தூத்துக்குடியில் நடைபெற்ற தேசிய போதைத் தடுப்பு விழிப்புணர்வு பேரணி | Veritas Tamil

தூத்துக்குடி மறைமாவட்டம் பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை போதைநோய் நலப்பணிக்குழு சார்பாக அக்டோபர் இரண்டாம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியானது புனித மரியன்னை தன்னாட்சி கல்லூரி முன்பாக தொடங்கி, பரிசுத்த பனிமய மாதா பேராலயம் வரை சென்றடைந்தது. அதைத்தொடர்ந்து, விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்த பேரணியை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர். மதன் ஐ.பி.எஸ். தொடங்கி வைத்தார். காந்திய மக்கள் இயக்கத் தலைவர் வெள்ளப்பட்டி ஜேசுதாசன் முன்னிலை வகித்தார்.புனித மரியன்னை கல்லூரி முதல்வர் முனைவர். அருட்சகோதரி ஜெஸி பெர்னான்டோ விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றினார்.

பனிமய மாதா கொடிமரம் முன்பாக தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோனி, மக்களிடம் மது மற்றும் போதைப் பொருட்களை குறித்து அறிவுரை வழங்கி பேரணிக்கு துனை நின்ற அனைவரையுபம் வாழ்த்தினார். இந்த நிகழ்வில், பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை அருட்பணி ஸ்டார்வின், அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 

இந்தப் பேரணியில் பள்ளிகள் கல்லூரிகளில் செயல்படும் Anti Drug Cell, SMM, NCC, NSS,  AICUF, FSS மாணவர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மறைமாவட்ட போதைநோய் நலப்பணிக்குழுவோடு இணைந்து இளையோர் இயக்கம், தூத்துக்குடி பல்நோக்கு சமூக சேவை சங்கம் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். 

மேலும், பக்த சபைகள் தன்னார்வ அமைப்புகள் கலந்து கொண்டனர்.பேரணி நிறைவில் பனிமய மாதா பேராலயத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் தலைமையில், குடி நோயிலிருந்து விடுதலை பெற்றவர்களுக்காக நன்றி செலுத்தியும், இன்னும் குடியினால் பாதிக்கப்படும் குடும்பங்கள் சிறப்பாக இன்றைய மற்றும் வருங்கால தலைமுறைகளான மாணவர்கள் இளைஞர்களுக்கான பாதுகாப்பு வேண்டி, வேண்டுதல் திருப்பலி நடைபெற்றது.  திருப்பலி நிறைவில் அருள்பணி பிரான்சிஸ் அவர்களின் மது போதை பொருள்கள் பற்றிய இறையியல் ஆய்வு கட்டுரையை புத்தகமாக மதுவிலக்கு சபையின்ருக்காகவும் மற்றும் எல்லோருக்காகவும் பயன்படுத்திக்கொள்ள மேதகு ஆயரிடம் ஒப்படைப்பு செய்தார்கள். திருப்பலியை தொடர்ந்து,  தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு சபையின்ருக்கான கருத்தரங்கம் பேராலய வளாகத்தில் வைத்து நடைபெற்றது.