இயேசுவில் நமது பற்றுறுதி (trust) தீய ஆவியை அச்சுறுத்தும்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 4ஆம் வாரம் – திங்கள்

எபிரேயர் 11: 32-40
மாற்கு   5: 1-20


இயேசுவில் நமது பற்றுறுதி (trust) தீய ஆவியை அச்சுறுத்தும்!


முதல் வாசகம்.


இயேசுவை ஏற்றுக்கொண்ட  யூதர்களுக்கு (எபிரேயருக்கு)  எழுதிய கடிதத்தில், பழைய ஏற்பாட்டில்   கடவுளில் ஆழ்ந்த  பற்றுக் கொண்ட  மக்களை ஆசிரியர் நினைவு கூர்கிறார். 
நம்பிக்கையினாலேயே இவர்கள் அக்கம் பக்கமுள்ள நாடுகளை வென்றார்கள்; நேர்மையாகச் செயல்பட்டார்கள்; கடவுள் வாக்களித்தவற்றைப் பெற்றார்கள் என்று விவரிக்கிறார்.   குறிப்பாக, கிதியோன் (நீத. 6:13-24)  முதல் சிங்கத்திடமிருந்து தப்பித்த தானியேல் வரை நிகழ்ந்தவற்றை நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் அனுபவித்த  வேதனைகள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும்  நினைவுகூர்ந்து வெளிப்படுத்துகிறார்.
மேலும், அக்காலத்து, நம்பிக்கையாளர்கள் எதிரிகள் தங்களைக் கொடுமைப்படுத்துகிறார்களே, தீயில் போட்டுச் சுட்டெறிகிறார்களே என்று தங்களுடைய நம்பிக்கையிலிருந்து விலகவோ அல்லது பின்வாங்கவோ இல்லை. மாறாக, இறைவன்மீது கொண்ட நம்பிக்கையில் இறுதிவரை நிலைபெயரா வாழ்வு வாழ்ந்தனர்.  இவ்வாறு அவர்கள் இறைவன்மீது கொண்ட ஆழமான நம்பிக்கையால் அவருக்குச் சான்று பகர்ந்தார்கள் என்று இன்று நமக்கு அறிவுறுத்தகிறார்.

நற்செய்தி.

நற்செய்தியில், இயேசு கலிலேயாவுக்கு எதிரே அடுத்தக் கரையில் இருந்த புறவினத்தார்  அதிகம் வசிக்கும் கேரசெனர் என்ற   பகுதிக்கு செல்கிறார். அங்கு தொடக்கத்திலேயே,   தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வருவதைக் கண்டார். இவன் யாருக்கும் தீங்கு இழைக்காமலிருக்க சங்கிலியால் கட்டினாலும் அதனை உடைத்தெறிவான்.
அந்த மனிதருக்கு ஏதாவது உதவிசெய்யவேண்டும், அவரை முன்னைய நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. மாறாக, அவர்கள் அவன்  அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்கள். அவர்களால் அவனை விடுவிக்க வேறொன்றும் செய்ய இயலவில்லை.
அதே மனிதன்  நெருங்கி வந்த இயேசுவைக் கண்டு, ஓடிவந்தான். அப்போது அவனில் இருந்த பேய், அவரைப் பணிந்து, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்'' என்று  உரக்கக் கத்தினது.  இயேசு அவரிடத்தில் வந்து, “தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ” என்றார்.  
அந்த பொல்லாத தீய ஆவிகள் இயேசுவுக்கு அஞ்சி, எங்களைப் பன்றிகளுக்குள்ளே அனுப்பிவிடுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றன. அதற்கொப்ப பன்றிக்கூட்டத்தின் நடுவே தீய ஆவிகளை விரட்டுகிறார் இயேசு.  இந்த நிகழ்விற்குப் பிறகு தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதர் மக்களிடையே ஒருவராக, அறிவுத் தெளிவோடு ஆடையணிந்து  மக்க்ளோடு  இணைந்ததே இதற்கு முக்கியச்  சான்றாக உள்ளது.


சிந்தனைக்கு.

