நாம் செவியுள்ளோர்-கேட்போம், செய்படுவோம்! | ஆர்.கே.சாமி | Veritas Tamil

20 செப்டம்பர் 2025
பொதுக்காலம் 24ஆம் வாரம் –சனி
1 திமொத்தேயு 6: 13-16
லூக்கா 8: 4-15
நாம் செவியுள்ளோர்-கேட்போம், செய்படுவோம்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், புனித பவுல், புனித தீமோத்தேயுவிடம், இயேசு திரும்பி வரும் வரை, அனைத்து நம்பிக்கையாளர்களையும் பொறுப்புடன் பாதுகாத்தருள வேண்டும் என்று பணிக்கிறார்.
புனித தீமோத்தேயுவுக்கு எழுதிய இந்தக் கடிதத்தின் இறுதியில், பவுல், ஆண்டவராகிய இயேசுவிடமிருந்து பவுல் அறிந்துகொண்ட போதனைகள் மற்றும் கட்டளைகளுக்கு உண்மையாக இருக்குமாறு திமொத்தேயுவை அவர் வலியுறுத்துகிறார். குறிப்பாக, கடவுளின் மறைபொருளின் இறுதி வெளிப்பாட்டிற்காக மீண்டும் வரவிருக்கும் ஆண்டவராகிய இயேசுவின் நாள்வரை பவுல் பணித்தவாறு யாதொரு குறை சொல்லுக்கும் இடம் தராமல் நலெலொழுக்கத்தோடான பணி வாழ்வுக்கு அழைக்கிறார். கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர் என்ற படிப்பினையை மனதில் கொள்ள வேண்டுகிறார்.
நறசெய்தி.
நற்செய்தியில் இயேசு விதை விதைப்பவர் பற்றிய உவமையைக் கூறுகிறார், அதில் சில நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் மிகுதியாக விளைகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
கடவுளுடைய வார்த்தையின் வல்லமையின் செய்தியைக் கற்பிக்க, இயேசு விதை விதைப்பவர் என்ற தலைப்பிலான ஓர் உவமையைச் சொல்கிறார். இந்த உவமையின் முழு அர்த்தமும் அனைத்து கூட்டத்தினருக்கும் கொடுக்கப்படவில்லை. இந்த உவமையின் விளக்கத்தை இயேசு தம்முடைய சீடர்களிடம் மட்டுமே (இன்று நமக்கு) எடுத்துரைக்கிறார்.
விதை என்பது நல்ல மண்ணில் விதைக்கப்படும்போது ஏராளமான வளர்ச்சியைத் தரும் கடவுளுடைய வார்த்தையாகும். சில சமயங்களில் வெளிப்புற அல்லது உள் கவனச் சிதறல்கள் அல்லது தடைகள் காரணமாக வார்த்தையை முழுமையாகப் பெறத் தயாராக இல்லாத நபர்கள் மீது வார்த்தை விழுகிறபோது அவை முழு பலனைத் தருவதில்லை . கடவுளின் வார்த்தைக்கு உண்மையிலேயே தயாராக இருக்கும் மண் (உள்ளம்) மட்டுமே நூறு மடங்கு பலனைத் தரும் என்கிறார்.
சிந்தனைக்கு.
இனைறய நற்செய்தியை நாம் பல முறை கேட்டிருக்கிறோம். இவ்வாசகப் பகுதியை வழக்கமாக மூன்று பிரிவுகளாகப் பிரந்துப் பார்க்கலாம்.
1. விதைப்பவர் பற்றிய உவமை
2. உவமைகள் கூறப்படுவதன் நோக்கம்,
3. இயேசு உவமைக்குப் பொருள் தருதல்.
விதை விதைத்தவர் வெவ்வேறு நிலப்பகுதிகளுக்குச் சென்று விதைக்வில்லை. ஒரே விதமான விதைதான் ஒரே இடத்திலருந்து விதைக்கப்படுகிறது. இதில் வேறுபடுவது விதை அல்ல, நிலம்தான்.
‘நிலம்’ என்று இயேசு குறிப்பிடுவது- கேட்பவரின் இதயத்தின் நிலை. விதை என்பது அவரது வார்த்தைகளை அல்லது படிப்பினைகள். ஆம், மக்களுக்குக் கூறிய இந்த உவமையின் பொருளை இயேசு தம் சீடர்களுக்கு ஒவ்வொன்றாக விளக்கிக் கூறுகிறார். இறைவனின் வார்த்தைக்கு எல்லாரும் ஒரே மாதிரியான பலனைத் தருவதில்லை.
