முழு திருவிவிலியத்தையும் கைகளால் எழுதிய கல்லூரி மாணவி | Veritas Tamil
சிவகங்கைமாவட்டம், வேம்பத்தூர் மிக்கேல்பட்டினத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜோவிட்டா. இவர் திருவிவிலியம் முழுவதையும் 10 மாதங்களில் கைகளால் எழுதி முடித்து சாதனை படைத்துள்ளார்.
அப்பங்கைச் சேர்ந்த ஜெயசீலன் மற்றும் பெனடிக்டா மேரி தம்பதியரின் புதல்வி ஜோவிட்டா, தற்போது மதுரையில் உள்ள லேடி டோக் கல்லூரியில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பயின்று வருகிறார். இவர் பங்குத்தந்தை அருள்பணி. C.A. ஜேம்ஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவிவிலியத்தைத் தனது கையால் எழுதத் தொடங்கினார். கடந்த செப்டம்பர் மாதம் முழு விவிலியத்தையும் மொத்தம் 2400 பக்கங்களில் முழுமையாக எழுதி முடித்து சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து மாணவி ஜோவிட்டா குறிப்பிடும்போது, "திருவிவிலியத்தைக் கைகளால் எழுதத் தொடங்கியபோது, என் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஆண்டவரின் அன்பும் வழிநடத்துதலும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆழமாக உணர்ந்தேன். சிலர் உன்னால் முடியாது என்றாலும், "என்னால் முடியும்" என்ற நம்பிக்கையோடு தொடங்கினேன்; கடவுளின் அருளால் நிறைவு செய்தேன்" என்றார். இவரின் இந்த முயற்சியைக் கண்டு மறைமாவட்ட ஆயர் மேதகு லூர்து ஆனந்தம், பங்குத்தந்தை, பங்குமக்கள் எனப் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
திருவிவிலிய வாசிப்பை ஊக்குவிக்கும் போட்டியாகத் தொடங்கிய அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் கூறியதாவது:
“ஒருமுறை எழுதுவது என்பது இருமுறை வாசிப்பதற்கு சமம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இதை போட்டியாக அறிவித்தேன். எனது நோக்கம், மேலும் பலர் வேதாகமத்தை வாசித்து, தேவனின் வார்த்தையில் ஆழம் பெற வேண்டும் என்பதுதான்.”
அவரது சாதனை பங்குத்தந்தையரையும், மக்களையும் ஊக்குவித்துள்ளது. இதற்காக பங்குச் சபை அவருக்கு ₹10,000 பரிசளித்தது; மேலும், சிவகங்கை மறைமாவட்டத்தின் ஒரியூர் பயணத்தின்போது ஆயர் லூர்து ஆனந்தம் அவரை பாராட்டினார்.