என் வாழ்வால் கிறிஸ்துவை சுட்டிக்காட்டுகிறேனா நான்? | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil
இன்றைய வாசகங்கள்(03.01.2026)
கிறிஸ்து பிறப்பு காலம்
முதல் வாசகம்
மு.வா: 1 யோவா: 2: 29-3: 6
ப.பா: திபா: 98: 1. 3b-4. 5-6
ந.வா: யோவா: 1: 29-34
என் வாழ்வால் கிறிஸ்துவை சுட்டிக்காட்டுகிறேனா நான்?
பலமுறை நாம் இதைச் சிந்தித்திருக்கிறோம். "கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்தவள் "என்ற சொற்களைப் பிரித்து எழுதினால் கிறிஸ்து + அவன், கிறிஸ்து +அவள், எனக்கிடைக்கும்.இவை வெறும் வார்த்தைகள் அல்ல. இங்கே அவன் அல்லது அவள் என்ற மனிதத்தன்மை மேலோங்கி நிற்பதில்லை. மாறாக கிறிஸ்து என்ற தெய்வீகத்தன்மையே மேலோங்கி நிற்கிறது.
ஆம் அன்புக்குரியவர்களே திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவர்களாகிய அதாவது "கிறிஸ்து +அவர்கள் "ஆகிய நாம் எல்லோருமே அவரையே பிரதிபலிக்கக்கூடியவர்களாக, அவரையே பிறருக்கு சுட்டிக்காட்டக் கூடியவர்களாக வாழவேண்டும். அதுதான் நம் வாழ்நாளில் நாம் அடைய வேண்டிய முழுமையான உயர்வான இலக்கு. ஆனால் இன்று நம் வாழ்வு கிறிஸ்துவை பிறருக்குக் காட்டக் கூடியதாய் உள்ளதா? சிந்திக்க வேண்டும் நாம்.
யோவானை யார் என்ற விசாரிக்க வந்தவர்களிடம் தான் மெசியா அல்ல எனவும் மெசியாவின் வருகைக்காக ஆயத்தம் செய்பவன் எனவும் யோவான் அறிவித்த நிகழ்வுக்கு பின் இயேசுவை யோவான் சந்திக்கிறார். அவரைப் பார்த்த உடனே தூயஆவியாரால் வெளிப்படுத்தப் பட்டவராய் "இவரே கடவுளின் செம்மறி "என துணிச்சலாக அனைவரிடமும் சுட்டிக்காட்டுகிறார் அவர். தனக்கு மெசியாவைப் பற்றி தெரியாதிருந்தது எனவும் தூய ஆவி தனக்கு உணர்த்தியதாகவும் கூறி, யோவான் இயேசுவை பகிரங்கமாக துணிச்சலாக தயக்கமின்றி சுட்டிக்காட்டுகிறார்.
அவருடைய வாழ்வும் போதனைகளும் செயல்களும் இதற்கு சான்றாய் அமைந்தது எனலாம்.
ஆக இயேசுவை சுட்டிக்காட்ட நாம் தூய ஆவியால் நிறையப்பெற்றவர்களாய் இருப்பது அவசியம். அத்தூய ஆவி நம்மை கிறிஸ்துவை உலகிற்கு எடுத்துக்காட்டுபவர்களாக மாற்றுவார் என்பதில் ஐயமில்லை.
தொடக்க காலங்களில் கிறிஸ்தவர்கள் செய்கின்ற நற்செயல்களையும், அவர்களின் அன்பான நடத்தையையும், பகிர்தல், மன்னித்தல் போன்ற பண்புகளையும் கொண்டே அவர்களை கிறிஸ்தவர்கள் என அடையாளப்படுத்தி கிறிஸ்துவைக் கண்டுகொண்டது இவ்வுலகம். ஆனால் இன்றோ இந்நிலை மாறிவிட்டது. நமது தேசத் தந்தை காந்தியடிகள் தான் கிறிஸ்துவை அன்பு செய்வதாகவும் கிறிஸ்தவர்களை வெறுப்பதாகவும் கூறியிருக்கிறார்.இது வேதனைக்குரிய நிலை அல்லவா! இதைப்போன்று இன்னும் எத்தனைபேர் நினைத்திருக்கக்கூடும்!
என வே நாம் ஒவ்வொருவருமே மிகக் கவனமாக நம் வாழ்க்கையை ஆவியின் துணையோடு வாழ்ந்து கிறிஸ்துவை சுட்டிக்காட்ட முழுமூச்சாக முயல வேண்டும். கிறிஸ்துவாகவே நாம் மாற வேண்டும். அதற்கான அருளை இறைவனிடம் கேட்போம்.
இறைவேண்டல்
அன்பே உருவான இறைவா! திருமுழுக்கு யோவானைப்போல நாங்களும் கிறிஸ்துவை உலகிற்கு சுட்டிக்காட்டுபவர்களாக வாழ வரமருளும். ஆமென்.