ஆண்டவரின் வெளிப்பாடு நம்மை பணிக்கு அழைக்கும் வெளிப்பாடு! | ஆர்கே. சாமி | Veritas Tamil

16 ஜூலை 2025                                                                                                                  
பொதுக்காலம் 15 ஆம் வாரம் –புதன்
விடுதலை பயணம 3: 1-6, 9-12
மத்தேயு  1: 25-27 
 

ஆண்டவரின் வெளிப்பாடு நம்மை பணிக்கு அழைக்கும் வெளிப்பாடு!

முதல் வாசகம்.
 
ஓர் எகிப்தியனைக் கொன்ற  மோசே அங்கிருந்துத் தப்பி ஓடி, மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். ஒரு நாள், பாலைநிலத்தில் தன் மந்தையை மேய்த்துக்கொண்டு ஓரேபு மலை பக்கம் வந்தபோது,   எரியும் ஒரு  புதரில் ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றுகிறார். இதில் குறிப்பிடதக்கது என்னவெனில், முட்புதர் நெருப்பால் எரிந்துகொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை. 

அந்த இடம் தூய்மை என்பதால் மோசே தனது செருப்புகளைக் கழற்றச் சொல்லப்படுகிறார்.  அத்தருணத்தில், கடவுள் அவரிடம், அவர், “உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே” என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார். 

அப்போது, இதோ! எகிப்பில் இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது. திரும்பிச் சென்று கடவுளின் மக்களான  இஸ்ரயேலரை  விடுவிக்கும்படி மோசே கட்டளையிடப்படுகிறார். வெளிப்படையாக, மோசே ஒரு கொலைகாரன் என்பதால், எகித்திற்குத் திரும்புவதற்கு அவர் தயங்குகிறார், 

நற்செய்தி.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில்,   கடவுள் தன்னை   ஞானிகட்கும் அறிஞர்கட்கும் மறைத்து குழந்தைகளுக்கு  வெளிப்படுத்தினதற்காக ஆண்டவர் இயேசு தந்தைக் கடவுளைப் போற்றிப் புகழ்கின்றார்.

சிந்தனைக்கு.

நான் வாசகங்களைப் பற்றி சிந்திக்கும்போது, கடவுளைப் பற்றிய வெளிப்பாடு என்பது கடவுளை அறிவுபூர்வமாகப் புரிந்துகொள்வதை விட அல்லது தெய்வீகத் திட்டத்தைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதை விட மேலானது, உயர்வானது என்பதை உணர்கிறேன்.

மனிதர்கள் தம்முடன்  உறவு கொண்டு வாழ   வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். ஆனாலும், மனித இயல்பில் வரையறுக்கப்பட்டவர்களாக இருப்பதால், கடவுளோடு உடனான உறவை நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. மேலும், நாம் பாவமுள்ளவர்களாக இருப்பதால், அதை ஏற்றுக்கொள்ளத் தகுதியற்றவர்களாக கருதுகிறோம். ஆனால், ஆடு மேய்க்கும் ஒருவரான, கொலைக்காரரான   மோசேவை கடவுள் அழைத்தாரெனில் நமது தகுதி குறித்து அவர் நன்கு அறிவார் என்பது வெள்ளிடைமலை. 

இன்றைய நற்செய்தியில், இயேசு, ஞானிகளுக்கும் கற்றவர்களுக்கும் அல்ல, தம்முடைய சீடர்களுக்கோ அல்லது வெறும் குழந்தைகளுக்கோ கடவுளின் ஞானத்தையும் அறிவையும் வெளிப்படுத்தியதற்காக விண்ணகத் தந்தைக்கு நன்றி கூறுகிறார்.

கல்வியறிவு இல்லாதவர்கள் அல்லது 'குழந்தை போன்ற' மக்களுக்கு சட்டம் பற்றிய முறையான கல்வி அல்லது பயிற்சி இல்லை.  இந்த சூழலில் "குழந்தைகள்" என்பது வழிகாட்டுதலுக்காக தங்கள் பெற்றோரை முழுமையாக நம்பியிருப்பவர்களைக் குறிக்கிறது.   இந்த சிறு குழந்தைகளில்: இயேசுவின் சீடர்கள், ஏழைகள், வரி வசூலிப்பவர்கள்,   பாவிகள்  போன்வர்கள் அடங்குவர். இவர்கள் எளியவர்கள் எனபதோடு உண்மைக்கு தலை வணங்குபவர்கள்.

நாம் விண்ணகத் தந்தைநின் பிள்ளைகளாகவும் இயேசுவின் சொந்த சகோதரிகளாகவும் சகோதரர்களாகவும் மாறலாம் என்று இயேசு நமக்குச் சொல்கிறார். இதற்கு முதற்படி, நமக்கு வெளிப்படுத்தப்படுவதை நாம் ஏற்றுக்கொள்வதாகும். நாம் கடவுளின் குடும்பத்தின் ஒரு பகுதியாக மாறவும், கடவுளின் தெய்வீக வாழ்க்கையில் பங்கு வகிக்கவும் உரிமை பெற்றுள்ளோம் என்று இயேசு உணர்த்துகிறார். நம்மில் பலர் இந்த உரிமை வாழ்வை அறியாமல் வாழ்கிறொம். புனித பவுல்,  ‘அன்பர்களே, நீங்கள் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அந்த உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்களுக்கு வாய்ப்பாய் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள’ (கலா 5:13) என்று அழைப்புவிடுக்கிறார். 

‘மோசேயுடன் நான் இருந்ததுபோல் உன்னோடும் நான் இருப்பேன். உன்னைக் கைநெகிழ மாட்டேன்; கைவிடவும் மாட்டேன்’ (யோசு 1:5) என்று ஆண்டவர் யோசுவாவைப் பார்த்துக் கூறியதுபோல  இன்று நம்மைப் பார்த்தும் கூறுகிறார். ஆகவே, மோசேவைப்போல துணிவுடன் திரும்புவோம் பணி வாழ்வுக்கு. 

இறைவேண்டல்.

ஆண்டவரே, பாவம் உலகிற்குள் நுழைந்த பிறகும்  பாவத்தின் மூலம் உம்மை இழந்த வாழ்க்கைக்கு   உமது தொடர்ச்சியான சுய வெளிப்பாட்டின் மூலம் எனக்கு நம்பிக்கையையும் மன்னிப்பையும் அளிக்கிறீர். உமக்கு எனது நன்றி. ஆமென்


  
      
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452