவர்கள், ஜார்க்கண்டின் வளமான பழங்குடியின மரபையும் சமூக அடையாளத்தையும் பாதுகாத்துக்கொண்டே இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
புலம்பெயர்ந்தோருக்கான திருஅவையின் மேய்ப்புப்பணி, அவர்கள் புறப்படும் இடங்களோடு மட்டுப்படுத்தப்படாமல், அவர்களின் பயணம் முழுவதிலும், அவர்கள் சென்றடையும் இடங்களிலும் அவர்களுக்குத் துணைநிற்க வேண்டும் என்று பயிலரங்கு வலியுறுத்தியது.
SIGN இயக்குநர் அருள்பணி ஆல்வின் அவர்கள் புலம்பெயர்ந்தோருக்கு தொடர்ந்து மேய்ப்புப்பணி சார்ந்த ஆதரவு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். CRI ராஞ்சியின் தலைவர் அருள்பணி மனோஜ், TOR அவர்கள், கலந்துரையாடல்களில் பெறப்படும் கருத்துகளை அடித்தட்டு நிலையில் செயல்படுத்தக்கூடிய உறுதியான நடவடிக்கைகளாக மாற்றுமாறு மறைமாவட்டங்களையும் பங்குத்தளங்களையும் கேட்டுக்கொண்டார்.
CCBI புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் தேசிய மன்ற உறுப்பினர் அருட்சகோதரி ராணி புன்னாசேரில், HCM அவர்கள், புலம்பெயர்வோரின் புறப்படும் இடத்திலிருந்து அவர்கள் சென்றடையும் இடம் வரை ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பாதுகாப்பான புலம்பெயர்வு, விழிப்புணர்வு, உடனிருத்தல், வலையமைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
அருள்பணி சிபி எராவிமங்கலம், CMF அவர்கள், பங்குத்தளங்கள் தங்கள் சமூகங்களில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன், அவர்கள் புறப்பட்டுச் சென்ற சமூகங்களுக்கும் அவர்கள் சென்றடைந்த சமூகங்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இறையியல் அறிஞர் சகோதரர் கிளெமென்ட் டிகால் அவர்கள், ஒவ்வொரு மனிதருக்கும் இயல்பாகவே வழங்கப்பட்டுள்ள மாண்பை அடிப்படையாகக் கொண்டே புலம்பெயர்ந்தோருக்கான திருஅவையின் பணி அமைய வேண்டும் என்றார். “புலம்பெயர்ந்தவர் வெறுமனே வேலை தேடும் தொழிலாளியோ அல்லது உதவி தேவைப்படும் பாதிக்கப்பட்டவரோ அல்ல; அவர் இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட ஒரு மனிதர்” என்று அவர் கூறினார்.
மேலும், பாதுகாப்பற்ற மற்றும் சுரண்டலுக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகளுக்கு மக்களைத் தள்ளும் காரணிகளையும் திருஅவை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். புலம்பெயர்ந்தோரின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களின் குரலை வலுப்படுத்தி, வறுமையிலிருந்து தப்பிப்பதற்கான கட்டாயமாக அல்லாமல், சிறந்த எதிர்காலத்திற்கான ஒரு வாய்ப்பாக புலம்பெயர்வு அமையக்கூடிய சமூகங்களை உருவாக்க திருஅவை துணைநிற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிர்மல் கோரானா, கொத்தடிமைத் தொழில் மற்றும் மனித வர்த்தகம் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். புலம்பெயர்வதற்கு முன்பான விழிப்புணர்வு, சட்ட உரிமைகள் குறித்த அறிவு மற்றும் சுரண்டலுக்கான ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காணுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
இப்பயிலரங்கில், பள்ளிகள் மற்றும் சுயஉதவிக் குழுக்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் குறித்த பயிற்சிகள் வழங்குதல், முறையான ஆவணப்படுத்தல், சட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுதல் உள்ளிட்ட நடைமுறை செயல்திட்டம் உருவாக்கப்பட்டது.
CRI மற்றும் பங்கேற்ற மறைமாவட்டங்கள் இம்முயற்சிகளைச் செயல்படுத்தவும் கண்காணிக்கவும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டன. மேலும், 2026ஆம் ஆண்டின் உலக புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் நாளை முன்னிட்டு பங்குத்தளங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மேய்ப்புப்பணி சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டம், புலம்பெயர்ந்தோரை அறிந்து, அவர்களுடன் பயணித்து, அவர்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு அதிகாரமளிப்பதில் திருஅவை கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது. புலம்பெயர்வு சுரண்டலுக்கு வழிவகுக்கும் ஒன்றாக அல்லாமல், சிறந்த வாழ்வை உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமைய வேண்டும் என்றும் பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.
