எதிர்நோக்கின் திருப்பயணிகள்: இயேசுவின் புரட்சிக்கு உட்பட்டவர்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் இரண்டாம் வாரம் - திங்கள்
எபிரேயர் 5: 1-10                                                                                  
மாற்கு 2: 18-22

 
எதிர்நோக்கின் திருப்பயணிகள்: இயேசுவின் புரட்சிக்கு உட்பட்டவர்!


முதல் வாசகம்.


எபிரேயர்களுக்கான இக்கடிதம் யூத கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்டது என்பதை அறிவோம்..  இவர்கள் இயேசுவை மீட்பராக (மெசியாவாக) ஏற்றவர்கள். ஆனாலும்  இயேசுவுக்கும்  மற்றும் யூத தலைமை குருக்களுக்குமிடையலான ஒற்றுமை மற்றும் வேறுபாடுகளை அறிய வேண்டிய அவசியம் இருந்தபடியால், ஆசிரியர் அவற்றையொட்டி விவரிக்கிறார்.

 மனிதர்கள் அனுபவிக்கும் எல்லா வேதனைகளையும் சோதனைகளையும் இயேசு அனுபவித்தார்.  ஆனாலும்,  யூத குருக்களைவிட  இயேசு மாறுபட்டவர். இயேசு தனது இறைதந்தையின் விருப்பத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார்,   துன்பத்தையும் மரணத்தையும் அனுபவிக்கும் அளவிற்கு அவர் கீழப்படிந்தார் என்று ஆசிரியர் இயேசுவை வேறுபடுத்திக் காட்டுகிறார். யூதத் தலைமை குருக்களோ அவ்வாறில்லை. 

  யூதத் தலைமை குருக்கள் மனந்திரும்பிய மக்களுக்கும், அவர்களது சொந்தப் பாவங்களுக்கும் கழுவாயாகப் பலி செலுத்தினர். பாவம் அற்ற இயேசு எல்லா மக்களுக்கும் என்றுமுள மீட்பிற்கு வழியாக தன்னையே பலியாகக் கையளித்தார் என்று  யூதத் தலைமை குருக்களுக்கும் இயேசுவுக்குமிடையே நிலவும் குருத்துவத்தின் வேறுபாட்டை எடுத்துரைக்கிறார் இக்கடிதத்தின் ஆசிரியர்.

யூதக் குருக்ளின் குருத்துவம் இடையில் கடவுளால் ஆரோனின் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. இயேசு கொண்ட குருத்துவமோ, என்றுமுள ‘மெல்கிசதேக்கின்’ வழுமுறையில்  வந்தது. இயேசுவின் குருத்துவம் என்றுமுளது. ஆம், இயேசுவோ “மெல்கிசதேக்கின் முறைப்படி என்றென்றும் குரு.”  அவர் நிறைவுள்ளவராகி, ‘தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார் என்று இயேசுவின் குருத்துவத்தை வேறுபடுத்தி, உயர்த்திக் காட்டப்படுகிறார்.


நற்செய்தி.


இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு  யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, 'நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?' என்றதொரு கேள்வியை இயேசுவை நோக்கிக் கேட்டனர்.

இக்கேள்விக்கு இயேசு, நேரடியாக பதில் கூறாமல்,  உருவகமாக நடைமுறையில் உள்ள ‘மணமகன்’ என்ற பதத்தைக் கொண்டு பதில் அளிக்கிறார். ‘மணமகன்’ அதாவது ‘மாப்பிள்ளை’ உடனிருக்கும்போது அவரைச் சார்ந்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பர். அவர்களில்  துக்கமும் துயரமும் வெளிப்படாது.  விருந்து கொண்டாடி மகிழ்ந்திருப்பர். மணமகன் உடன் இருக்கும் போது நோன்பு இருப்பது தேவையற்ற ஒன்று.

இயேசு இங்கே, தன்னை மணமகனாக உருவகப்படுத்துகிறார். எனவே, அவரது சீடர்கள் மகிழ்ச்சிக்குரியவர்கள்என்றும், நோன்பு இருத்தல் அவசியமற்றது என்றும் விவரிக்கிறார்.  மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள் என்று எடுத்துரைக்கிறார்.

