குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!| ஆர்.கே. சாமி | VeritasTamil
பொதுக்காலம் 4ஆம் வாரம் -புதன்
எபிரேயர் 12: 4-7, 11-15
மாற்கு 6: 1-6
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகமானது, ஒழுக்கத்தின் கடினத்தன்மையையும் ஒழுக்கத்தினால் விளையும் நேர்மறையான விளைவுகையும் பற்றி விவரிக்கிறது. இதன் ஆசிரியர், மனிதரின் ஒழுக்கக்கேட்டை இறைவனின் கண்டிக்கும் குணத்தைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறார். அவர், “பிள்ளைகளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் என்று தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும்போது தளர்ந்து போகாதே” என்ற படிப்பிக்கிறார்
ஒழுக்கத்தோடு வாழ்வது பெரும்பாலும் வேதனையாக இருக்கும். ஆனால் அது உண்மையிலேயே, ஒருவரைப் பயிற்றுவிப்பதற்கும், அறிவாளியாகவும் ஆற்றல் மிக்கவராக மாற்றுவதற்கான ஒரு வழியாகும். வழி தவறுபவர்கள் மனம் வருந்தவும் மனம் திரும்பவும், கடவுள் எப்போதம் விரும்பகிறார்.
தவறான வழியில் நடக்கின்ற ஒருவரை இறைவன் கண்டிக்கின்றபோது அவர் மனம்திரும்பி நேர்வழியில் நடப்பதற்கான வாய்ப்பு நிச்சயம் ஏற்படும். ஏனெனில் அவருடைய வார்த்தைக்கு உண்மையாகச் செவிசாய்த்தால் அது பலன் தராமல் வீணாகுவதில்லை..
கடவுளின் மக்களுக்கு ஒழுக்கம்தான் உயரினும் மேலானது. அதற்கு கண்டிப்பு இன்றியமையாதது. இவ்வாசகத்தில் கண்டிப்பு எவ்வளவு அவசியம் என்பதை எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் இறைமக்களுக்கு எடுத்துரைக்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், இயேசு தன் சொந்த ஊருக்கு வந்து, தொழுகைக்கூடத்தில் வழங்கம்போல் கற்பிக்கத் தொடங்குகின்றார். அது ஓர் ஓய்வுநாள். அவருடைய போதனையைக் கேட்ட மாத்திரத்தில் மக்கள் பெரும் வியப்பில் ஆழ்ந்தனர். ஆனாலும், சிறிது நேரத்தில், ‘இவர் தச்சர் அல்லவா! ‘இவர் மரியாவின் மகன்தானே’, தச்சனின் மகன்தானே என்று சற்று ஏளனமாகச் சிந்திக்கிறார்கள். எனவே, அவரை தொடர்ந்து அவருக்குச் செவிசாயக்கத் தயங்குகின்றார்கள்.
தொடக்கத்தில், “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! என்று வியந்தவர்கள், அவரது பின்னணியைப் பற்றி சிந்திக்கிறார்கள். அவர்களால் இயேயேசுவை ஏற்றுக்கொள்ள முடியவால்லை.
நிறைவாக, இயேசு அவர்களிடம், ``சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' என்று விலகிச் சென்றார்.
சிந்தனைக்கு.
நற்செய்தி வாசகத்தில், இயேசு தான் வளர்ந்த ஊரான நாசரேத்துக்கு வந்தார். அது ஓய்வுநாள் என்பதால் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கிறார். தொடக்கத்தில், அவருடைய போதனையைக் கேட்டு, “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! என்று பெரும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்களின் வியப்பு நீடிக்கவில்லை.
யூதாசு எனப்படும் இஸ்காரியோத்துக்குள் சாத்தான் புகுந்ததுபோல (லூக்கா 22:3) இவர்களுக்குள்ளும் சாத்தான புகுந்தான் போலும், உடனே, ‘இவர் தச்சர் அல்லவா! ‘இவர் மரியாவின் மகன்தானே’ என்று அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கினர். இவரா நமக்கு அறிவுரை கூறுவது? இவருக்கு என்ன தகுதி உள்ளது என்று முணுமுணுக்கத் தொடங்கினர்.
அவருடைய சீடர்கள் இயேசுவுடன் அவரது சொந்த ஊருக்கு வருவதில் அதிக உற்சாகமாக இருந்திருக்கலாம். ஆனால் சீடர்களுக்கு இங்கே பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. இயேசுவை ஒரு போதகராகக் காண்பதில் அவருடைய சொந்த ஊர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள் என்று சீடர்கள் நினைத்திருக்காம்.
இன்று நாமும் நன்கு தெரிந்த ஒருவரை விட தொலைதூரத்தில் உள்ள ஒரு அந்நியரைப் போற்றுவது பெரும்பாலும் எளிதானது. ஆனால் நமக்கு நன்கு தெரிந்த ஒருவரைப் பற்றிய நல்ல செய்தியைக் கேட்டால், நாம் எளிதில் பொறாமைக்கு ஆளாகிறோம். உடனே, அவருடைய பின்னணியை ஆராய்ந்து சிறுமைபடுத்த முயற்சிப்போம். தாம் வளந்து ஆளாகிய பங்குக்கே ஒருவர் அருள்பணியாளராக வரும்பொழுது இதே நிலை அவருக்கும் ஏற்படுவதை இன்றும் நாம் பார்க்கிறோம்.
நாம் இன்று பல புனிந்தர்களைப்போற்றிப் புகழ்கிறோம், அவர்களின் முன்மாதிரியில் வாழ முற்படுகிறோம். ஆனால், அவர்களுக்கும் குடும்பம், உற்றார் உறவினர் இருந்தனர். அவர்களின் பின்னணியை ஆராயாமலே புனிதர்கள் மீது பற்று கொள்கிறோம். அவ்வாறே, நம்மைச் சுற்றயுள்ளோர் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். ஒருவரை வெறுத்து ஒதுக்குவது புறவினத்தாருக்கு எளிதாக இருக்கலாம். ஆனால், இயேசுவின் சீடர்களுக்கு அது ஆகாது.
மேலும், பிறர் நம்மை வெறுத்து ஒதுகாமலிருக்க சுய ஒழுக்கம் இன்றியமையாது, திருவள்ளுவர் ஒழுக்கம் பற்றி அறிவுறுத்துகையில்
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். (குறள் 131)
என்றார். இக்குறளுக்கு, ‘ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்’ என்று மு. வரதராசன் ஐயா பொருள் கூறுகிறார்.
ஆகவே, நம்மைச் சுற்றிலும், குறிப்பாக நமக்கு நன்றாகத் தெரிந்தவர்களின் வாழ்வில் கடவுளின் இருப்பைக் கண்டறிய நாம் தொடர்ந்து முயல வேண்டும். வேண்டியவர் வேண்டாதவர் என்று பாகுபாடு காட்டாமல், இறையரசுப் பணியில் கடவுளின் பணியாளர் என்று மதிப்புக் கொடுத்து வாழ முயற்சிப்போம்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, பிறரின் வாழ்வில் உமது மாட்சமிகு உடனிருப்பைக் கண்டறியும் போது, அவர்களின் வாழ்வில் இருந்து வெளிப்படும் உமது அன்பை ஏற்க எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452