ஆசியாவில் ஒன்றிணைந்த பயணத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் FABC நிறைவிறுதிப் பேரவை | FABC | Veritas Tamil

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12வது நிறைவிறுதிப்பேரவை, ஒன்றிணைந்த பயணத்தை (Synodality) பற்றிய கலந்துரையாடல்களைத் தாண்டி, ஆசியா முழுவதும் அதை நடைமுறையில் செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக, பிலிப்பீன்ஸ் நாட்டின் ஆயர் மார்செலினோ அந்தோனியோ "ஜூனி" மரலிட் ஜூனியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த மனமாற்றத்திற்கான அழைப்பும், ஆசியாவில் பாலங்களாகவும் பாலங்களை அமைப்பவர்களாகவும் இருக்கும் திருஅவையின் பணியும் என்ற கருப்பொருளில், ஜூலை 20 முதல் 26 வரை இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறும் இந்த ஒரு வாரப் நிறைவிறுதிப்பேரவையில், ஆசியா முழுவதிலுமிருந்து 120-க்கும் மேற்பட்ட கர்தினால்களும் ஆயர்களும் பங்கேற்றுள்ளனர்.

ஜூலை 20 அன்று நடைபெற்ற தொடக்கச் செய்தியாளர் சந்திப்பில், இப்பேரவையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரான ஆயர் ஜூனி அவர்கள், இது ஆயர்களின் ஒரு சாதாரண கூட்டம் மட்டுமல்ல என்று குறிப்பிட்டார்.

ஆசியத் திருஅவை ஒன்றாக இறைவேண்டல் செய்யவும், ஒருவரையொருவர் செவிமடுக்கவும், காலத்தின் அறிகுறிகளை ஆன்மிகப் பகுத்தறிவுடன் ஆராயவும், உலகின் மிகவும் ஆற்றல்மிக்க மற்றும் பல்வகைமைகள் நிறைந்த மாநில ங்களில் ஒன்றான ஆசியாவில் நற்செய்தியை அறிவிப்பதற்கான புதிய வழிகளைத் தேடவும் இது ஒரு முக்கியமான தருணமாகும்” என்று அவர் கூறினார்.

FABC-யின் 50ஆம் ஆண்டு பொதுமாநாடு, 2023ஆம் ஆண்டு பாங்காக் ஆவணம், 2024ஆம் ஆண்டின் ஒன்றிணைந்த பயணத்தை குறித்த ஆயர் மாமன்றத்தின் இறுதி ஆவணம், 2025ஆம் ஆண்டின் நம்பிக்கையின் யூபிலி ஆண்டு, மற்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் திருப்பணியின் தொடக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தப் பேரவை திருஅவையின் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஒரு வார நிகழ்ச்சி, “ஒன்றிணைந்த பயணத்தைப் பற்றி பேசுவதற்காக மட்டுமல்ல, அதனை உண்மையில் அனுபவிக்கும் ஒரு வாய்ப்பாக” வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார். இதில் பங்கேற்பவர்கள் நற்கருணைக் கொண்டாட்டங்கள், ஆன்மிகத் தியானம், “ஆவியில் உரையாடல்” (Conversations in the Spirit), மாநில அமர்வுகள் மற்றும் குழு விவாதங்களில் பங்கேற்பார்கள்.

கலாச்சார மற்றும் சமயப் பல்வகைமை, வறுமை, புலம்பெயர்வு, மோதல்கள், சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் வேகமான சமூக மாற்றங்கள் ஆகியவற்றால் நிறைந்த ஆசியக் கண்டத்தில், திருஅவை எவ்வாறு ஒன்றிணைந்த மனமாற்றத்தை ஆழப்படுத்தி, பாலங்களை அமைப்பவராக மாற முடியும் என்பதே அவர்களின் ஆன்மிகப் பகுத்தறிவின் மையமாக இருக்கும்.

இந்தப் பேரவையின் முக்கிய விளைவாக இரண்டு முக்கிய ஆவணங்கள் தயாரிக்கப்படவுள்ளதாக ஆயர் ஜூனி அவர்கள் தெரிவித்தார். முதலாவது, ஆசியாவின் உள்ளூர் திருஅவைகள் ஒன்றிணைந்த பயணத்தை நடைமுறைப்படுத்த உதவும்ஆசியாவில் ஒன்றிணைந்த பயணத்திற்கான நடைமுறை வழிகாட்டி” (Vademecum on Synodality in Asia) என்ற இறுதி ஆவணம். இரண்டாவது, ஆசியா முழுவதும் உள்ள கத்தோலிக்கர்களை ஒன்றிணைந்த பயணத்திற்கான புதுப்பித்தலின் பயணத்தைத் தொடர ஊக்குவிக்கும் ஆசியத் திருஅவைக்கான செய்தி ஆகும்.

பேரவையின் முக்கிய நிகழ்வுகளில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் சிறப்புத் தூதராக கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் பங்கேற்பது, கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே வழிநடத்தும் தியான நாள், ஒன்றிணைந்த பயணம் குறித்த ஆயர் மாமன்றத்தின் செயல்படுத்தல் குறித்து கர்தினால் மாரியோ கிரெக் வழங்கும் சிறப்புரை மற்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் காணொளிச் செய்தி ஆகியவை இடம்பெறுகின்றன.

பேரவையின் நிறைவு விழா ஜகார்த்தாவின் அன்னை மரியாவின் விண்ணேற்பு பேராலயத்தில் நடைபெறும் நற்கருணைக் கொண்டாட்டத்துடன் நிறைவடையும். அதனைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் அருகிலுள்ள இஸ்திக்லால் பள்ளிவாசலுக்கு சென்று, பேராலயத்தையும் பள்ளிவாசலையும் இணைக்கும்நட்புச் சுரங்கப்பாதை” (Friendship Tunnel) வழியாக நடந்து செல்வார்கள். இது இந்தோனேசியாவின் சமய நல்லிணக்கத்திற்கான அர்ப்பணிப்பையும், ஆசியாவில் பாலங்களை அமைக்கும் திருஅவையின் அழைப்பையும் அடையாளப்படுத்துகிறது.

இந்தப் பேரவை, ஒன்றிப்பு, பங்கேற்பு மற்றும் திருப்பணி ஆகியவற்றில் திருஅவையின் சாட்சியை மேலும் வலுப்படுத்துவதோடு, ஆசியா முழுவதிலும் உள்ள கத்தோலிக்கர்கள் தங்கள் குடும்பங்கள், சமூகங்கள், நாடுகள் மற்றும் பல்வேறு கலாச்சார, சமய மக்களிடையே பாலங்களாகவும் பாலங்களை அமைப்பவர்களாகவும் மாற ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம்” என்று ஆயர் ஜூனி மரலிட் அவர்கள் தெரிவித்தார்.

Tamil Survey Popup Image