முதல் வாசகத்தில் பவுல் தீமோத்தேயுவுக்கு (இன்று நமக்கு) கடவுளின் கட்டளையை கறைபடாமல் வாழ்க்கையில் பின்பற்றவும், கிறிஸ்துவின் மறு வருகைக்காக காத்திருக்கவும், கடவுளை மாட்சிபடுத்தவம் கட்டளையிடுகிறார். இது நற்செய்தியை நிறைவு செய்கிறது எனலாம். கடவுளின் வார்த்தையைக் கேட்பது என்பது நமது விருப்பதிற்கு உட்படாமல், அதை உண்மையாக ஏற்று வாழ்வதாகும்.
நாம் கேட்க வேண்டிய கேள்வி, நாம் கேட்கும் வாசிக்கும் இறைவார்த்தை நம் வாழக்கையில் விதையாக எங்கே விழுகிறது? நாம் எந்த "மண்-வகையைச்” சார்ந்தவர்கள்? "பாறை" அல்லது "முட் புதரான" நிலமாக இருந்தால், இன்னும் ஆழமாக வேரூன்ற நாம் என்ன நடவடிக்கைகளை எடுக்க முடியும்? என்று சிந்தித்துச் செயல்பட வேண்டியவர்களாக இன்று நினைவூடுடப்படுகிறோம். முதலில், நம்மில் உள்ள கவனச்சிதறல்களை நீக்க வேண்டும். பேசுவது இறைவன்தான் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து, ஆன்மீக நடைமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும். உலகப் போக்கிலான எண்ணமும் செய்பாடும் நமக்குப் பலன் தாராதவை.
இறை நம்பிக்கையை நெரிக்கும் சோதனைகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதோடு, கவலைகள், ஆசைகள், உலகப்பற்று போன்றவை நம்மை முழுமையாக ஆட்கொள்ளாமலிருக்க ஆன்மீகத்தில் வளர்ச்சிக் காண முற்படுதல் நன்மை பயக்கும்.
கடவுள் ஓய்வதில்லை. அவர் இன்னும் பரவலாக விதைத்துக்கொண்டுதான் இருக்கிறார் என்பதை முதலில் நம்ப வேண்டும். அவர் நிலம் பார்த்து (நல்லவர்-கெட்டவர்) விதைப்பவரும் அல்ல. அவருடைய வார்த்தை ஒருபோதும், வீணாகத் திரும்பாது. நாம் செவிகொடுத்து, உணர்ந்து, அதன்படி செயல்படத் தொடங்கினால் நம்மைபோல சிறந்தவர் யாருமிருக்கமாட்டார்.
ஆகவே, இயேசு கூறியதைப்போல், ‘அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் புரிந்து கொள்வதில்ல.’என்ற மக்களாக நாம் இருந்துவிடக்கூடாது. இறைவார்த்தையைக் கேட்பதோ அல்லது ஆரம்பத்தில் அதை ஏற்றுக்கொள்வதோ மட்டும் போதாது. கனி கொடுக்க, வார்த்தையை தாராள மனப்பான்மையுடனும் நல்ல இதயத்துடனும் படித்து, விடாமுயற்சியுடன் கடைப்பிடிக்க வேண்டும்.
நம் ஆண்டவர் பேசும் "கனி", ஆவியின் கனிகளுடன் அடையாளம் காணப்படலாம்: தர்மம், மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, தயவு, நன்மை, பொறுமை, சாந்தம், நம்பிக்கை, அடக்கம், சுயக்கட்டுப்பாடு மற்றும் கற்பு போன்றவையாகும். இவற்றுக்கான நம் முயற்சி திருவினையாக்கும்.
இறைவேண்டல்.
அன்புள்ள ஆண்டவரே, வாழ்க்கையின் கவலைகள் மற்றும் ஏமாற்றுகளிலிருந்து என்னை விடுவித்தருளும், அப்போதுதான் உமது தூய வார்த்தையை நான் தெளிவாகக் கேட்க முடியும் என்பதோடு, அந்த வார்த்தையை என் இதயத்தில் வளர்க்க முடியும். ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