இந்த உண்மையை மேலும் விளக்கிட யூதர்களின் பயனபாட்டில் உள்ள  இரு பொருள்களைப் பயன்படுத்துகிறார்.  அவை, ஆடை மற்றும் தோல் பை. இவற்றைக்கொண்டு கீழக்ண்டவாறு விவரிக்கிறார்.

1.    எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்தப் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும். 

2.    பழைய தோல் பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும்.  


 
சிந்தனைக்கு.


பழையது இல்லாமல் புதியது இல்லை. ஆனாலும், பழையது கழிய வேண்டும், புதியது புக வேண்டும். இது காலத்தின் கட்டாயம். நாமும் பல தருணங்களில் அக்கால யூதர்களைப் போல், பழையனவற்றைப் உறுதியாகப் பற்றிக்கொண்டு,  புதியனவற்றை ஏற்க தயங்குகிறோம். நம் கடவுள் வாழும் கடவுள், அவர் தரும்   புதுமைக்கு நாம் மனம் திறந்திருக்க வேண்டும்.  

ஆம், கடவுள் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்பது உண்மைதான்.  ஆனால் கடவுள் உடனான நமது புரிதலும் உறவும் காலத்திற்கு ஏற்ப  புதிய கண்ணோட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இயேசுவும், கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை’ (பிலி 2:6) மண்ணகம் வந்தார். 

ஒரு காலத்தில் நாம் இறைவார்த்தை நன்கு அறியாதவர்கள். ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை திருப்பலிக்கு நமது பெற்றோர் சென்று வருவர். இன்று அந்நிலை இல்லை. இன்று நம் கைகளில் விவலியம் இருக்கிறது. இன்றை நமது மறை புரிதல் வேறுபட்டது சற்று ஆழமானது. எனவே, கடவுளுடனான  நமது உறவு, இன்று வேறு.

நாம் கிறிஸ்துவின் சீடர்களாகப் புதுப்பிக்கப்பட்ட ஆற்றல்களுடன் புதயனவற்றை நாடி முன்னேற வேண்டும். நாம் எதிர்நோக்குக் கொண்ட திருப்பயணிகள். நமது எதிர்நோக்கு புதயனவற்றை ஏற்கும் சிந்தனை மற்றும் செயலுக்கு உட்பட்டது. 

நற்செய்தியில்  இயேசு கூறினதுபோல, பழயை தோற்பையில் புதிய திராட்சை மதுவை ஊற்றுவதால் நன்மை கிடையாது. கிழிந்த பழைய சட்டையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதாலும் பயனில்லை. 

கடவுள் எப்படி காலம் நிறைவேறிய போது அவர் ஏற்படுத்திய ஆரோனுக்கு வழுங்கிய  குருத்துவத்தை தம் ஒரே மகனின் என்றுமுள குருத்துவமாக மாற்றினாரோ, அவ்வாறே நாமும் மாற வேண்டும். 

சமாரியர்களிடம் உறவு கூடாது என்று யூதர்கள் அர்களை வெறுத்து, ஒதுங்கி வாழ்ந்தனர். இயேசு அவர்களின் பழைய சிந்தனையைத் தகர்த்தார். எருசலேம் ஆலயத்தைச் சீர் செய்துப் புதிய சிந்தனையைப் பதியச் செய்தார். இவ்வாறு பல மாற்றங்களுக்கு வழிவகுத்த புரட்சியாளர், சிந்தனையாளர் இயேசு. அவரின் சீடர்கள் நாம். 

புதிதாக திருமணம் முடித்த ஒருவனிடம்  ஒருவர் ‘அண்ணே உங்க மனைவி என்ன ஜாதி என்று கேட்டான்? அதற்கு பதிலளித்த அந்த புதுமாப்பிள்ளை அடேய் அவள் பெண் ஜாதி நான் ஆண் ஜாதி. ஆகவே இப்போ அவள் என் ‘பொஞ்சாதி’ என்று பதில் கூறி,  உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போ என்று பதிலளித்தாராம்.  இது புதிய சிந்தனை. ஏற்போர் நல்ல சீடராக இருப்பர்.


இறைவேண்டல்.


ஆண்டவரே, நீர் ஏற்றி வைத்த புரட்சி தீ என்னிலும் பற்றி எரியச் செய்வீராக. நீர்  புதுப்பிக்கும்  உலகில் உமது அழைப்புக்கு ஏற்ப நான் வாழ்ந்திடச் செய்வீராக.  ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452