ஐந்தாம் ஆண்டு சிறப்பு நிகழ்வாக 100 மணி நேர தொடர் ஜெபமாலை | Veritas Tamil

அன்னை மரியாவை மகிமைப்படுத்தும் நோக்கில், அக்டோபர் மாதம் 21 முதல் 25 வரை 100 மணி நேர தொடர் ஜெபமாலை இப்புனித நிகழ்வு ஐந்தாண்டுகளா எம் தூய தெரசாவின் கார்மல்  மறை மாநில தலைமையகம் செங்கல்பட்டில் நடைபெற்று வருகிறது. ஜெபமாலை ஜெபிக்கும் எவரையும் சாத்தான் தொட முடியாது என்ற ஆன்மீக வசனம் இம்முறை 100 மணி நேர ஜெபமாலையின் மையப் பொருளாக இருந்தது.
    
அக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணிக்கு அருட்பணி கிறிஸ்துராஜ், மறைமாவட்ட பள்ளிகளின் செயலர், செங்கல்பட்டு மறைமாவட்டம் அவர்களால் திருப்பலியுடன் இத்திருநிகழ்வு தொடங்கப்பட்டது. அன்னை மரியாவிடம் நம்மை இணைக்கும் இச்ஜெபமாலை, நம்மை காக்கும் கவசம் என்று மறையுரையில் கூறியது அனைவரின் இதயங்களையும் ஈர்த்தது. அன்று எம் விமலா மறைமாநில அருட்சகோதரிகள் மற்றும் எம் சகோதரிகள் பணியாற்றும் இடங்களில் உள்ள பொதுநிலையினர் ஏறக்குறைய 30 பேர் ஒன்று கூடி இத்திருப்பலியில் ஜெபித்தனர். 

அக்டோபர் 22 புதன்கிழமை 6 மணிக்கு பேரருட்திரு உஸ்தாக்கியுஸ் செங்கை மறை மாவட்ட ஆயரின் பொது பதில் குரு, திருப்பலி நிறைவேற்றினார். தந்தை வழங்கிய ஆழ்ந்த மறைவுரை அன்னை மரியாவின் தாய்மையின் அர்த்தத்தை உணரச் செய்தது. திருப்பலி முடிவில் மலர் மாலை அன்னை மரியாவிற்கு அணிவிக்கப்பட்டது.
    
அக்டோபர் 23 வியாழக்கிழமை 6:00 மணிக்கு அருட்பணி பவுலா ஜெயக்குமார், மாதா தொலைக்காட்சியின் பொது மேலாளர் திருப்பலியை நிறைவேற்றினார். அருட்தந்தையின் சிறந்த ஆன்மீக உரை ஜெபமாலையின் சக்தி மற்றும் ஜெபமாலையின் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தின் ஆழத்தை வெளிப்படுத்தியது. 
    
அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை மாலை 6 00 மணிக்கு பேரருட் திரு ஜி.ஜே அந்தோணிசாமி, சென்னை மயிலை உயர்மறைமாவட்டத்தின் முதன்மை குரு அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. மறைவுரையில் கூறிய ஜெபமாலை எம் வாழ்வின் சக்தி என்ற வரிகள் பலரின் இதயத்தில் ஆழமாக பதிந்தன. 

பகல் இரவு தொடர்ந்த புனித ஜெபம்.

இந்த நூறு மணி நேர ஜபமாலை தினமும் பகலும் இரவும் இடைவிடாது நடைபெற்றது. ஒவ்வொரு மணி நேரமும் அருட்சகோதரிகள் மற்றும் பொது நிலையினர், அருகில் உள்ள வின்சென்ட் தே பால் அருட்சகோதரிகள், வியாகுல அன்னை சபை அருட்சகோதரிகள் திரு இருதய முதியோர் இல்ல சகோதர சகோதரிகள் மற்றும் கப்புச்சின் சபை குருக்கள் இணைந்து ஜெபம் செய்தனர். ஜெபமாலையின் ஓசை எம் இல்லத்தை சுற்றியுள்ள பகுதியை அருளால் நிரப்பியது. நிசப்தமான இரவிலும் ஜெபத்தின் ஓசை ஓயாது ஒலித்தது. அன்னை மரியாவின் திரு உருவம் முன் எரிந்த மெழுகுவர்த்தி ஒளி நம்பிக்கை மற்றும் அமையின் அடையாளமாக இருந்தது. 

நிறைவு நாள்:
    அக்டோபர் 25 சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் மிகுந்த பக்தியுடன் நிறைவு திருப்பலி கும்பகோண மறைமாவட்ட மேனாள் மேதகு ஆயர் மேதகு அந்தோணிசாமி பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த திருப்பலி அனைவருக்கும் ஒரு ஆன்மீக விருந்தாக அமைந்தது. அன்று அன்னை மரியாவிற்கு முடிசூட்டும் விழா சிறப்பாக நடைபெற்றது. அன்னை மரியாவிற்கு மணி முடி அணிவிக்கப்பட்டபோது ‘மரியே வாழ்க’ என்று பாடகர் குழு அருட்சகோதரிகள் மற்றும் நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அனைவரும் சேர்ந்து பாடினர். அந்நேரம் அன்னை மரியாவின் அருளை கூடி இருந்த அனைவரும் உணர்ந்தனர். இப்புனித நிகழ்வு தூய தெரேசாவின் கார்மல் சபை (CTC) விமலா மறை மாநிலத்தின் தலைமையத்தில் சிறப்புற நடைபெற்றது. 
    
இந்த நூறு மணி நேர தொடர் ஜெபமாலையின் இந்த ஐந்து நாட்களும் ஏறக்குறைய தமிழகமெங்கும் உள்ள பல்வேறு பங்குகளில் உள்ள 300க்கும் மேற்பட்டோர் இரவு பகலாக கலந்து கொண்டு ஜெபித்தனர். இந்நிகழ்வு நம்மை அன்னை மரியர்வோடு நெருக்கமாக இணைத்ததோடு நம்பிக்கை அன்பு ஒற்றுமை மற்றும் அமைதியின் ஆன்மீகப் பயணமாக அமைந்தது.