நற்செய்தியில்,   இலேகியோன்  என்ற தீய ஆவி பிடித்தவரைதான் இயேசு அதன் பிடியிலிருந்து விடுவிக்கிறார். அக்காலத்து  உரோமைப் படையில்  6000 படைவீரர்கள் கொண்ட  படைப்பிரிவுக்கு 'இலேகியோன்' என்ற பெயர் இருந்தது.  எனவே, இங்கு  ஏறக்குறைய 6000 பேய்கள் அந்த நபரைப்  பிடித்திருந்ததாக நாம் பொருள் கொள்ளலாம். ஒரு பேய் பிடித்தாலே அது ஆட்டிப் படைக்கும். இவர் மேல் 6000 பேய் என்பதால் அவனுக்கு அசூர பலம் இருந்தது.   அவனை அடக்க முடியாது. அவனது அட்டகாசம் தாங்காமல் மக்கள் அவனை விரட்டியடிக்கவே, அவன் கல்லறை பக்கம் தனித்து இருந்தான்.
இயேசுவைக் கண்ட மாத்திரத்தில் அவன் அல்ல, அவனில் இருந்த அத்தனை பேய்களும் ஆட்டம் கண்டன.   
அங்கே மலைப் பகுதியில் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்த பன்றிகளுக்குள்  அனுப்பிவிடும்” என்று தீய ஆவிகள் அவரை வேண்டின. இயேசு அப்படியே பன்றிக் கூட்டத்திற்குள்  பேய்களை இயேசு துரத்தினார், பன்றிகள் ஒரு குன்றிலிருந்து கடலில் குதித்தன.  
யூதர்கள் மத்தியில் தீய ஆவிகள் கடலில் வாழ்கின்றன என்ற நம்பிக்கை இருந்தது. பன்றிகள் கடலில் குதித்தது இந்த நம்பிக்கைக்குப் பொருத்தமாகவும் இருக்கிறது. ஏனெனில் கடல்தான் அவற்றின் வசிப்பிடம். 
இந்நிகழ்வின் மறுபக்கம் பன்றிகளை வைத்துப் பிழைப்பு நடத்தி வந்தோர் கலங்கினர். இயேசுவின் நடவடிக்கையால் அவர்களுக்கு தொடர்ந்து பெரு நட்டம் ஏற்படக்கூடும் என்று எண்ணி அவர்கள் இயேசுவை,  நகரை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தினர்.  இங்கே, நலம் பெற்ற அந்த தனி மனிதனை விட பன்றிகள் மிகவும் மதிப்புள்ளதாக அவர்களுக்குத் தோன்றியது.
இயேசு, அந்த நபரிடம்,  'உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங்கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்' என்றார் .  ஆம், அவன் கல்லறையிலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டான். 
முன்பு, யாரும் அவன் அருகில் செல்ல விரும்பவில்லை. அவன் ஒரு வன்முறை மனிதனாக இருந்தான்.  
நாமும், தொல்லைகள் தருபவர்கள் என சிலரை ஒதுக்கி வைப்பதுண்டு.   ‘தொல்லைகள்’ என எண்ணி  பெற்றோரையும் எங்கோ ஓரிடத்தில் விட்டு வைத்திருப்போம்.  ஆனால் இந்தக் கதை நமக்குச் சொல்லும் ஒரு விடயம் என்னவென்றால்,      நமக்கு ஏற்படும் நட்டத்தையோ அல்லது தொல்லையையோ பெரிதுப்படுத்தி  உறவுகளை வெறுப்பது மனதிநேயமாகாது.  
நிலைவாழ்வை நோக்கிய நமது பயணத்தில் சிரமங்களை, துன்பங்களை எதிர்கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு நாம் எப்படி நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க முடியும்? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். 
பொதுவாக இயேசு தாம் செய்யும் வல்ல செயல்களுக்கு பின்,   “இதை யாருக்கும் சொல்லவேண்டாம்...” என்றுதான் கட்டளையிடுவார். ஆனால், இன்றைய நற்செய்தியில் அவர் பேய்களிடமிருந்து விடுதலைப் பெற்றவரிடம்  “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங்கொண்டு உமக்குக் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்கின்றார். ஆம்.  இது  புறவினத்தார் அதிகம் வாழும் பகுதி, இங்கேயும் இயேசுவின் நற்செய்தி பரவ வேண்டும்  என்பதற்காக இவ்வாறு தாம் செய்த வல்ல செயல் இந்த ஊர் மக்களுக்குப் பரவ வேண்டும் என்று எதிர்ப்பார்த்து அவ்வாறு கூறினார். 
ஆம், ‘ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு’ என்பதற்கொப்ப இயேசு எங்குச் சென்றாலும் நற்செய்தி அறவிப்பதில் கருத்தாயிருந்தார். 


இறைவேண்டல்.

ஆண்டவரே, எதிர்நோக்குக் கொண்ட  பயணியாக  உள்ள நான் பல சவால்களை எதிர்கொள்கிறேன். நான் எதிர்கொள்ளும் சிரமங்களில் மூழ்கிவிடாமல்,  உமது வாக்குறுதியில் நம்பிக்கை இழக்கமால் உம்மைப் பற்றிக்கொள்ள என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென்.

    

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452