அன்பே சீடத்துவத்தின் ஆணிவேர்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
திருக்காட்சி விழாவுக்குப் பின் செவ்வாய்
1 யோவான் 4: 7-10
மாற்கு 6: 34-44
அன்பே சீடத்துவத்தின் ஆணிவேர்!
முதல் வாசகம்
அன்பு என்பது கடவுளின் முதன்மையான பண்புகளில் ஒன்றாகும். உண்மையில், கடவுளை அன்போடும், அன்பை கடவுளோடும் ஒப்பிடலாம். அதைத்தான் யோவான் முதல் வாசகத்தில் விவரிக்கிறார்.
யோவான், அன்பு கடவுளிடமிருந்து வருகிறது, ஏனெனில் கடவுள் அன்பாயிருக்கிறார் என்கிறார். அன்பு மிகவும் சக்தி வாய்ந்தது, அது கடவுளில் மட்டும் இருக்க முடியாது, அது அனைத்து படைப்புகளுக்கும் பாய்கிறது என்பதோடு, அன்பின் பிறப்பிடம் கடவுள் என்பதை வலியுறுத்துகிறார். அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள் என்கிறார்.
அத்துடன் மற்றொரு ஆழமான இறையியலையும் இவ்வாசகத்தில் பதிவுச் செய்கிறார். ஆம், நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார் என்றும், இதன் வழியாகவே, கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது என்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், இயேசு கலிலேயா கடலோரப் பகுதியில் தம்மைச் சூழ்ந்திருக்கும் பெரும் கூட்டத்தைப் பார்க்கிறார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால், அவர்கள் மீது இரக்கம் கொண்டவராக அவரது இதயம் அவர்களிடம் செல்கிறது. அவர்களுக்கு ஆன்மீக உணவு மட்டுமல்ல, உடல் ஊட்டமும் தேவைப்படுவதை அவர் காண்கிறார். தம்முடைய வார்த்தைகளால் அவர்களுக்கு உணவளித்து, மிக நீண்ட நேரம் அவர்களுக்குக் கற்பிக்கிறார்.
அந்த பாலைநிலத்தில் அவ்வளவு பெரிய கூட்டத்திற்கு உணவு அளிப்பது இயலாது என்று சீடர் அறிந்தனர். எனவே, இயேசுவிடம் வந்து, சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக் கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பிவிடும்” என்றனர். அவர்களின் எதிர்மறையான எண்ணத்தைப் போக்க, அங்கேயே இயேசு ஓர் அற்புதம் செய்ய முனைகிறார்.
ஐந்து ரொட்டிகள் மற்றும் இரண்டு மீன்களுடன், அவர் கூடியிருந்த கூட்டத்திற்கு உணவளிக்கிறார். கடவுள், அவரது தந்தை என்றும், அவர், ஒரு தந்தையாக மக்களைக் கவனித்து, அன்பு செய்கிறார் என்றும் இயேசு வெளிப்படுத்துகிறார். அவரே வாழ்வுதரும் உணவு என்பதை உணரச் செய்கிறார். இதில் மேலும் கவனிக்கப்படவேண்டியது, அனைவரும் வயிறார உண்டனர். பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர் என்பதாகும்.
சிந்தனைக்கு.
நற்செய்தியில் இயேசு அவரோடு இருந்த மக்கள் மீது இரக்கம் காட்டினார். இயேசு தம்முடைய உள்ளார்ந்த அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்த உந்துதல் பெற்றார். முதல் வாசகத்தில் யோவான் வெளிப்படுத்தியதைப்போல, ‘கடவுள் அன்பாக உள்ளார்’ என்பதை இயேசு இங்கே உறுதிப்படுத்துகிறார். ஆனாலும், கடவுளை அன்பாகப் புரிந்துகொள்வதில் நாம் வரையறுக்கப்பட்டிருக்கிறோம். நமது மனிதத் இயல்பில், கடவுளின் அன்பின் ஆழத்தை புரிந்துகொள்ள இயலாது. கல்வாரியில்தான் அவருடைய அன்பை நாம் அறிந்துரண முடிந்தது. அங்கே, அவர் தந்தையின் மீது கொண்ட அன்பையும் உலக மக்கள் மீது கொண்ட அன்பையும் வெளிப்படுத்தினார்.
நாம் கொண்ட அன்பென்னும் கொடையை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போதுதான் நாம் கடவுளை அன்பு செய்கிறோம் என்பதை வெளிப்படுத்த முடியும். இரக்கம் என்பது என்ன? என்று நாம் உணராவிடில் அன்பு ஒருபோதும் நம்மில் வெளிப்படாது. இரக்கப்படுவதன் மூலம்தான் நம்மால் பிறரின் துன்பத்தைக் காணமுடியும். நல்ல சமாரித்தனில் வெளிப்பட்ட இரக்கம்தான், அவரது அன்பை வெளிப்படுத்தியது. இரக்கமும் அன்பும் பொருள்கள் அல்ல, பணம் செலவழித்து வாங்கி பிறருக்குக் கொடுக்க. அவை கடவுள் நமக்களித்த இலவசக் கொடைகள். எனவே, நம்மில் எவரும் அன்பு செலுத்தவோ, இரக்கம் காட்டவோ ‘எனக்கு வசதி இல்லை என்று கூற இயலாது. அப்படி ஒருவர் கூறினால், அவர் பெரும் ஏமாற்றுப் பேர்வழியாவார்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். (குறள் 71)
அன்பிற்கு பிறரிடம் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாதவாரு அடைத்துக்கொள்ளும் தாழ் அல்லது கதவு கிடையாது என்றும், அன்புடையவர்கள் பிறர் துன்பப்படுவதை கண்டு சிந்தும் கண்ணீர் துளியே அவரகள் கொண்டுள்ள அன்பைப் உலகிற்குப் பறைசாற்றிவிடும் என்கிறார் திருவள்ளுவர்.
நற்செய்தியில், ‘நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்’ என்று இயேசு கூறுவதால், பசியோடு இருப்பவருக்கு உணவளிப்பது நமது கடமை என்பதை மறந்துவிட கூடாது. பசித்தோருக்கு உணவளிப்பது அன்பின் மிக உயர்ந்த வெளிப்பாடு. உண்மையில் உலகில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்தவரும் இயேசுவின் இந்த படிப்பினையை கருத்தில் கொண்டு செயல்பட்டால், உலகில் ஒருவர் கூட பசியால் மடியமாட்டார். "தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்று அன்று பாரதி முழங்கினார்.
இயேசுவின் அன்பும், தந்தையின் அன்பும் நம்மீது பொழியப்படுவதற்குக் காரணம், நாம் அவர்களின் அன்புக்கு தகுதியுடையவர்கள் என்பதாலோ, உரிமை உடையவர்கள் என்பதாலோ அல்ல. மாறாக கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகிறது (உரோ 9:16) எனும் பவுல் அடிகளின் கூற்றை மனதில் கொண்டு வாழ்வோம்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, ஒவ்வொரு நாளும் நீர் என் மீது கொண்டிருக்கும் மகத்தான அன்பை உணரவும், அந்த அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் எனக்கு உதவுவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452